Monday, May 25

‘தாய் கிழவி’ -திரைவிமர்சனம்

படித்தவர்களும், பதவியில் இருப்பவர்கள் மட்டும்தான் பெண்ணியம் பேச முடியுமா என்ன ? பட்டிக்காட்டில் வாழும் பவுனுத்தாய்களும் பெண்ணியம் பேச முடியும் என்பதை பதிவு செய்திருக்கிறது இந்த ‘தாய் கிழவி’ .

சொத்து தராத ஆத்தா பவுனுத்தாயை பிரிந்து செல்லும் மகன்களும், பாக்கி பவுன் தராத கோவத்தில் மருமகனும் பிரிந்து சென்றிருந்த காலத்தில் உடல் நலிவுற்று படுத்த படுக்கையாக இருக்கும் பவுனுத்தாயி மரணித்து விட்டால் சொத்துக்களை பிரித்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் திரும்பி வந்து அவர்கள் காத்திருக்கும் சூழலில் வாய் பேச முடியாத பவுனுத்தாயி செய்கை வழியில் எதையோ குறிப்பிட்டு சொல்வதாக நினைத்து, அதன் மூலம் தங்களுக்கு கிடைக்கக்கூடிய நகைகளுக்காக மகன்கள் ,அவரை பெரிய மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்கிறார்கள் .தனக்கு தெரியாமல் மகன்கள் பவுனுத்தாய்க்கு ஏதோ செய்கிறார்கள் என்பதை மோப்பமிட்டு அறிந்து கொள்ளும் மருமகனும் தன் பங்குக்கும் செலவழிக்க துணிகிறார். கடைசியில் பவுனுத்தாயி உயிர் பிழைத்து வந்தாரா? அவர் மகன்களுக்கும் மருமகள்களுக்கும்  ஆதாயம் கிடைத்ததா? என்பதை நகைச்சுவை கலந்த சமுதாய கருத்துக்களுடன் சொல்கிறது ‘தாய் கிழவி’ படத்தின் மீதிக்கதை .

இதற்கு முன் எத்தனையோ படங்களில் தனது பண்பட்ட நடிப்பை, மாறுபட்ட கோணங்களில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ரசிகர்களுக்கு கலையரசி ராதிகா கொடுத்திருந்தாலும் ,வித்தியாசமான மெனக்கடல் ஒப்பனை மூலமாகவும் ,தான் ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் வாயிலாகவும் , எத்தனையோ குக்கிராமங்களில் வாழ்ந்து மறைந்திருந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்க கூடிய பவுனுத்தாய்களை தன்னுடைய நடிப்பின் மூலம் வெள்ளித்திரையில் வலம் வரச் செய்து,ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை, இந்த படத்தின் மூலம் அவர் பெற்றுள்ளார்.

மகன்களாக நடித்துள்ள அருள் தாஸ் ,சிங்கம் புலி ,பால சரவணன் மற்றும் மருமகனாக நடித்துள்ள முத்துக்குமார், பென்னிகுவிக் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள முனீஸ் காந்த் போன்ற அனைவருமே கிராமங்களில் அசலாக வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் கதாபாத்திரங்களில், நகைச்சுவை கலந்த குணச்சித்திர நடிப்பை சிறப்பான முறையில் வழங்கியிருக்கிறார்கள்.மூன்று மகன்களில் ஒருவராக  நடித்துள்ள சிங்கம்புலி, கமல் ரசிகராக படம் முழுவதும் வந்து தியேட்டரில் சிரிப்பலைகளை சிதற விடுகிறார்.மேலும் , குறிப்பாக நாங்க எல்லாம் கல்யாணம் செஞ்சுகிட்டு கஷ்டப்படுறோம். நீ ஏன் கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப்படுற அப்படின்னு கேட்கும் பவுனுத்தாயின் மகன்களிடம், முனீஸ் காந்த், தான் ஏன் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்பதை உணர்ச்சி ததும்ப விவரிக்கும் காட்சியில் , இன்னமும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் முதிர்கண்ணன்களின் மனக்குமறலை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி உள்ளார். மகளாக நடித்துள்ள ரேச்சல் ரெபாக்காவின் அமைதியான தோற்றமும்,ஆழமான நடிப்பும் தனித்துவமாக திரையில் மிளிர்கிறது. மேலும் இளவரசு,ஜார்ஜ் மரியான் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் ,மேலும் சிறு கதாபாத்திரங்களில் வரும் மண்ணின் மைந்தர்கள் என அனைவருமே சிறப்பான முறையில் நடித்துள்ளார்கள்.

கிராமிய வீடுகளின் உட்புறம் மற்றும் வெளிப்புற காட்சிகளை அச்சு அசலாக சிறப்பான கோணங்கள் வழியாக நன்கு பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார். கிராமிய வாழ்வியலை சித்தரிக்கும் கதை மாந்தர்களைக் கொண்ட கதைக்கும், திரைக்கதை காட்சிகளுக்கும் இணக்கமாக பின்னணி இசையினை கொடுத்துள்ளார் நிவாஸ் கே பிரசன்னா.

பவுனுத்தாயி என்னும் ஒரு பெண்ணின் வாழ்வியலை, அவரைச் சுற்றியுள்ள சொந்த பந்தங்கள் மூலமாக நகைச்சுவையுடன் சொல்லி இருப்பதோடு , அதனூடே பெண்கள் எப்படி சுயமாக வாழ வேண்டும், நம்பிக்கையுடன் வாழ வேண்டும்,சிக்கனமாக,சேமிப்புடன் வாழ வேண்டும் என்னும் சமூக கருத்துக்களையும் சேர்த்து சொல்லி படத்தை சிறப்பாக இயக்கி உள்ளார் சிவக்குமார் முருகேசன் .

மொத்தத்தில் இந்த ‘தாய் கிழவி’ சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைத்துள்ளது.

Spread the love