Tuesday, December 30

சிறை- திரைப்பட விமர்சனம்

சிறை -திரைப்பட விமர்சனம்

சிறையில் இருக்கக்கூடிய கைதிகளை பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய பணியில் இருப்பவர் ஆயுதப்படை காவலரான விக்ரம் பிரபு ,அந்தப் பணியின் படி கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொழுது அந்த கைதி அவரிடம் இருந்து தப்பித்து செல்ல நினைக்கும் வேளையில் ,அந்த கைதியை சுட்டு விடுகிறார்,, இதனால் அந்த கைதி இறந்துவிட விக்ரம் பிரபு மற்றும் அவருடன் சென்ற இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சூழலில் மற்றுமொரு விசாரணை கைதியான அக்‌ஷய் குமார் என்ற இளைஞனை சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியின் போது அந்த கைதி அங்கு நிலவும் ஒரு சூழ்நிலை சாதகமாக்கி கொண்டு ,அங்கிருந்து தப்பித்து விடுகிறார் இதன்பின் என்ன நடந்தது ?என்பதுதான் படத்தின் மீதி கதை.


சரவணன் என்னும் கதாபாத்திரத்தில் விக்ரம் யதார்த்தமான நடிப்பை நன்கு வெளிப்படுத்தி தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அதேபோல அப்துல் ரௌஃப் என்னும் கதாபாத்திரத்தில் அடித்துள்ள எல்.கே. அக்ஷய குமாரும் தன்னுடைய முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார் .அதேபோல அனுஷ்கா அனில் குமாரும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோட்டத்துடன் பயணித்து ,கதாபாத்திரங்களின் உணர்வுகளை ,சிறப்பான முறையில் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இயக்குனர் தமிழ், சுரேஷ் ராஜகுமாரியின் திரைக்கதை எடுத்துக்கொண்ட நேர்த்தியான கதைக்கு, இண க்கமான காட்சிகளை ரசிக்கும் படி கொண்டு செல்கிறது. மற்றும் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜின் படத்தில் இருக்கும் வலுவான திரைக்கதைக்கு மேலும் வளம் சேர்க்கும் வகையில் ,இணைந்து பயணித்துள்ளது.

டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். காவல்துறை சார்ந்த பல திரைப்படங்கள் ,நமக்கு ஏற்கனவே தமிழ் சினிமாவில் அறிமுகமாயிருந்தாலும் , இந்த படம் அவைகளில் இருந்து சற்று புதிய கோணத்தில் ஒரு கதை கருவைக் கொண்டு, அதற்கு ஏற்றதொரு நேர்த்தியான திரைக்கதையுடன் ,கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நட்சத்திரத்தேர்வுடன் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நன்கு உருவாக்கப்பட்டிருக்கிறது..

மொத்தத்தில் இந்தச் சிறை ரசிகர்களின் மனச்சிறையில் நிச்சயம் இடம்பெறும்.

Spread the love