நடிகர் மிர்ச்சி சிவா கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ,மாஸ்டர் மிதுன் ரியான், அஜு வர்கீஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடிக்க இயக்குனர் ராம் முதன்முறையாக காமெடி ஜனவரி இயக்கியிருக்கும் திரைப்படம் பறந்து போ.

கதையின் நாயகன் கோகுல் (சிவா ),சொந்தமாக மளிகை கடை வைக்க வேண்டும் என்ற ஆசை கனவோடு இருக்கிறார், அவரது மனைவி குளோரி (கிரேஸ் ஆண்டனி) புடவைகளை விற்பனை செய்து வரும் தொழில் செய்து வருகிறார் ,இந்த தம்பதியற்கு ஒரே ஆசை மகன் அன்பு, பல மாதத் தவணைகளோடு போராடிக் கொண்டிருக்கும் கோகுலும் அவரது மனைவியும் பொருளாதார தேடல்களுக்காக வெளியே செல்லும் வேளை களில், தங்களது மகனை வீட்டிற்குள் பூட்டிச் சென்று விடுகிறார்கள், ஒரு சமயம் கோயம்புத்தூரில் நடக்கும் எக்ஸ்போவில் தன்னுடைய வியாபர பணி நிமித்தமாக குளோரியும் சென்று விடுகிறார் ,சிறைப்பறவையாய் வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் இளம் சிறுவன் அன்புக்கு, எங்காவது தான் வெளியில் அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்ற ஆசைக்கனவுடன் இருக்கிறான் ,அவனுடைய கனவை தந்தை கோகுல் நிறைவேற்றி வைக்க வேண்டி அவருக்கு மிரட்டலில் வேறு விடுக்கிறான், அவனுடைய ஆசைக்கேற்ப தந்தை கோகுலும் ,ஆசை மகன் அன்புவை அழைத்துக் கொண்டு ஒரு பைக் பயணத்துக்கு கிளம்புகிறார். அந்தப் பயணம் தந்தை, மகனுக்கு இடையிலான அன்பையும், அடிமனத்தில் இருக்கும் பாசத்தையும் வெளியில் கொண்டு வருகிறது.அந்தப் பயணத்தின் போது மகனின் ஆசைகள் எல்லாம் தந்தை நிறைவேற்றி வைக்கிறார்.அதோடு கூட இந்த பயண வேளையில் .கோகுல் தான் பள்ளியில் படித்த பொழுது நேசித்திருந்த வனிதாவை (அஞ்சலி )சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது.தொடரும் அவர்களின் பயணத்தில் போது , அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் அதனால் ஏற்படும் அனுபவங்கள், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த இளம் சிறுவனின் ஆசைக்கனவுகளை நனவாகுதல் என்று மேலும் பயணிக்கிறது பறந்து போ படத்தின் மீதி கதை
கதையின் நாயகன் கோகுலாக நடித்துள்ள சிவா ,தன்னுடைய வழக்கம்போல தன்னுடைய ஒன்லைன் பஞ்சுகளுடனும் , அதே சமயத்தில் இயக்குனர் ராமின் நாயகனாகவும், பொருந்திப் போகக் கூடிய வகையில் அன்பான தந்தையாக, சிறப்பாக நினைத்துள்ளார், இந்தப் படம் இவருடைய திரை பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை,
அன்புவாக நடித்துள்ள சிறுவன் மிதுன் ரியான் படம் முழுவதும் தன்னுடைய அற்புதமான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்,ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுடன் பொருத்திப் பார்க்கக் கூடிய கதாபாத்திரத்தில், காமெடி, எமோஷன் என எல்லா பரிமாணங்களிலும் நன்கு நடித்துள்ளார். மற்றும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் கோகுலின் மனைவியாகவும், அன்புவின் அன்பாகவும் நடித்துள்ள கிரேஸ் ஆண்டனி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில், அளவான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக,, கோகுலை திருமணம் செய்து கொண்டதால், தன்னுடைய உறவினர்களோடு பிரிவுகள் ஏற்பட்டாலும், கணவன் மீதும் ,மகன் மீதும் அளவற்ற பாசம் கொண்ட கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார்.
வனிதாவாக நடித்துள்ள அஞ்சலியும்,அவரது கணவராக நடித்துள்ள அஜூர்கீஸ் மற்றும் பாலாஜி சக்திவேல் விஜய் யேசுதாஸ் போன்றவர்களும் தங்களுடைய கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
தந்தை ,மகன் மேற்கொள்ளும் பயணக்கதைக்கு ஏற்பட்ட வண்ணமாக ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரத்தின் கேமராவும் ரசித்து பயணித்துள்ளது .
சந்தோஷ் தயாநிதியின் இசையில், மதன் கார்க்கியின் வரிகளில்,அனைத்து பாடல்களுமே மிக எளிமையாகவும் ,இனிமையாகவும் அமைந்துள்ளன.அதேபோல யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், கதாபாத்திரங்களின் மனஉணர்வுகளை , வாழ்வியல் காட்சிகளின் நிகழ் சூழலை ஆழமாக பதிவு செய்வதில் பெரும் பங்காற்றியுள்ளது .

‘கற்றது தமிழ்’, ‘தரமணி’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ போன்ற படங்கள் மூலம் திரை ரசிகர்களின் மனதில் பெரும் இடம் பிடித்திருந்த இயக்கிய ராம், முதன்முறையாக காமெடி ஜானரில் இந்த திரைப்படத்தினை சிறப்பாக இயக்கியுள்ளார், பொருளதார .தேடல்களுக்காக தேடி, ஓடி அலையும் பெற்றோர்கள் ,பல ஆசைக்கனவுகளுடன் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பிள்ளைகளின் விருப்பங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற உயரிய கருத்தை நகைச்சுவையுடன், கலந்து அருமையான திரைப்படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ராம்.
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காமல் வெளி உலகிற்கு பறந்து போ, அந்த வானமும் வசப்படும் என்பதை உணர்த்தும் இந்த படத்தினை குழந்தைகளுடன் பெரியவர்களும் அவசியம் பார்க்கவேண்டும் .
