ஆரம்ப காட்சியிலேயே பதற்றத்தை உருவாக்கி இறுதி வரை, அந்த மர்மத்தை கைவிடாமல் பிடித்துக் கொண்டு செல்ல முயலும் இந்த டார்க் படம் , திகிலை மட்டுமல்ல… மனதையும் குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு உளவியல் மர்ம பாணி திரைப்பதிவு ! ,

சென்னையில் உள்ள ஒரு வீட்டில், வீட்டின் உரிமையாளரான கே.பாக்யராஜின் வாடகைதாரர்களாக வசிக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்கிறார். அந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டை யாரும் வாடகைக்கு எடுக்க முன்வரவில்லை.
அந்த வீட்டின் பின்னணியை அறிந்திருந்தும் குறைந்த வாடகை என்பதற்காக, அங்கு குடியேறுகிறார் நாயகன் அஜய் கார்த்திக். ஆரம்பத்தில் அனைத்தும் இயல்பாக சென்றாலும், சில நாட்களிலேயே அவரை சுற்றி அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் தன்னைத்தானே தாக்கிக் கொண்டு அவரும் உயிரிழக்கிறார். அதே நேரத்தில் வீட்டு உரிமையாளரான கே.பாக்யராஜும் மர்மமான முறையில் இறந்து போகிறார்.
இந்த வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரி நட்டி, சம்பவ இடத்தில் சடலங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது, இறந்து கிடந்த அஜய் கார்த்திக் திடீரென உயிர்பெற்று எழுந்து, அவரை எச்சரித்துவிட்டு மீண்டும் விழுகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும், அந்த சம்பவம் நட்டியின் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது.தனக்குத் தெரியாத ஒருவரால் எப்படி தனது பெயரை கூற முடியும் ?அந்த வீட்டில் உண்மையில் என்னதான் நடந்தது? அஜய் கார்த்திக் எதிர்கொண்ட அமானுஷ்ய அனுபவங்களுக்கு என்ன பின்னணி ? பல ஆண்டுகளாக தொடரும் மர்ம மரணங்களின் உண்மை என்ன? என்ற பல கேள்விகளுக்கான பதிலை சொல்லுகிறது ‘டார்க்’ படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்துள்ள அஜய் கார்த்திக், தனது கதாபாத்திரத்தின் பயம், குழப்பம் மற்றும் மனநிலையின் மாற்றங்களை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தேவையான இடங்களில் மட்டுமே உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையை சேர்த்துள்ளார்.
வீட்டு உரிமையாளராக வரும் கே.பாக்யராஜ், தனது அனுபவமான நடிப்பால் கதைக்கு கூடுதல் வலு சேர்க்கிறார். விசாரணை அதிகாரியாக நடித்துள்ள நட்டி, தனது சிறப்பான நடிப்பின் மூலம் திரைக்கதையை முன்னோக்கி நகர்த்துகிறார். மேலும் அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன் போன்ற பிற நடிகர்களும் தங்களுக்கான பங்களிப்பை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
திகில் திரைப்படங்களுக்கு மிக முக்கியமான இரண்டு அம்சங்கள் ஒளிப்பதிவும், பின்னணி இசையும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, இருள், நிழல் மற்றும் கேமரா கோணங்களை சிறப்பாக பயன்படுத்தி காட்சிகளுக்கு தேவையான பதற்றத்தை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமும் மர்ம உணர்வை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனு ரமேஷின் பின்னணி இசை, திரையில் நகரும் ஒவ்வொரு காட்சிக்கும் தேவையான பதட்டத்தை ஏற்படுத்தி, திகில் அனுபவத்தை மேலும் உயர்த்துகிறது. பல இடங்களில் இசையே காட்சிகளின் உணர்வை முழுமையாக சுமந்து செல்கிறது.
உளவியல் திரில்லர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து, விறுவிறுப்பை குறைக்காமல், திரைக்கதையை நகர்த்தியிருக்கும் இயக்குநர் கல்யாண் கே. ஜெகன், ஆரம்பம் முதல் இறுதி வரை மர்மத்தை உடைக்காமல் ரசிகர்களை ஈர்க்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். கலை இயக்குநர் சண்முகராஜாவின் கலை வடிவமைப்பும், படத்தொகுப்பாளர் கதிரேஷ் அழகேசனின் நேர்த்தியான படத்தொகுப்பும் படத்தின் வேகத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளன.
“மொத்தத்தில், மர்மத்தையும் திகிலையும் கடைசி வரை தக்க வைத்திருக்கும் உளவியல் திரில்லர் தான் இந்த ‘டார்க்’.”
