பல ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் பாண்டிசேரியில் ஊரை விட்டு வெளியே உள்ள பிரெஞ்சு கேஸில் என்னும் பங்களாவில் சூதாட்டதொழில் செய்யும் குடும்பம், அங்கு நடக்கும் போட்டியில் தோல்வி அடைபவர்களை கொலை செய்கின்றார்கள் . இந்த ஆபத்தான விளையாட்டை நடத்தும் குடும்பத்தை அந்த ஊரின் மக்களே கொல்கிறார்கள். ஆனால் அதன் பின் அவர்கள் அங்கேயே பேய்களாக வலம் வர ஆரம்பிக்கிறார்கள்

தற்போதைய காலகட்டத்தில் ,சிக்கலான சூழ்நிலையில் சிக்கித் தவித்து கொண்டு இருக்கும் தனது காதலியை (சுரபி) காப்பாற்றத் துடிக்கும் ஈவென்ட் மேனேஜரான சதீஷ் (சந்தானம்) தனக்கு கிடைக்கும் பெரிய தொகையைக் கண்டுபிடித்து பண சிக்கலைத் தீர்க்கிறார்,ஆனால் அது ஒரு தொழிலதிபரிடமிருந்து திருடப்பட்டது என்பதை பின்னர்தான் அவர் உணர்ந்து கொள்கிறார், தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள் அவரை பிரெஞ்சு பேய் பங்களாவுக்கு அழைத்துச் செல்கின்றன,அங்கு அவரும் அவரது குழுவினரும் பேய்களோடு கேம் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்படி அவர்கள் பேய்களோடு ஆடிய விளையாட்டில் வெற்றி பெற்றார்களா? என்பதை நகைச்சுவை ததும்ப கூறி இருப்பதே இந்த ‘டிடி ரிட்டன்ஸ்’ (DD Returns) படத்தின் மீதி கதை ஆகும்.

கதை நாயகன் ஈவென்ட் மேனேஜராக சதீஷ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தானம் தனக்கே உரித்தான பாணியில் வெளிப்படுத்தும் ‘பன்ச்’களினால் நகைச்சுவையில் அதகளம் செய்து, திரையரங்கில் சிரிப்பு வெடிகளை சிதறடிக்கிறார்.இதுபோல காமெடியுடன் கலந்த கதையின் நாயகனாய் அவர் தொடர்ந்து நடிப்பது அவருக்கு மேலும் வெற்றிகளை தரும், சுரபியும் தன் பங்குக்கு குறைவின்றி நடித்துள்ளார் ,மேலும் குறிப்பாக ‘லொள்ளு சபா’ மாறன் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, சேது, ரெடின் கிங்ஸ்லி, முனீஷ் காந்த் ஆகியோரும் நகைச்சுவையில் தூள் கிளப்பியுள்ளார்கள்,பல படங்களில் நாயகர்களுடன் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் ரணகளம் செய்த பெப்சி விஜயன் இந்த படத்தில் உச்சபட்ச காட்சியாக ஆக “டேய்டேய்டேய்டே” என்ற உச்சரிப்பில் கலக்கியுள்ளார், பேய்களாக வலம் வரும் கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரதீப் ராவத், மஸூம் சங்கர் போன்றோரும் நன்கு நடித்துள்ளார்கள்

நிறைய நகைச்சுவை நடிகர்கள் பட்டாளத்துடன் பேய் கான்செப்டில், அசத்தலான திரைக்கதையுடன் காமெடி விருந்து படைத்துள்ளார் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த்.

இயக்குநரின் பணிக்கு பக்க பலமாய் தீபக்குமார் பதியின் ஒளிப்பதிவும், என்.பி.ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் துணை நின்றுள்ளது , ஆஃப்ரோவின் இசையும் படத்துக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
ஹாரர் காமெடி பாணியில் பயணிக்கும் இந்த டிடி ரிட்டன்ஸை பார்க்க வரும் அனைத்து ரசிகர்களுக்கும் முழு நீள அதிரடி நகைச்சுவை விருந்து காத்துக்கொண்டுள்ளது .
