வனமும் ,வனம் சார்ந்த பகுதியின் பின்னணியில், விலங்குகளின் வாழ்க்கைக்கும், அங்குள்ள பழங்குடியின மக்களின் வாழ்வியலுக்கும் எதிராக நடக்கும் அதிகார போட்டிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஆக்சன் திரைப்படம் தான் காட்டாளன்.

அடர்ந்த வனப்பகுதியை தன்னுடைய அமைதியான அதிகார மையத்தின் கீழ் வைத்துக் கொண்டு அங்கு வசிக்கும் யானைகளை தந்தங்களுக்காக வேட்டையாடி, அவற்றை கடத்துவதோடு அங்குள்ள பழங்குடி மக்களையும் மிரட்டி பணிய வைத்து, அந்தக் கானகத்தையே தன்னுடைய ஆளுமைக்குள் வைத்துள்ள கடத்தல்காரன் சுனில் ,அதற்க்கு போட்டியாக சுனிலின் சாம்ராஜ்யத்தை சிதைக்க முயற்சிக்கும் மற்றொரு தலைவன் கபீர் துகான் சிங், இதனால் தன்னால் கடத்தி வரப்பட்ட தந்தங்களை மீண்டும் மீட்டெடுக்க ஆண்டனியின் உதவியினை சுனில் நாட , இழந்த தந்தங்கள் மீண்டும் சுனில் வசம் திரும்ப கிடைக்கிறது , ஆனால் காலப் போக்கில் ஆண்டனி வர்கீஸ் ,சுனிலுக்கு எதிராகவும், பழங்குடியின மக்களுக்கு ஆதரவாகவும் மாறுகிறார் .அதன்பின் சுனிலும் , கபீர் துகான் சிங்கும் ஆண்டனிக்கு எதிராக ஒன்றிணைகிறார்கள். ஆண்டனியோ பழங்குடியின மக்களின் பக்கம் நின்று ,கடத்தல் கும்பல்களுக்கு எதிராக தனது போராட்டத்தை துவங்குகிறார் .இறுதியில் இந்த மோதலில் யார் வெற்றி பெற்றார்கள் ? என்பதையே படத்தின் கதை விறுவிறுப்பாக சொல்கிறது.
கதையின் நாயகனாக நடித்துள்ள ஆண்டனி வர்கீஸ் ,தன்னுடைய உடல் மொழியால் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளில், தனது தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி ,தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளார். எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சுனிலும், கபீர் துகான் சிங்கும் ,தங்களுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். மற்றும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள துஷாரா விஜயன் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.

வனப்பகுதிகளின் அழகையும் ,அதிரடியான ஆக்ஷன் காட்சிகளின் சிறப்பான பிரம்மாண்டத்தையும் ஒளிப்பதிவாளர் ரெனாடைவ் நன்கு பதிவு செய்துள்ளார். சமீர் முகமதுவின் படத்தொகுப்பு ,படத்தின் தேவையற்ற நீளத்தை குறைத்து காட்சிகளின் வேகத்தை நகர்த்த உதவியுள்ளது .ரவி பஸ்ரூரின் பின்னனி இசை ,காட்சிகளுக்கு பலம் சேர்த்தாலும் ,சில இடங்களில் சற்று அதிகமாக உள்ளதோ என்று தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .

இந்தப் படத்தை பவுல் ஜார்ஜ் இயக்கியுள்ளார் . இவர் கானக வாழ்வியலில் உள்ள விலங்குகள் மற்றும் அங்குள்ள பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக கொண்டு கதைக்களம் அமைத்து , அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப பொருத்தமான நடிகர்களை நடிக்க வைத்து ,விறுவிறுப்பான ஒரு படத்தை இயக்கியுள்ளார் .வணிக ரீதியான படத்திற்கு தேவையான காட்சி அமைப்புகளை கொண்டு இந்த படத்தை அவர் இயக்கியுள்ளார்.முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு ,படத்தின் இரண்டாம் பாதியில் சற்று குறைவுதான் ,மற்றபடி நேர்த்தியான தொழில் நுட்பக்கூட்டணியுடன் இணைந்த சரியான ஆக்ஷன் த்ரில்லர் படம்தான் இந்த ’காட்டாளன்’.
மொத்தத்தில் இந்த ’காட்டாளன்’ இளம் திரை ரசிகர்களின் ஈர்ப்பாளன்.
