காணாமல் போன ஒரு பெண்… விடை தேடும் விசாரணை! எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களைத் திகிலிலும், மர்மத்திலும் பயணிக்க வைக்கிறது ‘பனி விழும் இரவு’.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட அருண் கார்த்தி – எனாக்ஷி கங்குலி ஜோடி, திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்களை எடுப்பதற்காகக் கொடைக்கானலுக்குச் செல்கின்றனர். அங்கு எதிர்பாராத விதமாகத் தனது வருங்கால மனைவியைக் காணவில்லை என அருண் கார்த்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இதையடுத்து, காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சேரன் ராஜு மற்றும் காவலர் கருப்பு நம்பியார் விசாரணையைத் தொடங்குகின்றனர். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கும் இந்த விசாரணை, அடுத்தடுத்த கட்டங்களில் பல மர்ம முடிச்சுகளையும் எதிர்பாராத தகவல்களையும் வெளிப்படுத்துகிறது. இறுதியில் காணாமல் போன பெண் எங்கே? அவருக்கு என்ன நடந்தது? இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? என்ற கேள்விகளுக்குப் படத்தின் மீதிக்கதை விடை அளிக்கிறது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அருண் கார்த்தி, தனது வருங்கால மனைவியைக் காணாமல் தவிக்கும் மனநிலையை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி, கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். நாயகியாக வரும் எனாக்ஷி கங்குலியும், தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். மேலும் விசாரணை அதிகாரி மதிமாறனாக வரும் சேரன் ராஜு, கருப்பு நம்பியார், சரவணசக்தி, செ.ரா. ராஜேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களில் சிறப்பாகப் பங்களித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல், கொடைக்கானலின் இயற்கை அழகை மட்டுமின்றி, கதையின் மர்மத்திற்கும், திகில் உணர்வுக்கும் ஏற்ற சூழலை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, மலைப்பகுதிகளின் பனிமூட்டமும், இருள் சூழ்ந்த இடங்களும் கதையின் பரபரப்புக்கு வலுசேர்க்கின்றன. சதா முருகனின் பின்னணி இசை, திரைக்கதையின் பரபரப்புக்கு ஏற்ற வகையில் அமைந்து, முக்கியமான காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கிறது. படத்தில் இடம்பெறும் பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக அமைந்துள்ளன.
கிரைம் திரில்லர் கதைக்களத்தைத் தேர்வு செய்திருக்கும் இயக்குநர் செ.ரா. ராஜேஷ், காணாமல் போன பெண்ணைச் சுற்றி நகரும் விசாரணையை மர்மங்களும் திருப்பங்களும் நிறைந்த திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்திருப்பதுடன், கதையின் தன்மைக்கு ஏற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்திருக்கிறார். விசாரணையின் ஒவ்வொரு நகர்விலும் அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி, ரசிகர்களைக் கதையுடன் தொடர்ந்து பயணிக்க வைக்கிறார்.
மொத்தத்தில், கொடைக்கானலின் பனிமூட்டத்துக்குள் மறைந்திருக்கும் மர்மத்தையும், விறுவிறுப்பான விசாரணையையும் ரசிக்க விரும்புபவர்களுக்கு ‘பனி விழும் இரவு’ ஒரு சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் அனுபவம்!
