லாக்கப் மரணங்களை பற்றி பேசும் கிரைம் திரில்லர் ஜானலில் உருவாகியுள்ள படம்.

காவல்துறையின் வாகன பரிசோதனையின் போது இருசக்கர வாகனத்தில் போதை பொருள் கொண்டு செல்லும் இளைஞனை காவல் நிலையத்திற்கு கொண்டு போய் முறைப்படி விசாரிக்கிறார்கள். அப்பொழுதுதான் விசாரணை வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள அந்த இளைஞன் பிரபல தாதா (பருத்தி வீரன் சரவணன் ) ஒருவரின் மகன் என்பது தெரிய வருகிறது.அதனை அறிந்த பிறகு காவல் அதிகாரிகள் மயக்க நிலையில் உள்ள அந்த இளைஞனை ஊருக்கு வெளியே விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். ஆனால் மறுநாள் அந்த இளைஞன் கொலை செய்யப்பட்டு கிடக்கிறான் .தன்மகனை காவல்துறையினர் தான் கொலை செய்து விட்டார்கள் என்று கருதும் தாதா அதற்கு காரணமான காவல் துறை அதிகாரியினரின் குடும்பத்தினரின் பழி தீர்க்க முடிவு செய்கிறார். இந்த நிலையில் உண்மையிலேயே அந்த இளைஞனை கொலை செய்தது யார்? எதற்காக அந்த இளைஞன் கொலை செய்யப்பட்டான் ?என்பதை எல்லாம் காவல்துறையினர் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்குகிறார்கள். இதற்கு பின்பு என்ன நடந்தது ?தாதாவின் மகனை கொன்றது யார் என கண்டுபிடிக்கப்பட்டதா ? இவற்றையெல்லாம் சொல்கிறது போலீஸ் ஃபேமிலி படத்தின் மீதி கதை.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் கதையின் மைய நாயகனாக ராஜா மலைச்சாமி நடித்துள்ளார் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு பொருந்தும் வண்ணம் தனது நடிப்பினை அவர் நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

சித்தப்பு சரவணன் இந்த போலீஸ் ஃபேமிலி படத்தில் தாதாவாகவும், மகன் மீது பாசம் கொண்ட தந்தையாகவும் தன்னுடைய உடல் மொழிக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். பல படங்களில் நகைச்சுவை நடிகராக ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்த காதல் சுகமாருக்கு இந்த படத்தில் ஒரு மாறுபட்ட நடிப்பை வழங்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது, அதனை அவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டு நன்கு நடித்துள்ளார்.மேலும் நாயகியாக நடித்திருக்க கூடிய நிஷா தூபே ,சுரேகா ,ரோஜன் லியோன் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஜெயக்குமார் தங்கவேல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்,கதைக்கும், காட்சிகளுக்கும் தக்கபடி தன்னுடைய கேமரா கோணங்களையும், நகர்வுகளையும் அவர் திறம்பட அமைத்துள்ளார். ஜெயா கே தாஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் .இவரது பின்னணி இசையில் காட்சிகளுக்கு இணக்கமான பின்புலம் நன்றாகவே கிடைத்துள்ளது. லாக்கப் மரணங்கள், அதனால் துறை சார்ந்த விஷயங்களில் ஏற்படும் பாதிப்புகள், மரணிப்பவர்களின் குடும்பங்கள் சந்திக்கும் இன்னல்கள் இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை களத்தினை எடுத்துக் கொண்டு அதனை சுவாரசியமாக நடத்திச் செல்லும் திரைக்கதையும் அமைத்து, கிரைம் திரில்லர் பாணியில் படத்தினை இயக்கியுள்ளார் இயக்குனர் பாலு. எம்.
மொத்தத்தில் இந்த போலீஸ் ஃபேமிலி அனைத்து அம்சங்களும் நிறைந்த நிறைவான படம்.
