Saturday, October 3

‘அன்பில் அவன்’- திரைப்பட விமர்சனம்

ஒரு காதல் திருமணம்… ஒரு பெரிய கனவு… அந்தக் கனவை உடைக்க வரும் பல தடைகள். இவற்றைக் கடந்து தங்களது வாழ்க்கையை வெல்லும் இளம் தம்பதியினரின் பயணம்தான் ‘அன்பில் அவன்’.

பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் சூர்யாவும் இயலும். (அசோக்செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன்) திருமணத்திற்குப் பிறகு தங்களது வாழ்க்கையை தாங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நட்சத்திர விடுதியில் இருவரும் வேலை செய்கிறார்கள்.இந்நிலையில், சொந்தமாக ஒரு விடுதியை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் உள்ள தனது காதல் மனைவியின் கனவை நனவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு விடுதியை வாங்கி அந்தக் கனவை நிறைவேற்ற முயற்சி செய்கிறார் சூர்யா .கனவு நனவாகும் மகிழ்ச்சியில் இருவரும் இருக்கும்போது, அவர்களது வாழ்க்கையில் எதிர்பாராத பல பிரச்சினைகள் குறுக்கிடுகின்றன. அந்தப் பிரச்சினைகளை இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? தங்களது கனவை காப்பாற்றி அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சூர்யா கதாபாத்திரத்தில் அசோக் செல்வன், தான் நேசித்தவரின் கனவை தனது கனவாக ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்ற போராடும் காதல் கணவனாக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்.இயல் கதாபாத்திரத்தில் ப்ரீத்தி முகுந்தன், தனது ஆசை மற்றும் கனவை நோக்கி பயணிக்கும் பெண்ணாகவும், அந்தப் பயணத்தில் கணவருடன் இணைந்து போராடும் மனைவியாகவும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.இவர்களுடன் கதிர் பாலு ,மஹா டெல்லி கணேஷ் ,சாபுமோன் அப்துசமத் ,ரேவதி உள்ளிட்டோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரனின் கேமரா, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை பிரதிபலிக்கும் காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளது. கதையின் சூழலுக்கு ஏற்ற வகையில் காட்சிகள் கண்களுக்கு இனிமையாக அமைந்துள்ளன.கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளதுடன், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ற பின்னணி இசையும் காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

இளம் தம்பதியினரின் காதல், அவர்களது எதிர்கால கனவு, அந்தக் கனவுக்கு எதிராக வரும் பிரச்சினைகள் என கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஆர். கார்த்திகேயன்.காதல் என்பது திருமணத்துடன் முடிந்துவிடுவதில்லை; ஒருவரின் கனவுக்கு மற்றொருவர் துணையாக நிற்பதிலும் அது தொடர்கிறது என்பதை மையமாக வைத்து, பொருத்தமான திரைக்கதை மற்றும் காட்சிகளுடன் படத்தை உருவாக்கியுள்ளார்.

காதலையும் கனவையும் ஒன்றாக எடுத்துக்கொண்டு, வாழ்க்கையின் தடைகளை கடக்க முயலும் இளம் தம்பதியினரின் பயணமாக அமைந்துள்ளது ‘அன்பில் அவன்’.

Spread the love