Sunday, September 20

‘நல்ல படம்’ – திரை விமர்சனம்

ஒரு பக்கம் மது இல்லாமல் வாழ முடியாத நிலை… மறுபக்கம் மதுவைத் தொலைத்த பிறகு மீண்டும் கிடைக்கும் குடும்ப மகிழ்ச்சி… அந்த மகிழ்ச்சிக்கு நடுவே மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் சூழல் என, மதுப்பழக்கத்தின் தாக்கத்தை மையமாக வைத்து பயணிக்கிறது ‘நல்ல படம்’.

கதையின் நாயகன் ஹரிஷ், ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கி அதன் தலைவராக இருப்பவர். மதுவின் மீது தீராத காதல் கொண்ட இவர், எந்நேரமும் போதையிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்.அவரது இந்தப் பழக்கத்தால் காதலி ஒருபக்கம், குடும்பத்தினர் மறுபக்கம் என அனைவரும் அவரை மாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால், எத்தனை அறிவுரைகள் சொன்னாலும், எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஹரிஷின் மதுப்பழக்கத்தை மட்டும் மாற்ற முடியவில்லை.அப்போது எதிர்பாராத விதமாக நாடு முழுவதும் மதுவிலக்கு அமலுக்கு வருகிறது.கையில் மது இல்லை… கடைகளும் இல்லை… இனி என்ன செய்வது?வேறு வழியில்லாமல் மதுப்பழக்கத்தை கைவிடத் தொடங்கும் ஹரிஷ் உள்ளிட்ட பலரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. வீட்டில் மீண்டும் மகிழ்ச்சி திரும்புகிறது. குடும்ப உறவுகள் மேம்படுகின்றன. சமூகத்திலும் அவர்களுக்கு மீண்டும் மரியாதை கிடைக்கிறது.ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை.மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கான சூழல் உருவாகிறது. இப்போது உண்மையான சோதனை ஆரம்பமாகிறது.மதுவை மறந்து புதிய வாழ்க்கையை தொடங்கிய ஹரிஷ் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பினாரா? அல்லது மதுவைத் தாண்டி கிடைத்த வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்தார்களா ?இந்தக் கேள்விக்கான பதில்தான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் ஏ. ஹரிஷ், மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு மனிதனின் மனநிலையை திரையில் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.எப்போதும் போதையில் இருக்கும் கதாபாத்திரத்தின் உடல்மொழி, குடும்பத்தினரிடம் ஏற்படும் மோதல்கள், பழக்கத்தை விட்ட பிறகு உருவாகும் மாற்றம் என வெவ்வேறு மனநிலைகளை வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரம் இவருக்கு.
கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கும் ஹரிஷுக்கு, மாறுபட்ட கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்வதற்கான ஒரு நல்ல தொடக்கமாக இந்தப் படம் அமைகிறது.

நாயகியாக நடித்திருக்கும் தனலட்சுமி, கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் அதற்கான தேவையையும் புரிந்து இயல்பாக நடித்திருக்கிறார்.காதல் காட்சிகளில் மட்டுமல்லாமல், ஹரிஷின் மதுப்பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தருணங்களிலும் தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும் கூடுதல் கவனம் ஈர்க்கிறார்.மேலும் கல்கி ராஜா, மொட்ட ராஜேந்திரன், ரமா, பிரியதர்ஷினி உள்ளிட்டோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ. ஹரிஷ், கதையின் தன்மைக்கும் காட்சிகளின் தேவைக்கும் ஏற்ற கேமரா கோணங்களை பயன்படுத்தி படத்தை நன்கு பதிவு செய்திருக்கிறார்.சஹிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசையும் கதாபாத்திரங்களின் மனநிலை மற்றும் காட்சிகளின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கிறது.

இன்றைய சமூகத்தில் அதிகரித்து வரும் மதுப்பழக்கம், அதனால் ஒரு தனி மனிதனுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள், அந்தப் பழக்கத்திலிருந்து ஒருவர் எப்படி வெளியே வர முடியும் என்பதையே கதையின் மையமாக வைத்திருக்கிறார் இயக்குனர் பிரபுராம்.சி.இந்த படம் வாயிலாக ஒரு தனி மனிதனின் போதைப் பழக்கத்தை மட்டும் பேசாமல், அந்தப் பழக்கம் குடும்ப உறவுகளையும் சமூகத்தில் ஒருவருக்கான மரியாதையையும் எப்படி மாற்றுகிறது என்பதையும் காட்சிகள் வழியாக நன்கு இயக்குனர் பதிவு செய்துள்ளார்

இறுதியாக…ஒரு மதுப்பிரியனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை மையமாக வைத்து, குடும்பம், காதல் மற்றும் சமூகப் பார்வையுடன் மதுப்பழக்கத்தின் பாதிப்புகளை பேச முயற்சித்திருக்கிறது இந்த ‘நல்ல படம்’.

Spread the love