Friday, April 17

பைக்கர்- திரைவிமர்சனம்

இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம் என்ற சிறப்புடன் வெளிவந்துள்ள படம் இந்த பைக்கர்.

கதையின் நாயகனான ஷர்வானந்த் பைக் ரேஸில் திறமைசாலியாக உள்ளார் அவரது அப்பா டாக்டர் ராஜசேகர்  அவரும் ஒரு முன்னாள் பைக் ரேஸ் சாம்பியன்தான். தன் மகனும் தன்னைப்போல் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நிறைய சாதனைகளை நிகழ்த்துவார் என்று ராஜசேகர் நம்பியிருக்க, அதேபோல மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டில் ஷர்வானந்திற்கும் மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கிறது ,ஆனால் தன் மகன் மிகப்பெரிய பந்தய வீரனாக வருவான் என்ற ராஜசேகரின் நம்பிக்கையை ஷர்வானந்த் நிறைவேற்ற வில்லை, மாறாக பந்தயத்தின் முடிவில் அதிலிருந்து விலகும் ஷர்வானந்த், தன் தந்தையையும் பிரிந்து செல்கிறார், ஷர்வானந்த் செய்த தவறால் தண்டிக்கப்படும் ராஜசேகருக்கு பெரும் அவமரியாதை கிடைக்கிறது, மகன் மனைவியுடன் தந்தையை விட்டு பிரிந்த ஷர்வானந்த் வேறு இடத்தில் குடியேறுகிறார், ஒரு சூழ்நிலையில் அவர் மீண்டும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக களம் இறங்க முடிவு எடுக்கிறார், அவர் ஏன் பந்தயத்தில் இருந்து விலகிச் சென்றார் ?தனது தந்தையை விட்டு அவர் விலகி இருப்பதன் காரணம் என்ன? மீண்டும் அவர் எதற்காக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் களம் இறங்கினார் இது போன்ற கேள்விகளுக்கு விடையினை தருகிறது பைக்கர் படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக விகாஸ் நாராயணன் என்னும் கதாபாத்திரத்தில் ஷர்வானந்த் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக நன்கு நடித்துள்ளார் .ஒரு இளம் விளையாட்டு வீரனுக்குரிய உடல் தோற்றமும் .கடின உழைப்பும் கொண்டு தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருந்திப் போகும் வகையில் சிறப்பான நடிப்பை ஷர்வானந்த் வெளிப்படுத்தியுள்ளார் .கதை நாயகனின் தந்தையாக சுனில்  என்ற கதாபாத்திரத்தில் டாக்டர் ராஜசேகர்  நடித்துள்ளார். ஒரு பயிற்சியாளராக தன்னுடைய திரை அனுபவத்தின் வாயிலான நடிப்பை அவர் படம் முழுவதும் வெளிப்படுத்தி இருப்பது அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. நாயகியாக மாளவிகா நாயர் நடித்துள்ளார் . தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் விதமாக அவரது நடிப்பு அமைந்திருந்தது.


விளையாட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு ஒளிப்பதிவின் பங்களிப்பானது மிகவும் முக்கியமானது,அந்த வகையில் பந்தய காட்சிகளை சிறப்பான முறையில் வித்தியாசமான கோணங்கள் மூலம் படம் பார்க்கும் ரசிகர்கள் பந்தயத்தை நேரில் காண்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க ஒளிப்பதிவாளர் ஜே யுவராஜின் உழைப்பு மிகவும் பயன்பட்டுள்ளது. அதேபோல இசையமைப்பாளர் ஜிப்ரனின் பின்னணி இசை, காட்சிகளுக்கு நிறைவான பின்புலத்தை தத்துவமாக அமைத்துக் கொடுத்துள்ளது. இவர்கள் இருவரது பங்களிப்பு மட்டுமின்றி முக்கியமாக பட தொகுப்பாளர்  அனில் பசாலாவின் உழைப்புதான் பந்தயக் காட்சிகளை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் அமைய பெரிதும் காரணமாக இருந்தது .

பொதுவாக விளையாட்டை மையமாக வைத்து ஏற்கனவே நிறைய படங்கள் வந்திருந்தாலும், இதுபோல மோட்டார் சைக்கிள் பந்தயத்தை வைத்து உருவாக்கப்படும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். அதிலும் இது போல விளையாட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் அதில் தந்தை மகன் சென்டிமென்ட், குடும்ப பின்னணி போன்றவற்றையும் இணைத்து அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் இந்த படத்தினை இயக்கியுள்ளார் இயக்குனர் அபிலாஷ் ரெட்டி.

மொத்தத்தில் அரங்கம் அதிர பவனி வரும் இந்த பைக்கருக்கு வெற்றிக்கோப்பை நிச்சயம் உண்டு.

Spread the love