தீபாவளி திருநாளில் திரை விருந்தாய், வெள்ளித்திரையில் வெளியாகியிருக்கும் படங்களில் ஒன்றான, லக்கி பாஸ்கர். படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ளார்.மேலும் மீனாட்சி சவுத்ரி, ராம்கி,சச்சின் கெடேகர், மாஸ்டர் ரித்விக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்த திரைப் படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மும்பையில் உள்ள வங்கி ஒன்றில் காசாளராக இருக்கும் பாஸ்கர் (துல்கர் சல்மான்) தந்தை,மனைவி சுமதி (மீனாட்சி சவுத்ரி) ,மகன் ,சகோதரியுடன் வாழ்ந்து வரும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்.குடும்ப பொருளாதார சிக்கல்களால் மாட்டிக்கொண்டு தத்தளிக்கும் அவரால், கடன்களை தீர்க்க முடியவில்லை. அதோடு கூட அவருக்கு நியாயமாக கொடுக்கப்படக்கூடிய பதவி உயர்வும் கானல் நீராய் நீர்த்து போய்விடுகிறது. இதனால் மனதில் விரக்தியும் ,வேதனையும் அடையும் பாஸ்கர் குறுக்கு வழியில் பொருளீட்டும் பாதையில் செல்ல முடிவு செய்கிறார். சிறிய குறுக்கு முயற்சியில் துவங்கி, பின்னர் விரிவடையும் அவரது பொருளீட்டும் முயற்சி, அவருக்கு பெரிய செல்வ வளர்ச்சியை கொடுக்கிறது .ஆனால் பலமுறை அதிர்ஷ்டத்தால் தப்பிக்கும் பாஸ்கர் கடைசியில் சிக்குகிறார். அதன் பின் பாஸ்கரின் நிலை என்னவானது ? என்பதுதான் படத்தின் எஞ்சிய கதை.

பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் இன்றைய பல நடுத்தர குடும்பங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும் குடும்ப தலைவர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் ,பலவிதமான சூழல்களையும் எதிர்கொள்ளும் நாயகனாக துல்கர் சல்மான் நன்கு நடித்துள்ளார் .அவரது மனைவியாக நடித்துள்ள மீனாட்சி சௌத்ரியும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி நன்கு நடித்துள்ளார் ,மேலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் ராம்கி மற்றும் சச்சின் கெடேகர், மாஸ்டர் ரித்விக் போன்றவர்களின் கதாபாத்திரங்களும் அதில் அவர்களது நடிப்பும் குறை காணாத வண்ணம் நிறைவாய் உள்ளது
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பயணித்து, படத்தின் வளமைக்கு மேலும் வலு சேர்த்துள்ளன..ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் காட்சியல் , கதையில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்வியலை அழகுற பதிவு செய்துள்ளது. நவீன் நூலியின் படத்தொகுப்பு, நேர்த்தியான காட்சிகளின் கோர்வைக்கு பலம் சேர்த்துள்ளது .
வலி நிறைந்த வாழ்வியலுக்கு , வழி தேடும் சராசரி நடுத்தர குடும்ப தலைவனின் கதையினை, சிறப்பான திரைக்கதையுடன் உருவாக்கியுள்ள இயக்குனர் வெங்கி அட்லூரி, எளிய குடும்ப மக்களின் வாழ்க்கையினை படமாக பதிவு செய்துள்ளார்
மொத்தத்தில் ’லக்கி பாஸ்கர்’-வெற்றியாளன்.
