Monday, June 1

யாதும் அறியான்-திரை விமர்சனம்

எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன்  ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர்  முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
தினேஷும் ,பிரானாவும் காதலர்கள், காதலியுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தினேஷ் விருப்பப்பட்டாலும் அவரது விருப்பத்திற்கு பிரானா சம்மதிப்பதில்லை, இது பற்றி தினேஷ் தன்னுடைய நண்பரிடம் கூற ,அவரது திட்டத்தின் படி ,தினேஷின் நண்பர் ஆனந்த் பாண்டி, அவரது காதலி ஷ்யாமல், தினேஷ்-பிரானா என இந்த இரண்டு இளம் ஜோடிகளும் வனப்பகுதியில் இருக்கக்கூடிய ஒரு சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள், அந்த விடுதியில் அப்பு குட்டி வேலை செய்து வருகிறார், அந்த விடுதியில், அதன்பின் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் தினேஷுக்கு அதிர்ச்சியினை தருகிறது ,இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களுக்கு பின்னணி என்ன? 2024 ஆம் ஆண்டு 2026 ஆக மாறும் ட்விஸ்களுடன் யாதும் அறியான் படத்தின் மீதி கதை பல திருப்புமுனைகளுடன் நகர்கிறது .

கதையின் நாயகனாக தினேஷ், இந்த படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார், ஒரு அறிமுக நடிகர் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மைய கதாபாத்திரத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது, படத்தின் முதல் பகுதியில் அப்பாவியாகவும், இரண்டாவது பகுதியில் அதிலிருந்து மாறுபட்ட நடிப்பை வழங்கும் கதாபாத்திரத்திலும் தினேஷ் நன்கு நடித்துள்ளார் ,நாயகி பிரானாவின் தோற்றமும் நடிப்பும் கவரும்படி உள்ளது ,மற்றும் தினேஷ் நண்பராக வரும் ஆனந்த் பாண்டி அவரது காதலியாக வரும் ஷ்யாமல் ,விடுதியில் வேலை செய்பவராக நடித்திருக்கும் அப்பு குட்டி என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் .திரை

படத்தின் கதை களத்திற்கு பொருத்தமான வகையில் ஒளிப்பதிவாளர் எல்.டியின் காட்சி பதிவுகள் ,சிறப்பாக அமைந்துள்ளது, அதேபோல இசையமைப்பாளர் தர்மபிரகாசின் பாடல்கள் ரசிக்கும் படியும் ,காட்சிகளுக்கு இணக்கமான பின்னணி இசையும் நன்கு அமைந்திருக்கிறது.

எடுத்துக்கொண்ட கதைக்கு கணிக்க முடியாத அளவிற்கு ட்விஸ்ட்களுடன் கூடிய திரைக்கதை காட்சிகளை அமைத்து ,விறுவிறுப்பான முறையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கோபி., குறிப்பாக 2024 ஆம் வருடம் நடக்கும் கதையை 2026 ஆம் ஆண்டுக்கு கொண்டு செல்லும் வகையில் கதை அமைக்கப்பட்டு இருப்பதும் அதில் அவர் சில கற்பனை காட்சிகளை இணைத்து இருப்பதும் படத்தின் கவனிக்கத்தக்க அம்சங்களில் ஒன்றாக உள்ளது .

மொத்தத்தில் யாதும் அறியான், இளம் ரசிகர்களை கவர்வான்

Spread the love