தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் அறிமுக படமே மிகப்பெரிய வரலாற்று வெற்றி என்பது மிகவும் அபூர்வம். அதனை 2007-ம் ஆண்டு இதே நாளில் நிகழ்த்திய படம் தான் ‘பருத்தி வீரன்’. இந்தப் படத்தின் மூலமாகவே கார்த்தி நாயகனாக அறிமுகமானார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தினை அமீர் இயக்கியிருந்தார். இந்தப் படம் செய்த சாதனை, கடுமையாக உழைத்த ஒரு அறிமுக நாயகனுக்கு கிடைத்த வெற்றி.
உலகமெங்கும் மாபெரும் வரவேற்பைப் பெற்று, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்களின் பட்டியலில் கார்த்தியையும் இணைத்தது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ச்சியாகத் தனது அடுத்தடுத்த படங்களிலும் தக்க வைத்தார் கார்த்தி. ‘பையா’, ‘நான் மகான் அல்ல’,‘சிறுத்தை’, ‘மெட்ராஸ்’, ‘கொம்பன்’, ‘தீரன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘கைதி’ என மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்து தென்னிந்திய முன்னணி நாயகர்களின் பட்டியலில் ஒருவரானார்.
கமர்ஷியல் வெற்றி மட்டுமன்றி இவரது படங்கள் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும், 15 ஆண்டுகளில் 20 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அதில் பாதிக்கும் மேல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற படங்கள். அந்தளவுக்குத் தனது திரையுலக வாழ்க்கை பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது வசூல் சாதனை படைக்கும் நடிகராக நிற்கிறார் கார்த்தி.
இன்று ‘பருத்தி வீரன்’ வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இதற்காக பலரும் கார்த்திக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
கார்த்தியும், தனது 15 ஆண்டுக்கால பயணத்துக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறியதாவது,
“’பருத்தி வீரன்’ திரைப்படத்தில் என்னுடைய திரை வாழ்க்கை தொடங்கியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவே நான் உணர்கிறேன். (அந்தப் படத்தில்) என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சாரால் வடிவமைக்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்பட்டது. எனக்குக் கிடைத்த அத்தனை புகழும் அமீர் சாரையே சேரும். செய்யும் வேலையில் என்னை முழுமையாக ஆழ்த்திக் கொண்டு அதை ரசித்தும் செய்ய வேண்டும் என்று அவர் எனக்குச் சொன்ன அறிவுரையே நான் கற்ற பல பாடங்களில் பொக்கிஷமாக நினைக்கும் ஒரு பாடம். இந்த அழகான பாதையை வகுத்துக் கொடுத்த அமீர் சார், ஞானவேல், அண்ணா, என் அன்பார்ந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்,” என்றார் கார்த்தி.