‘லெனின் பாண்டியன்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா!
செப்டம்பர் 25-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

T.G. தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.
இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரைப் பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். திரைப் பிரபலங்கள், படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர், ‘லெனின் பாண்டியன்’ படத்தின் கதைக்களம், உருவாக்கம், நடிகர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
விநியோகஸ்தர் சங்கம் சார்பில் அருள்பதி
விநியோகஸ்தர் சங்கம் சார்பில் அருள்பதி பேசுகையில், “சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு இந்தப் படம் இன்னொரு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன். இன்று மேடையில் பேசிய விநியோகஸ்தர் சதீஷ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘லெனின் பாண்டியன்’ படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன்
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “‘லெனின் பாண்டியன்’ படத்தை கடந்த சில மாதங்களாகவே மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். சத்யஜோதி பிலிம்ஸ் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும். முதலில் தியாகராஜன் சாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக தேசிய விருது பெறவிருக்கும் அவருக்கு வாழ்த்துகள். தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருது பெறுவது சாதாரண விஷயம் கிடையாது. சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக மதிப்புகளைப் பேசும் அந்த நிறுவனத்தின் அடுத்த படமாக ‘லெனின் பாண்டியன்’ வருவது மகிழ்ச்சி” என்றார்.
மேலும் அவர், “சிவாஜி சார் குடும்பத்தில் இருந்து விக்ரம் பிரபு ‘சிறை’ படத்தில் காவலர் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றது போல, தர்ஷனும் இந்தப் படத்தில் காவலர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். தர்ஷனுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு இன்னும் நிறைய நல்ல ஹீரோக்கள் தேவை; முக்கியமான ஹீரோவாக தர்ஷன் கணேசன் வர வேண்டும். இளையராஜா சாரின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. பாலச்சந்திரனின் இயக்கமும், டிரெய்லரும் சிறப்பாக இருக்கின்றன. கங்கை அமரன் சார் இந்த வயதிலும் இவ்வளவு எனர்ஜியுடன் நடிப்பதைப் பார்க்கும்போது, அவருக்கு வயதே இல்லை என்று சொல்ல வேண்டும்; இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். ரோஜா மேம் மீண்டும் திரையில் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அட்டகாசமான கூட்டணியில் உருவாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ மிகப்பெரிய வெற்றிப் படமாகவும், சத்யஜோதி பிலிம்ஸுக்கு ஒரு பிளாக்பஸ்டராகவும் அமைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் அம்மா சிவா
தயாரிப்பாளர் அம்மா சிவா பேசுகையில், “தமிழ் சினிமாவில் மிகத் தரமான படங்களைத் தொடர்ந்து தயாரிக்கும் நிறுவனமாக சத்யஜோதி பிலிம்ஸ் இருக்கிறது. தியாகு சாரின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இதற்கு முக்கியக் காரணம். ‘லெனின் பாண்டியன்’ படத்தில் கங்கை அமரன் சாரின் நடிப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. படப்பிடிப்புக்கு முன்பு இருந்தவரை விட, படப்பிடிப்பு தொடங்கிய பிறகு அவரது தோற்றமும் வாழ்க்கை முறையும் மாறி, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படம் முடிந்த பிறகும் அந்தக் கதாபாத்திரம் நம்முடன் பயணித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட ஆசை” என்றார்.
மேலும், “ரோஜா எனது குடும்ப நண்பர். தன்னுடைய மிகப்பெரிய இமேஜைத் தாண்டி, இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். இயக்குநர் பாலச்சந்திரன் சிறந்த எழுத்தாளராகத் தெரிகிறார்; படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் கைதட்ட வைக்கும் வசனங்கள் இருக்கின்றன. சமூகத்துக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார். சிவாஜி குடும்பத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் ஒரு பொக்கிஷம் தர்ஷன் கணேசன். அவரது நடிப்பு மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருக்கிறது. சிவாஜி சாரின் ஆரம்பகால நடிப்பை நினைவுபடுத்தும் வகையில் இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. ‘லெனின் பாண்டியன்’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.
தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்
தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பேசுகையில், “தியாகு சாருடன் நான் மிகவும் நெருக்கமாகப் பழகி வருகிறேன். அவர் ஒரு படத்தைத் தேர்வு செய்திருக்கிறார் என்றால், அது நிச்சயம் நல்ல படமாகவும் வெற்றிப் படமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. ‘லெனின் பாண்டியன்’ படத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். தேசிய விருது பெற்றிருக்கும் தியாகு சாருக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செல்வி மேமும் எனக்கு மிகவும் நெருக்கமானவர். தியாகு சாரின் வெற்றிக்குப் பின்னால் அவருடைய பங்களிப்பும் முக்கியமானது. செல்வி மேம், அர்ஜுன், செந்தில் உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினருக்கும், இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
ஜோதிடர் செல்லி
ஜோதிடர் செல்லி பேசுகையில், “ஜோதிடருக்கு நல்ல நேரம், கெட்ட நேரம் என்று எல்லாம் இருக்கும். ஆனால் என்னைப் பொறுத்தவரை கடந்த 40 ஆண்டுகளாக எப்போதும் அண்ணனாக இருக்கும் தியாகராஜன் சார்தான் எனக்கு எல்லாம். அவர் கொடுத்த வாய்ப்புதான் இந்தப் படம். அண்ணன் சொல்லிவிட்டால் அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. பாலா சார் என்ன சொன்னாரோ அதைச் செய்து, அவர் நிறைய திட்டியதன் மூலமாகத்தான் இன்று நடிகனாக நிற்கிறேன். அதற்காக பாலா சாருக்கு என்னுடைய நன்றி” என்றார்.
நடிகை அர்ச்சனா
நடிகை அர்ச்சனா பேசுகையில், “என் பணிகளில் நான் தொடர்ந்து என்னுடைய முழு முயற்சியையும் கொடுத்து வருகிறேன். அதற்கேற்ற வாய்ப்புகளும் என்னைத் தேடி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் போன்ற ஒரு பழமையான, புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக இயக்குநர் பாலா சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன். தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருப்பதை அறிந்திருக்கிறேன். படத்தை முழுமையாகப் பார்க்க நாங்களும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
இயக்குநர் பி. வாசு
இயக்குநர் பி. வாசு பேசுகையில், “கங்கை அமரன் எப்போதும் ஜாலியாக இருப்பவர். ஆனால் இந்தப் படத்தின் டிரெய்லரில் அவரை மிகவும் கோபமான, அழுத்தமான கதாபாத்திரத்தில் பார்த்தது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்த தியாகராஜன் சார் மற்றும் இயக்குநர் பாலச்சந்திரனுக்கு வாழ்த்துகள்” என்றார்.
மேலும் அவர், கங்கை அமரன் தங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிய விதத்தையும், இளையராஜாவுடன் இணைந்து உருவாக்கிய பாடல்களையும் நினைவுகூர்ந்து பேசினார். பல ஆண்டுகளாக தியாகராஜன் சார் மற்றும் கங்கை அமரனுடன் குடும்ப நண்பர்களாகப் பழகி வருவதாகவும், உண்மையான நட்பே அந்த உறவு நீடிப்பதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார். ‘லெனின் பாண்டியன்’ மூலம் கங்கை அமரனுக்கு மிகப்பெரிய பெயரும் வெற்றியும் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகர் இளவரசு
நடிகர் இளவரசு பேசுகையில், “‘லெனின் பாண்டியன்’ என்ற தலைப்பைக் கேட்டவுடன், 1990-க்கு முன்பு மதுரையில் பிறந்தவர்களுக்கு ஒரு சைக்கிள், சிவப்புக் கொடி, தீக்கதிர் பத்திரிகை ஆகியவைதான் நினைவுக்கு வரும். அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் இளையராஜா சார், கங்கை அமரன் அண்ணா, பாஸ்கர் சார் உள்ளிட்டோருக்கும் இந்தப் படத்தின் தலைப்புக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது” என்றார்.
மேலும், மதுரையிலிருந்து பலரும் சினிமாவுக்கு வருவதற்கு பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் போன்றோர் உருவாக்கிய பாதை காரணமாக இருந்ததாகவும், சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சாரின் தயாரிப்பு நேர்த்தி மற்றும் ஒழுக்கத்தைப் பற்றியும் பேசினார். ‘லெனின் பாண்டியன்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இயக்குநர் கண்ணன்
இயக்குநர் கண்ணன் பேசுகையில், “நான் கோ-டைரக்டராக பணியாற்றிய காலத்திலிருந்தே தியாகு சாருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சீரியலிலும் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். அவர் சீரியல், சினிமா என்று பிரித்துப் பார்க்காமல், நல்ல கதை, தரமான மேக்கிங், டிஸிப்ளின் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். சத்யஜோதி பிலிம்ஸ் ஒரு கதையைத் தேர்வு செய்துவிட்டாலே அதில் பாதி வெற்றி உறுதி” என்றார்.
மேலும், தியாகு சார் தமக்கு ‘ஜெயம் கொண்டான்’ படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியதையும், ‘லெனின் பாண்டியன்’ மூலம் பாலச்சந்திரனை அறிமுகப்படுத்தியிருப்பதும் மிகப்பெரிய முயற்சி என்றும் குறிப்பிட்டார். தர்ஷனின் தோற்றமும் நடிப்பும் பழைய காலத்து நடிகர்களை நினைவுபடுத்துவதாகவும், கங்கை அமரனின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் கூறினார்.
இயக்குநர் D.D. பாலச்சந்திரன்
இயக்குநர் D.D. பாலச்சந்திரன் பேசுகையில், “இது என்னுடைய முதல் மேடை. இந்த மேடையில் ஏறுவதற்கு யார் காரணமாக இருந்தார்களோ, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மேடையாக இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன். முதல் நன்றி தியாகராஜன் சாருக்குத்தான். அனைவருக்கும் T.நகர் என்றால் தியாகராய நகர்; எனக்கு என்றென்றைக்கும் அது தியாகராஜன் நகர்தான்” என்றார்.
மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்தில் தியாகராஜன் சார் தமக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியதை நினைவுகூர்ந்த அவர், “என்னைப் போன்ற ஒரு புதுமுக இயக்குநரை நம்பி இந்தப் படத்தை வழங்கிய தியாகராஜன் சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்தப் படத்திற்காக நான் எவ்வளவு தயாராக இருந்தேன் என்பதும், படத்தை எந்த அளவுக்கு உருவாக்க வேண்டும் என்ற தெளிவும் அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்” என்றார்.
இயக்குநர் பத்ரி
இயக்குநர் பத்ரி பேசுகையில், இயக்குநர் பாலச்சந்திரன் எவ்வளவு தயாராக இருக்கிறார் என்பது தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், தியாகு சாரின் பயிற்சி ஒரு “பிராக்டிக்கல் ஸ்கூல்” போன்றது என்றும் குறிப்பிட்டார். எந்தத் துறைக்குச் சென்றாலும் நேரடியாகப் படம் தொடங்கும் அளவுக்கும், எந்த ஹீரோவையும் கையாளும் அளவுக்கும் அவர் தயாராக்கி விடுவார் என்றும் கூறினார்.
மேலும், தியாகு சார் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை ஓகே செய்திருப்பதே பெரிய விஷயம் என்றும், ‘லெனின் பாண்டியன்’ உண்மையிலேயே “அவுட் ஆஃப் தி வேர்ல்ட்” படமாகவும் சமூகத்துக்குத் தேவையான வலிமையான படமாகவும் உருவாகியுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இசையமைப்பாளர் இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நேரத்தை மிகவும் கடைப்பிடிப்பவர் என்பதை நினைவுகூர்ந்தார். தாம் தினமும் சரியாக 7 மணிக்கு ஸ்டூடியோவிற்கு செல்வதாகவும், ஒருநாள் ஐந்து நிமிடங்கள் தாமதமாகச் சென்றபோது சிவாஜி அண்ணா தம்மை பார்த்து, “ராசா, நீயுமா லேட்டு?” என்று கேட்ட சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
மேலும், “ஒரு நடிகர் புதிதாக அறிமுகமாகும்போது, ‘யாருப்பா இது?’ என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இருக்க வேண்டும். அதன்பிறகு அந்த நடிகரைப் பார்த்து, ‘யாரு இந்த ஆள்?’ என்று வியக்கும் அளவுக்கு அவரது நடிப்பு வளர வேண்டும்” என்று சிவாஜி கணேசன் கூறியதாக நினைவுகூர்ந்தார்.
‘லெனின் பாண்டியன்’ படத்தில் தர்ஷன் கணேசனின் நடிப்பைப் பார்த்ததாகவும், சிவாஜி அண்ணாவின் பெயரையும் நடிப்பு வம்சாவளியையும் காப்பாற்றும் வகையில் அவர் சிறப்பாக நடித்துள்ளதாகவும் இளையராஜா பாராட்டினார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நடிகர் தர்ஷன் கணேசன்
நடிகர் தர்ஷன் கணேசன் பேசுகையில், “செப்டம்பர் 12, 2026 என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். ‘லெனின் பாண்டியன்’ படத்தின் விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறு வயது முதலே சிவாஜி சார் படங்களைப் பார்த்தும், அவரது வசனங்களைப் பேசியும், பாடல்களைக் கேட்டும் வளர்ந்தவன் நான்” என்றார்.
நடிப்பை சீரியஸாக எடுத்துக்கொள்ளும்போது, தன்னால் நன்றாகச் செய்ய முடியுமா என்ற சுய சந்தேகம் இருந்ததாகவும், அதிலிருந்து வெளியே வர கடுமையாகப் பயிற்சி செய்ததாகவும் தெரிவித்தார். தமக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தியாகராஜன் சார், செல்வி மேம், செந்தில் சார், அர்ஜுன் சார் ஆகியோர் இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்த அவர், இந்தப் படம் தனக்கு அறிமுக விழா மட்டுமல்ல, இயக்குநர் பாலச்சந்திரனுக்கும் அறிமுக விழா என்றும் குறிப்பிட்டார். கங்கை அமரன், ரோஜா உள்ளிட்ட அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
தயாரிப்பாளர் T.G. தியாகராஜன்
தயாரிப்பாளர் T.G. தியாகராஜன் பேசுகையில், தான் திரையுலகில் இசையை நேசிக்க ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணம் இளையராஜா சார் என்றும், அவர் ரீ-ரெக்கார்டிங் மற்றும் பாடல் பதிவு செய்யும்போது அருகில் இருந்து ரசித்துப் பார்த்திருப்பதாகவும் கூறினார்.
நேரம் தவறாமல் இருப்பதை இளையராஜா சார் மற்றும் சிவாஜி சார் ஆகிய இருவரிடமிருந்தும் கற்றுக்கொண்டதாகவும், அவர்களின் நேர்த்தியும் பணியின் மீதான அர்ப்பணிப்பும் ஒரு தனி பள்ளி என்றும் குறிப்பிட்டார்.
சத்யஜோதி பிலிம்ஸ் எப்போதும் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து, அவற்றை வணிகரீதியாகவும் வெற்றி பெறச் செய்வதில் கவனம் செலுத்தும் நிறுவனம் என்றும், ‘லெனின் பாண்டியன்’ வழக்கமான கதையாக இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருந்ததால் இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்.
பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ள சத்யஜோதி நிறுவனத்தின் வரிசையில் பாலச்சந்திரனையும் இப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்துவதாகக் கூறிய அவர், தர்ஷனை முதன்முதலில் பார்த்தபோதே சிவாஜி சாரின் முகத்தோற்றமும் உடல்மொழியும் அவரிடம் இருப்பதை உணர்ந்ததாகவும், இந்தக் கதாபாத்திரத்துக்கு இவர்தான் சரியான தேர்வு என்று முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

கங்கை அமரன்
கங்கை அமரன் பேசுகையில், தன்னுடைய அண்ணனின் ஆசீர்வாதத்தில் ‘கோழி கூவுது’ படத்தை இயக்கி இயக்குநரானதாகவும், அதன்பிறகு சுமார் 18 படங்களை இயக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். சினிமாவில் இசையமைப்பாளராகவும் பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், தற்போது நடிகராக மீண்டும் நடிக்க சத்யஜோதி தியாகராஜன் வாய்ப்பு தந்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார்.
இந்த வாய்ப்பை வழங்கிய தியாகு சாருக்கு நன்றி தெரிவித்த அவர், நடிகராக இன்று அவருக்கு அருகில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வாழ்க்கையில் இது போன்ற புதிய அனுபவங்களும் புதிய வாய்ப்புகளும் கிடைத்திருப்பது சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் வெங்கட் பிரபு
இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், இந்தப் படத்தில் தனது அப்பா கங்கை அமரனைப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்ததாகக் கூறினார். பொதுவாக அவர் சற்று ஓவராக நடிப்பார் என்றாலும், இந்தப் படத்தில் மிகவும் இயல்பாகவும் சிறப்பாகவும் நடித்திருப்பதாகவும், அதற்கான முழு கிரெடிட்டும் இயக்குநர் பாலச்சந்திரனுக்குத்தான் என்றும் தெரிவித்தார்.
இப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், அந்தச் சம்பவத்தை எந்த வகையிலும் கமர்ஷியலாக்காமல் உண்மைக்கு மிக நெருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதே இயக்குநரின் விருப்பமாக இருந்ததாகவும் கூறினார். அந்த பார்வையை பாலச்சந்திரன் திரையில் அப்படியே கொண்டு வந்திருப்பதாகவும், அதனால் இது மிகவும் அழுத்தமான, மனதைப் பாதிக்கும் படமாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தர்ஷன் கணேசனின் நடிப்பையும் வெங்கட் பிரபு பாராட்டினார். முதல் படத்திலேயே இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருப்பது பாராட்டுக்குரியது என்றும், அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும் கூறினார். ரோஜாவின் வித்தியாசமான தோற்றம் மற்றும் கதாபாத்திரத்தையும் பாராட்டிய அவர், இளையராஜாவின் இசை மீண்டும் தொடர்ந்து ஒலிக்கும் காலகட்டம் உருவாகியிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நாயகி ஸ்ரித்தா ராவ்
நாயகி ஸ்ரித்தா ராவ் பேசுகையில், ‘லெனின் பாண்டியன்’ படத்தின் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் தியாகராஜன் சார், செந்தில் சார், அர்ஜுன் சார், செல்வி மேம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மதுரையில் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், இயக்குநர் பாலச்சந்திரன் வழங்கிய வசனங்கள் தனக்கு புதிய அனுபவமாக இருந்ததாகவும், ரோஜா மேமுடன் பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம் என்றும் கூறினார். தர்ஷன் மிகவும் ஆதரவாக இருந்ததாகவும், அவரை முதன்முதலில் பார்த்தபோதே சிவாஜி கணேசன் சாரைப் போலவே இருப்பதாக அவரிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
ஒளிப்பதிவாளர் எட்வின் சார், எடிட்டர் நாகூரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஸ்ரித்தா ராவ், ‘லெனின் பாண்டியன்’ செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து இந்தப் படத்தைப் பாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
நடிகை ரோஜா – சினிமாவுக்கு ரீ-என்ட்ரி
நடிகை ரோஜா பேசுகையில், “என்னுடைய முதல் படம் ‘செம்பருத்தி’. இப்போது ‘லெனின் பாண்டியன்’ மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறேன்” என்றார். 30, 35 ஆண்டுகள் நீண்ட பயணம் என்று கூறும்போதுதான், இவ்வளவு நீண்ட பயணத்தை தான் இவ்வளவு எளிதாகக் கடந்து வந்திருக்கிறேனா என்று தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டார்.
தன்னுடைய முதல் படத்துக்கு இசையமைத்த இளையராஜா சாரே, தனது ரீ-என்ட்ரி படத்துக்கும் இசையமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும், தான் அவருடைய மிகப்பெரிய ரசிகை என்றும் கூறினார்.
சுப்பு கூறிய கதையின் மூலம் இந்தப் படத்தில் நடிக்க வந்ததாகவும், இயக்குநர் பாலச்சந்திரன் தன்னுடைய வீட்டுக்கு வந்து கதை சொன்ன விதமே தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் தெரிவித்தார். சிவாஜி சார் குடும்பத்தின் மூன்று தலைமுறையினருடனும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், சிவாஜி சார், பிரபு சார் ஆகியோருடன் நடித்துள்ள தான் தற்போது தர்ஷனுடனும் நடித்திருப்பதாகவும் கூறினார்.
‘லெனின் பாண்டியன்’ படப்பிடிப்பில் மீண்டும் ஒரு குடும்ப உணர்வை அனுபவித்ததாகவும், தர்ஷன் கணேசன் மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் பழகியதாகவும் ரோஜா தெரிவித்தார். ‘லெனின் பாண்டியன்’ ரசிகர்களை கதையுடன் உணர்வுபூர்வமாக இணைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், படக்குழுவினர் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்தினார்.

நடிகர் ராம்குமார்
நடிகர் ராம்குமார் பேசுகையில், சத்யஜோதி பிலிம்ஸ், தியாகு சார், செந்தில் சார், அர்ஜுன் சார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். “உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகிற்கு மிகவும் முக்கியம். தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சினிமா வாழும்” என்றார்.
இந்தப் படத்தின் ரஷ் காட்சிகளைப் பார்த்திருப்பதாகவும், கங்கை அமரன் சார், தர்ஷன் கணேசன், ஸ்ரித்தா ராவ் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் நன்றாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக தர்ஷன் கணேசன், ஸ்ரித்தா ராவ் ஆகிய இருவரும் புதுமுகங்களாக மிகவும் சிறப்பாக நடித்திருப்பதாகப் பாராட்டினார்.
இந்தப் படத்தின் “கேப்டன் ஆஃப் தி ஷிப்” இயக்குநர் பாலச்சந்திரன் சார் என்றும், அவரது இயக்கம் சிறப்பாக இருப்பதாகவும் கூறி, இயக்குநர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
75 வயது முதியவர் ஒருவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பதன் பின்னணி என்ன? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. டிரெய்லர் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், திரையரங்கில் புதிய அனுபவத்தைத் தரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்குகிறார். இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில், தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
