வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் ‘பஃபூன்’அதிரடியான அரசியல் ஆக்ஷன் படமாகும். அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் நாளை (செப்டம்பர் 23) வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பெற்றுள்ளது.
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ போன்ற படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் வீரப்பன், ‘பஃபூன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
‘பஃபூன்’ படத்தை பற்றி பேசிய அசோக் வீரப்பன், இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்றும், மேடை நாடகங்களில் வரும் பஃபூனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒரு பஃபூன் வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் முக்கிய கரு. சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தலைப்பைப் பார்த்து இது ஒரு நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், ‘பஃபூன்’ ஒரு அதிரடி அரசியல் கதைக்களம் கொண்ட படமாக இருக்கும்,” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, ராமேஸ்வரம், கொல்லம் மற்றும் சென்னையை சுற்றி நடந்ததாகவும் அவர் கூறினார்.
ஆந்தகுடி இளையராஜா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அனகா நாயகியாக நடிக்கிறார். 50 வருட மேடை நாடக அனுபவம் கொண்ட மதுரை எம்.பி. விஸ்வநாதன் இப்படத்தில் வைபவின் அப்பாவாக நடிக்கிறார்.
பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர, ஆடுகளம் நரேன், தமிழரசன், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணனின் இசை படத்தின் மிகப்பெரிய பலம் என்றார் அசோக். “இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அசோக் வீரப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பஃபூன்’ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. சக்திவேலனின் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இப்படத்தை தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறது.