ஒரு படத்தை உருவாக்க நூற்றுக்கணக்கான கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தேவைப்படும். ஆனால், ஒரு மனிதனே அந்தப் படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டால்? அந்த அசாத்திய முயற்சிதான் ‘ஒன் மேன்’.

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் பல முக்கியப் பொறுப்புகளை ஒரே மனிதர் ஏற்றுக்கொள்வது புதிதல்ல. இயக்குநர் டி.ராஜேந்தர் படங்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு, பாடல் ,பின்னணி பாடகர் என பல துறைகளில் அவரது பங்களிப்பை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அதையும் தாண்டி, படத்தின் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து, தொழில்நுட்பப் பணிகளையும் கவனித்து, பின்னணி வேலைகள் வரை தனி மனிதராக ஒரு முழுத் திரைப்படத்தையே உருவாக்கியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
நான்கு நண்பா்கள் மற்றும் ஒரு கார் ஓட்டுநர் உட்பட ஐந்து நபர்கள் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள் அப்போது அவர்கள் வழி தவறி காட்டிற்குள் செல்லும்போது, மனிதனின் பேராசையால் உலகில் எந்த உயிரினமும் இல்லாமல் போகும் அளவுக்கு ஆபத்தான ஒரு கண்டுபிடிப்பின் ரகசியம் அவர்களுக்கு தெரிய வருகிறது. அந்த சக்தியைப் பயன்படுத்தி பத்து நாட்களுக்கு உலகையே ஆள வேண்டும் என்ற நான்கு நண்பர்களின் ஆசை நிறைவேறியதா?அதன் பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே ஒன் மேன் படத்தின் கதை..
படத்தின் அத்தனை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் சங்ககிரி ராஜ்குமார், தனது பங்களிப்பில் பெரிய குறை சொல்ல முடியாத அளவுக்கு ரசிக்க வைக்கிறார். குறிப்பாக, **ஒரு தனி மனிதராக இத்தனை பெரிய கதைக்களத்தை கற்பனை செய்து, அதை திரையில் காட்சிகளாக கொண்டு வந்திருக்கும் விதமே இந்தப் படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம்.
‘ஒன் மேன் ஆர்மி’ என்று சொல்லும் அளவுக்கு படத்தின் பல்வேறு துறைகளையும் அவரே கையாண்டிருக்கிறார். அதனால் வழக்கமான திரைப்படங்களைப் போல ஒவ்வொரு துறையையும் தனித்தனியாக பிரித்து நிறை, குறைகளை அலசுவதைவிட, இந்தப் படத்தின் பின்னால் இருக்கும் அந்த ஒரு மனிதனின் முயற்சியையும் உழைப்பையும் முதலில் பாராட்ட வேண்டும்.
பல நூறு பேர் இணைந்து உருவாக்கும் திரைப்படங்களில்கூட சில குறைகள் தவிர்க்க முடியாதவை. அப்படியிருக்க, ஒரே மனிதர் கதை, கதாபாத்திரங்கள், நடிப்பு, தொழில்நுட்பம் என அனைத்தையும் சுமந்து ஒரு முழுப் படத்தை உருவாக்கியிருப்பது சாதாரண விஷயமல்ல. அந்த வகையில், சங்ககிரி ராஜ்குமாரின் இந்த முயற்சி, சினிமாவில் புதிதாக ஏதாவது செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் ஒரு ஊக்கமாக இருக்கும்.
கார், ஹெலிகாப்டர், ரயில், விமானம் என பல்வேறு வாகனங்களை மையமாகக் கொண்ட சாகசக் காட்சிகள், கிராபிக்ஸ் உதவியுடன் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகளின் பின்னணியில் ஒரு தனி மனிதனின் திட்டமிடலும் ,உழைப்பும் இருப்பதை நினைத்துப் பார்க்கும்போது, அதன் முயற்சி இன்னும் கூடுதல் கவனம் பெறுகிறது.
குறிப்பாக படத்தின் இறுதியில் இடம்பெறும் மேக்கிங் காட்சிகள், ‘ஒன் மேன்’ திரைப்படம் உருவாக சங்ககிரி ராஜ்குமார் எவ்வளவு உழைப்பையும் நேரத்தையும் அர்ப்பணித்திருக்க வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றன. திரையில் தெரியும் காட்சிகளைவிட, அந்தக் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் உழைப்புதான் இந்தப் படத்தின் உண்மையான பிரமாண்டம்.
‘ஒன் மேன்’ என்பது ஒரு திரைப்படத்தை மட்டும் பார்க்கும் அனுபவம் அல்ல; ஒரு தனி மனிதன் தனது கனவை திரையில் சாத்தியமாக்கியிருப்பதைப் பார்க்கும் அனுபவம். நிறை, குறைகளைத் தாண்டி இந்த முயற்சியை மனதார பாராட்டலாம். இப்படியான புதிய முயற்சிகளுக்கு ரசிகர்களின் ஆதரவும் ஊக்கமும் கிடைத்தால், இன்னும் பல ‘ஒன் மேன்’கள் தமிழ் சினிமாவில் உருவாகலாம்!
…மொத்தத்தில் தனி மனிதரின் இந்த புதிய முயற்சியை அனைத்து திரை ரசிகர்களும் பார்த்து ரசித்து ஊக்கப்படுத்தலாம்.
