Sunday, April 19

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் -விமர்சனம்

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், மற்றும் லாஸ்லியா நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் .

கதையின் நாயகன் ஹரிபாஸ்கர் கல்லூரி காலத்தில் லாஸ்ட்லியாவை விடாமல் காதலிக்க முயற்சிக்கிறார் ,ஆனால் லாஸ்ட்லியாவோ அவரது காதலை ஏற்க மறுத்து விடுகிறார். கல்லூரி முடிந்த பிறகு நான்கு ஆண்டுகளில் ஒரு பெண்ணை காதலித்து தன்னுடைய வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவேன் என ஹரி பாஸ்கர் சபதம் எடுக்கிறார். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஹரிக்கு ஏற்படுகிறது. காலத்தின் நிர்பந்தம் அவரை லாஸ்ட்லியாவின் வீட்டிற்கே வேலைக்குச் செல்லும் நிலைமையை தருகிறது .இருப்பினும் அங்கேயே பணிபுரிந்து கொண்டு மீண்டும் லாஸ்ட்லியாவின் மனதில் இடம் பிடித்து காதலில் வெற்றி அடைய நினைக்கிறார் ஹரி. இந்த சூழல் ஹரி ,லாஸ்ட்லியாவின் மனதில் இடம் பிடிக்க வழி வகுத்ததா ?அதன்பின் அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்ன? என்பதுதான் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் மீதி கதை .

கதையின் நாயகனாக அறிமுகமாகியுள்ள ஹரிபாஸ்கர் ஏற்கனவே இணைய வழி காணொளிகள் மூலமாக, தன்னுடைய சேனல் வழியாக இளைஞர்களிடம் மிகவும் பிரபலமானவர். அதனால் அவர் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு அவரது இணைய ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது, இணையத்தில் அவருடைய ஜம்ப் கட்ஸ் மிகவும் பிரபலமான ஒன்று , அதில் அவரே இரண்டு ,மூன்று கதாபாத்திரங்களில் மாறி, மாறி தோன்றி பல முகபாவனைகளை சிறப்பாக வெளிப்படுத்துவதில் திறமை பெற்றவராய் திகழ்ந்தவர் , அந்த முன் அனுபவம் இந்தப் படத்தில் அவர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு மிகவும் உறுதுணையாக அமைந்திருந்ததால் அவரால் நடிப்பில் எளிதாக ரசிகர்களை கவரும் வாய்ப்பு கிடைத்துள்ளது .கதையின் நாயகியாக இசை என்னும் கதாபாத்திரத்தில் லாஸ்ட்லியா நடித்துள்ளார் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை அவரும் வெளிப்படுத்தி உள்ளார் மேலும் இளவரசு,சாரா, பிக் பாஸ் ரயான் போன்றவர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளார்கள்.

இன்றைய இளைஞர்களின் வாழ்வியல் சூழலை கதைக்களமாக எடுத்துக்கொண்டு,அதற்கு பொருத்தமான கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து, அதனுடன் கூடவே நல்லதொரு தொழில்நுட்ப கூட்டணியும் இணைத்துக்கொண்டு, இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் நல்லதொரு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் அருண் ரவிச்சந்திரன்.ஓஷோ வெங்கட்டின் இசை, படத்தின் பல காட்சிகளில் கதையோட்டத்துடன் நம்மை பயணிக்க வைக்க பெரிதும் உதவியுள்ளது,பாடல்களும் கேட்கவும், பார்க்கவும் இதமாக உள்ளன.

முழு நீள பொழுதுபோக்கு படமான இந்த மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் இளம் தலைமுறை பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும்.

Spread the love