Thursday, April 23

இட்லி கடை – திரை விமர்சனம்

ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று அடையாளமாக, காலம் காலமாக தொன்று தொட்டு, பல தலைமுறைகளை தாண்டி தொடர்ந்து கொண்டே இருக்கும் ,அதில் சின்னங்களும், கல்வெட்டுகளும் காட்சியாகவும் ,வரலாற்றுக்கு பதிவுகளுக்கு சான்றாகவும் அமைந்திருக்கும், ஆனால் ஒரு குக்கிராமமாக இருந்தாலும் அதிலுள்ள அனைத்து மக்களின் விருப்பமாக ஒரு உணவகம் கண்டிப்பாக இருக்கும் அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை கதையின் கருவாக அமைத்து, பலருக்கும் பல்வேறு ஞாபகங்களை நினைவுபடுத்தி இருக்கும் படம்தான் இட்லி கடை.

நம் முன்னோர்களின் கலைவண்ணத்தில் உருவாகின்ற இன்றளவுக்கும் வானளவ நிற்கும் நினைவுச் சின்னங்கள் நம் தமிழகத்தின் பெருமையை சொல்வது போல, உணவு என்று எடுத்துக் கொண்டால் உலகம் முழுவதும் நம் தமிழ் மண்ணை நினைவில் கொண்டு வந்து நிறுத்துவது நம் மூதாதையர்களின் கைவண்ணத்தில் உருவான இட்லி தான். அப்படிப்பட்ட இட்லி கடை ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படமே இட்லி கடை.

டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள படம் இட்லி கடை. இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தனுஷ் இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜி.கே பிரசன்னா எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய, பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை மேற்கொண்டுள்ளார்.தனது கிராமத்தில் நடத்தி வருபவர் ராஜ்கிரண் , அவரது மனைவியாக கீதா கைலாசம், அன்பு மகனாக தனுஷ் என அளவான , அழகான குடும்பத்தோடு தன் இட்லி கடையை ராஜ்கிரண் நடத்தி வருகிறார், வளர்ந்த பிறகு தனுஷ் கேட்டரிங் படித்துள்ள நிலையில், தங்களது இட்லி கடையை பல ஊர்களிலும் திறக்க ஆசைப்படும் தனுஷின் விருப்பத்துக்கு ராஜ்கிரன் ஒத்துக் கொள்ளாததால், பாங்காக்குக்கு தனுஷ் வேலைக்கு செல்கிறார், அங்கு அவர் தொழிலதிபர் சத்யராஜின் நிறுவனத்தில் பணிபுரிகிறார், அவருக்கு அருண் விஜய் மகனாகவும் ,ஷாலினி பாண்டே மகளாகவும் இருக்கிறார்கள். ஷாலினி பாண்டே தனுஷை நேசிக்க ,அவர்களது காதலுக்கு சத்யராஜின் ஒப்புதலும் கிடைத்து விடுகிறது,பொறுப்பற்று இருக்கும் தன் மகனை தனுஷோடு சத்யராஜ் அடிக்கடி ஒப்பீடு செய்வது பிடிக்காமல் இருக்கும் அருண் விஜய்க்கு தன் தங்கையை தனுஷ் திருமணம் செய்து கொள்வது அறவே பிடிக்காமல் இருக்கிறது .தனுஷ், ஷாலினி பாண்டே திருமணம் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் ராஜ்கிரண் இறந்து விடுவதாக தனுஷுக்கு செய்தி கிடைக்கிறது ,அதன் பிறகு மீண்டும் தனது பூர்வீக கிராமத்திற்கு திரும்பி வரும் தனுஷுக்கு ,அவருடைய தோழி நித்யா மேனன் உறுதுணையாக இருக்கிறார் மீண்டும் தனது தந்தையின் இட்லி கடையை தானே தொடர்ந்து நடத்த முடிவெடுக்கிறார்.அதன்பின் என்ன நடந்தது ?என்பதை படத்தின் மீதி கதை.

படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள தனுஷ், முருகன் என்னும் கதாபாத்திரத்தில் நாம் அன்றாட வாழ்வியலில் சந்திக்கும் சராசரி மனிதனின் ஆசைகள், லட்சியங்கள், கனவுகள் அதற்கு சில சமயங்களில் இடையூறாக ஏற்படும் சம்பவங்களுக்கேற்ப கால சூழலுக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளுதல் போன்ற அம்சங்கள் நிறைந்த கதாபாத்திரத்தில் தன்னுடைய பண்பட்ட நடிப்பை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

சிவனேசன் என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண் நடித்துள்ளார் அவருடைய எதார்த்தமான நடிப்பினை மிகச் சிறப்பாக அவர் வெளிப்படுத்தி உள்ளார் அவருடைய உடல் மொழிக்கும் தோற்றத்திற்கும் மிகவும் காந்தமாக பொருந்தக்கூடிய கதாபாத்திரத்தில் தன்னுடைய அனுபவ நடிப்பை தான் தோன்றும் அனைத்து காட்சிகளிலும் வெளிப்படுத்தி உள்ளார்.

கிராமத்து பெண்ணாக தனுஷுக்கு உற்ற துணையாக வரும் கதாபாத்திரத்தில் தனக்கே உரித்த பாணியில் இயல்பாக நடித்துள்ளார் நித்யா மேனன் ,மேலும் சத்யராஜ், பார்த்திபன் ,சமுத்திரகனி, கீதா கைலாசம் ஷாலினி பாண்டே, இளவரசு என பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் தங்களது தனித்தன்மை மிளிர நன்கு நடித்துள்ளார்கள் மற்றும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் புதிய பரிமாணத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

மண் மணக்கும் அழகிய கிராமிய வாழ்வியலை கண்களுக்கு இனிமையாக காட்சிப்படுத்தி உள்ளார் ஒளிப்பதிவாளர் கிரண் கவுசிக். படம்வெளியாவதற்கு முன்பே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்த பாடல்களை ஜீ வி பிரகாஷ் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்,அவரது பின்ணனி இசையும் கதை மற்றும் கதாபாத்திரங்களுடன் படம் முழுக்க கூடவே பயணித்திருக்கிறது.

முருகன் என்னும் மனிதனின் வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், உணர்ச்சி போராட்டங்கள், வெற்றி இலட்சியக்கனவுகள் இவற்றை மையமாகக் கொண்ட கதைக்கு இணக்கமான திரைக்கதை காட்சிகளை அமைத்து ,கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை அதில் தேர்வு செய்து நடிக்க வைத்து சிறப்பானதொரு படத்தை இயக்கியுள்ளார் தனுஷ்.

மொத்த குடும்பமாக அனைவரும் இந்த இட்லி கடைக்கு சென்று ,தலைமுறைகள் மாறினாலும் பாரம்பரியம் மாறாமல் பக்குவத்தோடு பரிமாறி இருக்கும் இந்த படத்தை பார்த்து ரசித்து மகிழலாம்.

Spread the love