கையில் கோடிக்கணக்கில் ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? அதைச் செலவு செய்து வாழ்க்கையை மாற்றிக்கொள்வீர்களா, அல்லது அது ஆபத்தை ஏற்படுத்தும் பணம் என்று ஒதுங்கிவிடுவீர்களா? இப்படியொரு இக்கட்டான சூழலில் மூன்று குடும்பங்கள் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை மையமாகக் கொண்டு நகர்கிறது இப்படத்தின் கதை.

வடசென்னை பகுதியில் வசிக்கும் ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்னா ஆகிய மூவருக்கும் ரத்த உறவு இல்லாவிட்டாலும், ஒரு சம்பவத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு அவர்களை ஒரே குடும்பமாக இணைக்கிறது. இரு குடும்பங்களிலும் ஜெயப்பிரகாஷின் ஆலோசனை இல்லாமல் எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை. குழந்தைகள்கூட அவரை ‘பெரியப்பா’ என்று பாசத்துடன் அழைக்கிறார்கள்
இந்நிலையில், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வான சரத் லோகித்ஷவா, தேர்தல் செலவுகளுக்காக முறைகேடாகச் சம்பாதித்த ரூ.5 கோடியை ஒரு பழைய கிடங்கில் மறைத்து வைக்கிறார். எதிர்பாராத விதமாக, மூன்று குடும்பங்களைச் சேர்ந்த பையன்கள் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.இதையறிந்த ஜெயப்பிரகாஷ், பணத்தை எடுத்த இடத்திலேயே திருப்பி வைத்துவிடும்படி அறிவுறுத்துகிறார். ஆனால், மற்ற எல்லா விஷயங்களிலும் அவரது பேச்சைக் கேட்கும் குடும்பத்தினர், இந்தப் பண விவகாரத்தில் மட்டும் அவருடைய ஆலோசனையைப் புறக்கணிக்கிறார்கள்.
கிடைத்த பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்று குடும்பத்தினர் திட்டமிடும் நேரத்தில், பணத்தைப் பறிகொடுத்த எம்.எல்.ஏ. அதை மீட்டெடுக்கத் தீவிரமாக முயற்சி செய்கிறார். இதனால் மூன்று குடும்பங்களும் எதிர்பாராத சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றன.குடும்பத்தினரின் ஆசை நிறைவேறியதா? பணத்தைத் தேடும் எம்.எல்.ஏ. அதைக் கண்டுபிடித்தாரா? இந்தப் பணத்தால் மூன்று குடும்பங்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் மைய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்னா பாலச்சந்திரன் ஆகிய மூவரும் முறையே அழகர் ,செல்வம் ,மாணிக்கம் என்னும் கதாபாத்திரங்களில் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வண்ணம் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். மேலும் இவர்களது மனைவியாக நடித்திருக்கும் செந்தி குமாரி, வினோதினி, மோகனா மூவரின் நடிப்பும், சம கால பெண்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இவர்களுடன் துஷ்யந்த், ஜனனி ஆகியோர் இளம் ஜோடிகளாக நடித்துள்ளனர். மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் உள்ளிட்டோரும் அந்தக் குடும்பங்களின் பிள்ளைகளாக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.எம் எல் ஏ ஆவுடையப்பனாக சரத் லோகித்ஷவா, சத்யா,அருவி மதன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
‘சுப்ரமணியபுரம்’ புகழ் ,ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இனிமையாக அமைந்துள்ளன. பாடல்களை மோகன் ராஜன், நிலவை பார்த்திபன், ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.காட்சிகளின் உணர்வுகளுக்கு ஏற்ற பின்னணி இசையும் படத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளது.’கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’ , ‘தகராறு’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜுவின்ன் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் மைதீன், எளிய மனிதர்களின் வாழ்வியலையும், எதிர்பாராத விதமாகப் பெரிய தொகை கையில் கிடைக்கும்போது அவர்களின் எண்ணங்களிலும் செயல்களிலும் ஏற்படும் மாற்றங்களையும் மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்ளார். அதற்கேற்ற திரைக்கதை மற்றும் காட்சிகளுடன், குடும்ப உறவுகளையும் பணத்தால் உருவாகும் சிக்கல்களையும் சுவாரஸ்யமாகப் பதிவு செய்துள்ளார்.
மொத்தத்தில் ,பணம் தரும் ஆசைகளையும், அதனால் உருவாகும் சிக்கல்களையும் குடும்பக் கதையாகச் சொல்லும் ‘ஆல் பாஸ்’, குடும்பத்துடன் ஆல் ஆடியன்ஸும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக அமைந்துள்ளது.
