Monday, May 25

‘பிரதர்’- திரை விமர்சனம்

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ் . பாஸ்கர், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை ஆசிஷ் ஜோசப் கையாள , கலை இயக்கத்தை ஆர் .கிஷோர் மேற்கொண்டிருக்கிறார்.

அக்கா-தம்பி சென்டிமென்ட்-ஐ பேசும் இந்த படத்தின் கதையின் நாயகனான ஜெயம்ரவி ,அநீதிக்கு எதிராக எப்போதும் சட்டம் பேசுபவர், இதனால் அவரது அப்பாவுக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழ,ஜெயம் ரவியின் அக்கா பூமிகா இனிமேல் தம்பியை நான் பார்த்துக்கொள்கிறேன், அவனை ஒரு நல்ல பொறுப்புள்ளவனாக மாற்றுகிறேன் என்று கூறி தம்பியை , தன்னுடன் தன் கணவன் இருக்குமிடத்துக்கு அழைத்து கொண்டு செல்கிறார்..ஆனால், அங்கு அனைத்துக்கும் அட்டவணை போட்டு வாழும் அந்த குடும்பமே ஜெயம் ரவியின் வருகையால் பிரியக்கூடிய சூழல் ஏற்படுகிறது .அதன் பின் நடந்தவை என்ன ?என்பதே மீதி படத்தின் கதை ஆகும்.

ஃபேமிலி டிராமா ஜானர் கதை களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் நாயகனாக கார்த்திக் என்னும் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவி ,தன்னுடைய பாணி பிளஸ் இயக்குனரின் பாணியினையும் கலந்து நன்கு நடித்துள்ளார். மேலும் கதாநாயகியாக அர்ச்சனா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன்.மற்றும் நட்டி, சரண்யா பொன்வண்ணன் போன்றவர்களும் தாங்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான வகையில் நன்கு நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்குப்பிறகு பூமிகாவை பொறுப்பான சகோதரி கதாபாத்திரத்தில்  மீண்டும் பார்க்க கூடிய வாய்ப்பு ரசிகர்களுக்கு கிட்டியுள்ளது ,அவர் இனி தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க, இந்தப்படமும் ,அவரது கதாபாத்திரமும் வழிவகுக்கும் என்று நம்பலாம், மேலும் வழக்கமான தன் பாணியில் விடிவி கணேஷ்,MS பாஸ்கர் போன்றோரும் தங்களது நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்கள்.

தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் ஊட்டியின் பியூட்டியை விவேகானந்த் சந்தோஷம் அழகாக பதிவு செய்துள்ளார் .மக்காமிஷி பாட்டில் ஹாரிஷ் ஜெயராஜும், சாண்டி மாஸ்டரும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடிக்கிறார்கள்.

காதலும், குடும்ப சென்டிமென்டும் நிறைந்த கதையினை, நகைச்சுவையுடன் கலந்து முழு நீள பொழுபோக்கு படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் ராஜேஷ், இவரது முந்தய படங்களை பார்த்து இந்த படத்தினையும் பார்க்க செல்லும் ரசிகர்களை, இந்த படத்திலும் அவர் ஏமாற்றவில்லை .

மொத்தத்தில் குடும்பத்துடன் பார்க்க வேண்டியவர்தான் இந்த பிரதர். .

Spread the love