Friday, June 26

‘அங்கீகாரம்’- திரைப்பட விமர்சனம்

விளையாட்டு வீரர்களின் இலட்சிய கனவு, வெற்றி இலக்கை நோக்கிய அவர்களின் போராட்டங்களை திரையில் பதிவு செய்ய வந்திருக்கிறது ‘அங்கீகாரம்’.


கதையின் நாயகன் ஏழ்மையான வாழ்வியலில் உள்ள இளைஞர் கே.ஜெ.ஆர், தடகளப் போட்டிகளில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி திறமையான ஓட்டப்பந்தய வீரராக உருவாகிறார். ஓட்டப்பந்தயத்தில் தான் சாதிக்கவேண்டும் என்ற இலட்சிய கனவோடு வாழும் அவர் ,தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்று காமன்வெல்த் போட்டிக்கு தகுதியும் பெறுகிறார்.ஆனால் அவரது திறமைக்கு சவாலாக அதிகார அரசியல் குறுக்கிடுகிறது. அதனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தனது உரிமைக்காக அவர் நீதிமன்றத்தை நாடி தனது அங்கீகாரத்தை பெற போராடுகிறார்.இறுதியில் அவருக்கு வெற்றி கிடைத்ததா ? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்துள்ள ஆதிரன் என்னும் கதாபாத்திரத்தில் கே.ஜெ.ஆர், ஒரு தடகள வீரருக்கான உடல் மொழியையும், தோற்றத்தையும் கொண்டு மிகவும் அர்ப்பணிப்புடனான நடிப்பை வெளிப்படுத்தியு ள்ளார். மேலும் ஆண்டாள் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜி வெங்கடேஷ், கதாநாயகனின் சகோதரி செல்வியாக நடித்துள்ள இசபெல்லா,பயிற்சியாளர் ருத்ரவாக நடித்துள்ள வசந்தரா, அமைச்சராக நடித்துள்ள த மன்சூர் அலிகான், மற்றும் சிந்துரி அஜித் கோஷி ,ரமா போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்

ஜிப்ரனின் இசையில் பாடல்கள் ரசிக்கும் படி உள்ளன பின்னணி இசை கதையோட்டத்திற்கு பெரும் பக்கபலமாக அமைந்து நகரும் காட்சிகளுக்கு சரியான முறையில் இசை வடிவம் கொடுத்திருக்கிறது.

கதைக்கும் காட்சிகளுக்கும் இணக்கமான ஒளி அமைப்புகளையும், கேமரா கோணங்களையும் ஒளிப்பதிவாளர் ஏ விஸ்வநாத் அமைத்து ,சிறப்பான முறையில் காட்சி பதிவு செய்திருக்கிறார்.

ஒரு திறமையான விளையாட்டு வீரன் தான்,விளையாடும் விளையாட்டிலும் ,கலந்து கொள்ளும் போட்டிகளிலும் ,போட்டிக்காக அவர் சந்திக்கும் தடைகளை தன்னுடைய முயற்சியால் தாண்டி விட்டாலும், சமூகம் மற்றும் விளையாட்டுத் துறை போன்றவைகளால் அந்த விளையாட்டு வீரருக்கு கொடுக்கப்படும் தடைகளை தாண்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல ,அதற்காக பெரிய சமூகநீதி போராட்டத்தையே நடத்த வேண்டி உள்ளது என்னும் கதைக்களத்தில் படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குனர் தென்பாதியான்.

மொத்தத்தில் இந்த ‘அங்கீகாரம்’.விளையாட்டு வீரர்களின் குரலை, திரையில் ஓங்கி ஒலித்து, பதிவு செய்துள்ள விதம் பாராட்டக்கூடியது .பொழுதுபோக்கோடு , சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களையும் விரும்பும், ரசிகர்களிடையே இந்த ‘அங்கீகாரத்துக்கு ‘. நிச்சயம் ‘அங்கீகாரம்’.” கிடைக்கும்.

Spread the love