அடிமைத்தனத்திலிருந்து அடையாளத்தை நோக்கி… நானியின் ‘தி பாரடைஸ்’

அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடிமைகளாக வாழும், தங்களுக்கான உரிமையும் அடையாளமும் கிடைக்கவில்லை என்ற வலியுடன் வாழும் சவாரி இன மக்கள் தங்களுக்கான உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் வேளையில் பிறக்கும் நாயகன், தனது தாயைப் போலவே அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கிறார்.தனது இன மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, அவர்களுக்கான தனித்த அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் போராடுகிறார். அந்தப் போராட்டம் அவரை எங்கு கொண்டு செல்கிறது ? அவரது கனவு நிறைவேறியதா? இல்லையா ? என்பதுதான் ‘தி பாரடைஸ்’ படத்தின் மீதி கதை .
இரட்டை ஜடையுடன் வித்தியாசமான தோற்றத்தில் வரும் நானி, இந்தக் கதாபாத்திரத்திற்காக மேற்கொண்டிருக்கும் உழைப்பு திரையில் தெரிகிறது. ஆக்ரோஷம், வலி, அன்பு, போராட்டம் என கதாபாத்திரத்தின் பல்வேறு உணர்வுகளை தனது இயல்பான நடிப்பின் மூலம் அவர் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
கயாடு லோஹர், நாயகியாக தனது தோற்றத்தாலும் நடிப்பாலும் கவனம் ஈர்க்கிறார். நானியின் கதாபாத்திரப் பயணத்திற்கு துணையாக வரும் அவரது கதாபாத்திரம், கதையின் உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு பக்கபலமாக அமைகிறது.
வில்லனாக நடித்திருக்கும் மோகன் பாபு, தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார். அவரது தோற்றமும் உடல்மொழியும் எதிர்மறை கதாபாத்திரத்தின் அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
நானியின் தாயாக நடித்திருக்கும் சோனாலி குல்கர்னி, கதையின் உணர்வுப்பூர்வமான அடித்தளமாக இருக்கிறார். ராகவ் ஜூயால்,சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன்,ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சி.எச்.சாயின் ஒளிப்பதிவு, படத்தின் உலகத்தை அழுத்தமாக பதிவு செய்கிறது. கதாபாத்திரங்கள் வாழும் சூழல், அவர்களின் வாழ்க்கை முறை, போராட்டம் என அனைத்தையும் கேமரா கோணங்கள் மூலம் காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளன. காட்சிகளின் தன்மைக்கு ஏற்ற வகையில் பின்னணி இசையும் பயணிக்கிறது.
நவீன் நூலியின் படத்தொகுப்பு படத்தின் வேகத்திற்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறது. இருப்பினும், குறிப்பாக சில பகுதிகளில் காட்சிகளின் நீளத்தை இன்னும் குறைத்திருந்தால் திரைக்கதையின் விறுவிறுப்பு மேலும் அதிகரித்திருக்கும்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓ டேலா, ஒரு இனத்தின் அடையாளத்திற்கான போராட்டத்தை மையமாக வைத்து, அதில் ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் என கமர்ஷியல் சினிமாவுக்கான அம்சங்களை கலந்து கொடுத்திருக்கிறார். கதையின் பின்னணியில் இருக்கும் சமூகப் பிரச்சினையை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், ரசிகர்களுக்கான அதிரடி காட்சிகளையும் உணர்வுப்பூர்வமான தருணங்களையும் இணைத்து ஜனரஞ்சகமான படமாக மாற்ற முயற்சித்திருக்கிறார்.
குறிப்பாக முதல் பாதியில் வரும் சில சுவாரஸ்யமான காட்சிகளும், நானியின் கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்டிருக்கும் உடல் மற்றும் நடிப்பு உழைப்பும் படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக அமைகின்றன.
மொத்தத்தில் ‘தி பாரடைஸ்’ ஒரு மனிதனின் தனிப்பட்ட போராட்டத்தை மட்டும் பேசவில்லை; தலைமுறைகளாக அடையாளத்தையும் உரிமையையும் தேடும் ஒரு சமூகத்தின் குரலையும் பதிவு செய்ய முயற்சிக்கிறது. நானியின் அர்ப்பணிப்பான நடிப்பும், முதல் பாதியின் விறுவிறுப்பான காட்சிகளும் படத்தின் பலமாக இருக்க, சில பகுதிகளில் நீளத்தை குறைத்து திரைக்கதையை இன்னும் இறுக்கமாக்கியிருந்தால் அது இன்னமும் ரசிகர்களை கவர்ந்து இருக்கும் .
