கர்நாடகாவில் ,சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘விஜயானந்த்’ .பெரிய தொழில் நிறுவனமான வி ஆர் எல் உருவானவிதம், அந்த நிறுவனத்தை கட்டமைக்க அதன் நிறுவனர் விஜய் சங்கேஷ்வர் எப்படியெல்லாம் உழைத்தார், என்பதை ஒரு சுயசரிதை ஆக சொல்லி இருக்கும் படம் தான் விஜயானந்த்.

கர்நாடகாவில் கதக் என்ற இடத்தில் இரண்டு சகோதரர்களுடன் பிறந்து ,தந்தை பி.ஜி. சங்கேஷ்வர் நடத்தி வந்த பிரிண்டிங் பிரஸ் தொழிலில் பல புது தொழில் நுட்பங்களை கொண்டு ,அதில் வளர்ச்சியை கொண்டு வந்த பின் விஜய் சங்கேஷ்வர் மேலும் தன்னுடைய முயற்சியில் ஒரு லாரியை வாங்கி டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபடுகிறார் அதன் பின் பத்திரிகை ,அரசியல் என் பல துறைகளிலும் பயணிக்கும் அவரது வெற்றி வாழ்கை பயணம்தான் இந்த படத்தின் கதை .

ஒரு நான்கு தலைமுறையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான உணர்வுகளை விவரிக்கும் திரைப்படமான இந்த ‘விஜயானந்த்தில், குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் மூத்த உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இடையேயான பாச பிணப்பும், வாரிசுகளின் எதிர்கால கனவு திட்டங்களுக்கு எப்படியெல்லாம் மூத்தவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி சொல்லுகிற வகையில் திரைக்கதை அமைத்து நிறைவான பயோபிக் திரைப்படமாக தந்துள்ளார் இயக்குனர் ரிஷிகா சர்மா.
படத்தின் நாயகனாய் , விஜய் சங்கேஸ்வராக நிஹால் நடித்திருக்கிறார். இவர்,வலுவான கதாபாத்திரத்துக்கு தன்னுடைய இயல்பான நடிப்பை வழங்கி அனைவரின் பாராட்டுக்களை பெரும் விதத்தில் நடித்துள்ளார் .

தந்தை கதாபாத்திரத்தில் பி.ஜி .சங்கேஷ்வரராக ஆனந்த் நாக்,அவரது மனைவியாக வரும் வினயா பிரசாத் ஆனந்த் சங்கேஷ்வரராக நடித்திருக்கும் பாரத் போபனா,லலிதா சங்கேஷ்வரராக சிரி பிரகலாத் இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் தன்மை உணர்ந்து யதார்த்தமாய் நடித்துள்ளார்கள்.
கீர்த்தன் பூஜாரியின் ஒளிப்பதிவும் கோபி சுந்தரின் இசையும் ,ஹேமந்த்குமாரின் படத்தொகுப்பும் இயக்குனரின் படைப்புக்கு ஏற்ற சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளன .
வாழ்க்கையில் எப்படி வெற்றிபெறுவது? என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய முன்னுதாரணமாக இருப்பதோடு, மேலும் உழைப்பின் மூலம் கிடைக்கும் வெற்றியின் உன்னதத்தை உணர்த்தும் சிறந்த சுயசரிதை படமாகவும் உள்ளது.
