Tuesday, April 21

‘தண்டகாரண்யம்’ – திரைப்பட விமர்சனம்

இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தண்டகாரண்யம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்காக போராடி வரும் அண்ணன் சடையன் (தினேஷ்).அவரது மனைவி ரித்விகா, மற்றும் தனது பெற்றோர்களுடன் வசித்து வரும் முருகன் (கலையரசன்) தற்காலிக வனக்காலவர் ஊழியராக உள்ளார். இந்நிலையில், வனத்துறையினரை சடையன் எதிர்த்ததால், அவரது தம்பி முருகன் அந்த தற்காலிக பணியினையும் இழக்க நேரிடுகிறது .அதன்பின் நக்சல் ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் சிறப்பு ஆயுதப்படைபயிற்சிக்கு முருகனை, சடையன் அனுப்புகிறார். ஆனால் அங்கு நடக்கும் சம்பவங்கள், முருகனையும், அவரது குடும்பத்தையும் பலவாறு பாதிப்புக்குள்ளாக்குகிறது, அதன் பின் என்ன நடந்தது ?என்பதுதான் ‘தண்டகாரண்யம்’ திரைப்படத்தின் மீதி கதை.

அண்ணன் சடையனாக தினேஷம், தம்பி முருகனாக கலையரசனும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களை அப்படியே எடுத்துக்காட்டு விதத்தில் ,கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.லப்பர் பந்து பட வெற்றிக்குப்பிறகு நடிகர் தினேஷ்- க்கும் வாழை படத்திற்குபிறகு நடிகர் கலையரசனுக்கும் மிக முக்கியமான படமாக இந்த தண்டகாரண்யம் படம் அமையும் வகையில் அவர்களது கதாபாத்திரப்படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் சபீர் கல்லரக்கல், பாலசரவணன், ரித்விகா, வின்சு சாம், வேட்டை முத்துக்குமார் அருள் தாஸ் .யுவன் மயில்சாமி என பலரும் பல கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.அடர்ந்த காடுகளையும், அந்த காடுகளில் வாழும் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களின் யதார்த்தமான வாழ்வியலையும் கொண்டு அமைந்திருக்கும் கதை களத்திற்கு இணக்கமான காட்சி பதிவுகளை ஒளிப்பதிவாளர் பிரதீப் கலைராஜா நயம் பட உருவாக்கியுள்ளார். படத்தின் பிளஸ் பாயிண்ட்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவைகளில் மற்றும் ஒன்று ஜஸ்டின் பிரபாகரனின் இசை. இவரது பாடலும் பின்னணி இசையும் , மையக்கதைக்கு மிகவும் உறுதுணையாக அமைந்துள்ளது.

இந்த மண்ணின் ஆதி குடிகளான பழங்குடி மக்களின் வாழ்வியலில், அதிகார வர்க்கத்தினரால் அவர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்களையும், ,வன்முறைகளையும் யதார்த்தமான கதைக்களத்தோடு திரைமொழியில் பதிவு செய்துள்ளார் இயக்குனர் அதியன்ஆதிரை . மேலும் தான் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான கலைஞர்களை இயக்குனர் தேர்வு செய்துள்தால், அது அவரின் கதையை சிறப்பாக பதிவு செய்வதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது.

புதிய களத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த படம் அனைத்து ரசிகர்களையும் கவரும்.

Spread the love