Saturday, April 25

’திருக்குறள்’ -திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவிஞர்களைப் பற்றியும் ,மன்னர்களை பற்றியும், முழு நீள திரைப்படங்கள் வந்திருந்தாலும் முழுக்க, முழுக்க திருவள்ளுவரை கதையின் நாயகனாக கொண்டு திரைப்படம் வந்தது இல்லை என்றே கருதப்படுகிறது., உலக அளவில் தமிழின் தமிழரின் பெருமையினை பறைசாற்றும் திருக்குறளை எழுதிய ஆசான் ஐயன் திருவள்ளுவரே இந்தப் படத்தின் கதையின் நாயகனாக உள்ளார், அவரது காதல் மனைவியாக வாசுகி உள்ளார் ,அவர், தான் உலக மக்களுக்கு பல்வேறு தலைப்புகளில் நன்மை பயக்கும் விதமாக பல குறள்களை எழுதிக் கொண்டு வருகிறார், அந்த சமயத்தில் ,அக்காலத்தில் இருந்த அரசாங்கங்களில் நடக்கும் பல்வேறு விதமான சூழ்ச்சிகளினால், அரசாட்சிகளுக்கு பல இன்னல்களும் இடையூறுகளும் ஏற்படுகின்றன ,இது பற்றி அறியும் திருவள்ளுவர் எண்ணற்ற மக்களின் உயிரினை பழி வாங்கும் போரினையும் ,அதனால் ஏற்படும் இன்னல்களையும் களையும் பொருட்டு, மக்களுக்கு நல்லாட்சி தரும் பணிகளில் ஈடுபடுகிறார் ,இவ்வாறாக தமிழ் பணியும் ,அரசு பணியினையும் செவ்வனே செய்யும் வள்ளுவர் அறத்தின் வழியே நின்று மக்களை காப்பாற்ற போராடுகிறார் ,இந்தச் சூழலில் படைத்தலைவனாக உள்ள பருதிக்கும் , பவளக் குடிக்கும் காதல் மலர்கிறது, பல்வேறு விதமான காலச் சூழலில் அவர் திருக்குறளை எவ்வாறு எழுதி முடித்தார் ?அந்த காலகட்டத்தில் நடைபெற்ற போர் என்னவானது? படைத்தலைவனுக்கும் பவளக் கொடிக்கும் இடையான காதல் என்னவானது ?போன்ற பல்வேறு விடயங்களுக்கு,விடையினை சொல்கிறது படத்தின் மீதி கதை.

சமூகத்தில் மக்களின் உணர்வுகளோடு ஒன்றி போயிருக்கும் வரலாற்று கதாபாத்திரங்களை பற்றி ஒவ்வொருவரின் மனதிலும் ஏராளமான கற்பனை வடிவங்கள் நிரம்பி இருக்கும், அது போன்றதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் பொழுது, உடல் மொழி, குரல் மொழி மிகவும் சிறப்பாக அமைந்து, அவர்கள் மனதில் மக்கள் மனதில் வடிவமைத்திருந்த கதாபாத்திரங்களுக்கு உயிரூட்ட கூடிய வகையில் நடித்தால் மட்டுமே அந்த கதாபாத்திரங்களுக்கு வலிமை கிடைக்கும், இது போன்றதொரு புகழ்மிக்க திருவள்ளுவர் கதாபாத்திரத்தில் கலைச் சோழனும் ,அவரது மனைவி மனைவியாக வாசுகி என்னும் கதாபாத்திரத்தில் தனலட்சுமியும் தாங்கள் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பான நடிப்பை கொடுத்து மக்களின் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்துள்ளார்கள் என்று சொல்லலாம்.

படைத்தலைவன் பாத்திரத்தில் குணா பாபுவும் , பவளக்கொடி கதாபாத்திரத்தில் பாடினி குமாரும் காதல் இணையராக நடித்துள்ளார்கள், மேலும் சுகன்யா ,சந்துரு,ஓ. ஏ. கே சுந்தர், சுப்பிரமணிய சிவா, கொட்டாச்சி போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றதொரு சிறப்பான நடிப்பை கொடுத்து, படத்தின் கதையோட்டத்திற்கு உறுதுணையாக நின்று உள்ளார்கள்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்களும், அவருக்கே உரித்தான பாணியில் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்து உள்ளது.

முற்கால மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் கதைக்கேற்ற காட்சி களங்களுக்கு இணக்கமான ஒளிப்பதிவை எட்வின் சகாயும் , அக்கால கட்டத்தினை பதிவு செய்யும் வாழ்வியல் கட்டமைப்புகளை கலை இயக்குனர் சுரேஷ் கலேரியும் ,ஆடை வடிவமைப்பாளர் சுரேஷ்குமாரும் சிறப்பாக செய்துள்ளார்கள்.படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் செம்பூர் கே. ஜெயராஜ், நமக்கு நன்கு தெரிந்த திருவள்ளுவரின் தெரியாத பக்கங்களை ,அழகான வாழ்வியல் சூழலோடு திரைக்கதை ஆக்கி, பொருத்தமான வசனங்களை சேர்த்து ,நல்லதொரு படைப்பை வழங்கி உள்ளார் .

ஒன்றரை அடியால் உலக வாழ்வியலை தனது குறல்கள் வழியே பதிவிட்டு, படிக்கும் மக்களுக்கு வாழ்வியல் நெறிமுறைகளை உணர்த்திய ,அய்யன் திருவள்ளுவரின் கதையினை, அவர் வாழ்ந்த காலத்திற்கே சென்று பார்க்கும் வாய்ப்பினை படமாக்கி கொடுத்துள்ளார் இயக்குனர் ஏ ஜி பாலகிருஷ்ணன்

Spread the love