குழந்தைகளின் உலகத்தை கண்முன்னே காட்சிப்படித்தியுள்ளது ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ BUJJI AT ANUPATTI

கிராமம் ஒன்றில் வசிக்கும் சிறுமி துர்கா (பிரணிதி சிவசங்கரன்), ஆட்டுக்குட்டி ஒன்றினை தன்னுடைய வீட்டில் அன்புடன் வளர்க்கிறார்.அவளது அண்ணன் சரவணன் (கார்த்திக் விஜய்).துர்கா அந்த ஆட்டுகுட்டிக்கு புஜ்ஜி என்று பாசமாக பெயரும் வைத்து வளர்த்துவருகிறார், ஒருசமயம் சிறுமியின் அப்பா, தான் மது குடிக்க வேண்டி,அந்த புஜ்ஜி ஆட்டை ஒருவருக்கு விற்று விடுகிறார் .செல்ல ஆட்டு குட்டியினை காணாது மனம் வருந்தும் சிறுமியும், அவரது அண்ணனும் அந்த புஜ்ஜி ஆட்டை தேடி செல்கிறார்கள். அந்த தேடலின் போது அவர்கள் சந்தித்த நபர்கள், எதிர் கொண்ட சூழ்நிலைகள்? இறுதியில் அவர்களுக்கு அவர்களது ஆசை புஜ்ஜிஆட்டுக்குட்டி மீண்டும் கிடைத்ததா?, இல்லையா? என்பது தான் இந்த படத்தின் மீதிக்கதை.
கதையின் முக்கிய மைய கதாபாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்கள் பிரணிதி சிவ சங்கரன் மற்றும் கார்த்திக் விஜய் ஆகியோர் இயல்பான நடிப்பினை வெளிபடித்தியுள்ளார்கள். மேலும் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் என ஏனைய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் யதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார்கள்.கார்த்திக் ராஜா இசையில் பாடல்களும், காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி இசையும் கதையோட்டத்துடன் கலந்து பயணித்துள்ளது.

சிறார்களுக்கான படங்கள் அருகி உள்ள காலகட்டத்தில் ,அத்திப்பூத்தாற்போல உருவாகியிருக்கும் இந்த படத்தினை எழுதி இயக்கியிருப்பவர் ராம் கந்தசாமி ,அவரது பணி பாராட்டுக்குரியது.
எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்ய வேண்டும் என்ற அளப்பரிய கருத்தினை திரைமொழியில் படைத்துள்ள இந்த படத்தினை குழந்தைகளுடன் பார்த்து ரசிக்கலாம் .
