Wednesday, April 22

டாடா -திரை விமர்சனம்

நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் ஹீரோ மணிகண்டனுக்கும் (கவின்) அங்கேயே படிக்கும் சிந்துவிற்கும் (அபர்ணா தாஸ்) காதல் ஏற்படுகிறது.இவர்களின் காதல் கர்ப்பம் வரை சென்று விடுகிறது. கவின் அந்த கர்ப்பத்தை கலைக்கச் சொல்லியும் சிந்து  அதற்க்கு உடன்படமால்இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொ ள்வதோடு கல்லூரிப் படிப்பை முடிப்பதற்க்கு முன்பே தனியாக வாழ ஆரம்பிக்கிறார்கள், காதலன், கணவனாகிய பின்னும் மணி(கவின்) பொறுப்பின்றி குடியும் கும்மாளமும் ஆக இருக்க மனம் நொந்த சிந்து (அபர்ணா தாஸ்) குழந்தை பெற்ற பின், அந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு, தனது பெற்றோருடன் சென்றுவிடுகிறார். இதன் பின் பிறந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முழுவதும் மணிக்கு (கவின்) வர அவரும் பொறுப்புள்ள தந்தையாக குழந்தையை வளர்க்கிறார் சில வருடங்களுக்கு பிறகு மணி(கவின்) சிந்துவை ( அபர்ணாதாஸ் ) மீண்டும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது இதன் பின் அவர்கள் மீண்டும் இணைந்து வாழ்ந்தார்களா ? அவர்களது மகனின் நிலைமை என்ன ஆனது ? இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கு விடை தருகிறது ‘டாடா’ திரைப்படத் தின் எஞ்சிய கதை


இரண்டு பரிமாணங்களில், ஒரே படத்தில் நடிப்பை வெளிக்காட்டும் கதாபாத்திரத்தில், கதையின் நாயகனாய் கவின் சிறப்பாக நடித்துள்ளார் .சிந்துவாக நடித்துள்ள அபர்ணாதாசுக்கும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு அதை அவரும் சரியாய் பயன்படுத்தி தன் திறமையை நிரூபித்துள்ளார்

கவினின் பெற்றோராக வரும் பாக்கியராஜ் மற்றும் ஐஸ்வர்யா இருவரின் நடிப்பிலும் அனுபவ முத்திரை மிளிர்கிறது. விடிவி கணேசின் கதாபாத்திரம் சிறப்பாக உள்ளது கவினின் மகனாக நடித்திருக்கும் குழந்தை ஆத்விக்கின் மழலை நடிப்பு படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறது

இசையமைப்பாளர் ஜென் மார்டினின் நான்கு பாடல்களும் பின்னணியிசையும் கதை பயணிக்கும் திசையின் ஊடே தானும் நன்கு பயணித்து தன் பங்கை நிறைவாய் செய்துள்ளது ஒளிப்பதிவாளர் எழிலரசனின் ஒளி அமைப்புகள், இயக்குனரின் எண்ணங்களுக்கு வண்ணம் சேர்த்துள்ளது , மற்றும் படத்தொகுப்பாளர் கதிரேஷ் அழகேசனின் காட்சி தொகுப்புகள், கதையின் ஓட்டத்தை சீராக கொண்டு செல்கிறது , இயக்குனர் கணேஷ் கே.பாபு தான் எடுத்துக்கொண்ட கதையை நல்ல திரைக்கதையுடன் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் நிறைவான படமாக கொடுத்துள்ளார்.

தாயுமான இந்த தந்தையின் கதை ,குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கக்கூடிய அழகான அம்சங்கள் நிறைந்த படம் .

Spread the love