தமிழ் சினிமா வெள்ளித்திரையில் பல முக்கோண காதல் கதைகளை சந்தித்து இருந்தாலும்,ஒரு புதிய கோணத்தில் இயக்குனர் விஜய் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் காதலை சொல்லுகிறது இந்த காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படம்.

கதையின் நாயகி ஜியா சங்கரை ,நாயகன் மதும் கேஷ் ஒருதலையாக காதலிக்கிறார், ஆனால் ஜியா சங்கரோ அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார் , இப்படிப்பட்ட சூழ்நிலையில் மறதி நோயினால் ஜியா சங்கர் பாதிக்கப்படுவதனால் அவருக்கு எல்லாமே மறந்துவிடும் நிலை ஏற்படுகிறது தன்னையே அறியாமல் தவிக்கும் அவரிடம் தன்னை காதலனாக மதும்கேஷ் அறிமுகப்படுத்தி கொள்கிறார், உண்மைக்கு மாறாக மதும்கேஷ் சொல்லக்கூடிய இந்தப் பொய்யினால் அதன் பின் என்ன நடக்கிறது ?என்பதுதான் படத்தின் மீதி கதை .
கதையின் நாயகனாக மதும்கேஷ் ,சித்தார்த் என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகப்படத்தில் இளம் காதல் நாயகனாக வலம் வருகிறார். நாயகியாக நடித்துள்ள ஜியா சங்கருக்கு முழு படத்திலும் நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் உள்ளது, அதனை அவரும் நன்றாக பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய தோற்றத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். மற்றும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் அசோக் அர்ஜுனன் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகி உள்ளார் .மேலும் விஜி சந்திரசேகர் ,எம் எஸ் பாஸ்கர் ஜெயபிரகாஷ் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறை இல்லாத நடிப்பை நிறைவாக கொடுத்திருக்கிறார்கள் .

காதல் கதைக்கு ஏற்ற இதமான காட்சிகளை, சிறப்பான படபிடிப்பு தளங்களில் நேர்த்தியாக படமாக்கி பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா. காதலின் உணர்வுகளை கதாபாத்திரங்கள் வழியே நகர்த்திச் செல்லும் இந்த படத்திற்கு ரசிக்கும்படியான பாடல்களையும் ,நிறைவான பின்னணி இசையினையும் கொடுத்து தனது பங்கிற்கு சிறப்பாக பணியாற்றியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.இவரின் 25 ஆவது திரையுலக ஆண்டில் இந்தப் படம் வெளிவந்திருப்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சிறப்பு அம்சமாகும்
ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிமுகமாக இருக்கக்கூடிய முக்கோண காதல் கதையாக இருந்தாலும் அந்த கதைக்கு நேர்த்தியான திரைக் கதையுடன் (திரைக்கதை ஏ மகாதேவ்) ,சிறப்பான தொழில்நுட்பாளர்களுடன் இணைந்து ,அழகிய காதல் கதையை இயக்குனர் ஏ எல் விஜய் திரைமொழியில் கொடுத்துள்ளார் .
மொத்தத்தில் இந்த ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ -இளம் உள்ளங்களின் இதயங்களில் இடம் பிடிக்கும்.
