Tuesday, February 3

‘லாக்டவுன்’ -திரை விமர்சனம்

பெரும் தொற்று ஊரடங்கு கட்டுப்பாடு காலத்தினை களமாகக் கொண்டு ,ஒரு நடுத்தர குடும்பத்து இளம் பெண்ணின் வாழ்வியல் சம்பவத்தை திரை மொழியில் சொல்கிறது இந்த ‘லாக்டவுன்’.

பெற்றோருடன் வசித்து வரும் கதையின் நாயகி அனுபமா பரமேஸ்வரன், படித்து முடித்த பிறகு வேலை தேடிக் கொண்டிருக்கிறார் ,அவருக்கு இரவு நேரத்தில் பணியாற்றக்கூடிய வேலை வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதற்கு அவர்களது குடும்பத்தினரே மறுப்பு தெரிவித்து விடுகிறார்கள். வேலை தேடும் நிமித்தமாக தனது தோழியை அவர் சந்திக்கும் வேளையில் ,தோழியின் விருப்பத்திற்கு இணங்க ரிசார்ட் ஒன்றில் நடக்கும் கேளிக்கை விருந்துக்கு செல்கிறார், அந்தக் கேளிக்கை விருந்தில் மது,நடனம், இசை என அமர்க்களமாக பொழுதைக் கழிக்கும் இளம் கூட்டத்தினரின் மகிழ்ச்சியான சூழலை முதன்முறையாக அனுபமா பார்க்கிறார் .தோழியின் வற்புறுத்தலின்படி அந்த  விருந்தில் மதுவும் அருந்தி தன்னிலை இழக்கிறார், மறுநாள் காலையில் தனது வீட்டுக்கு திரும்பி வரும் அனுபமா, தன்னுடைய இயல்பான வாழ்க்கையினை தொடர்கிறார் ,ஆனால் வாரங்கள் சில கழிந்த பிறகு தான் தான் அன்றைக்கு கலந்து கொண்ட போதை விருந்தினால் ,தான் ஒரு பெரிய பிரச்சனை வலையில் மாட்டியிருப்பதை உணர்கிறார், அந்த சமயத்தில் கோவிட் 19 ,முதல் 21 நாள் லாக் டவுன் தொடங்குகிறது, அந்த சமூக சிக்கல் அவளது பிரச்சினையை மேலும் பெரிதாக்குகிறது. வீட்டுக்கு தெரியாமல் தன்னுடைய பிரச்சனையிலிருந்து வெளிவர வழிதேடும் அவளுக்கு வழி கிடைத்ததா? எப்படி தன்னை சூழ்ந்த பிரச்சனை வலையில் இருந்து அவள் வெளிவந்தாள் என்பதுதான் ‘லாக்டவுன்’ படத்தின் மீதி கதை.

ஒருபுறம் குடும்பம், வேலை தேட வேண்டிய சூழல் ,மறுபுறம் எதிர்பாராத விதத்தில் தன்னை சூழ்ந்து கொண்ட பிரச்சனை வளையம் ,கூடவே சமூக பெருந்தொற்று கட்டுப்பாடுகள் இவைகளுக்கு இடையே உழலும் கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை பதிவு செய்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். சார்லியும், நிரோஷாவும் நாயகியின் பெற்றோர்களாக தங்களுடைய அனுப நடிப்பினை நன்கு வெளிபடித்தி நடித்திருக்கிறார்கள், மேலும் லிவிங்ஸ்டன் ,லொள்ளு சபா மாறன், பிரியா வெங்கட்,விநாயகராஜ் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.

இசையமைப்பாளர்கள் என்.ஆர் ரகுநாதன் மற்றும் சித்தார்த்த் விபின் இவர்களது இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. சமூகம் சார்ந்த ஒரு பெண்ணின் வாழ்வியல் சிக்கல்களை ஒளிப்பதிவாளர் கே ஏ சக்திவேலின் கேமரா அழகுற பதிவு செய்திருக்கிறது.பெருந்தொற்று சமயத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலகட்டத்தில் பலரும் எதிர்நோக்கி இருந்த பல பிரச்சினைகளில், ஒரு தனி பெண்ணின் வாழ்வியல் சம்பவத்தை கதைகளமாக்கி அதற்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து, விறுவிறுப்பான திரைக்கதையுட ன் நல்லதொரு படமாக .இயக்கியுள்ளார் இயக்குனர் ஏ ஆர். ஜீவா.

மொத்தத்தில் இந்த லாக்டவுன் அன்றைய காலகட்டத்தை இன்றைக்கு மீண்டும் நினைவூட்டும் ஒரு பதிவு.

Spread the love