Thursday, January 15

*ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்!*

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் ஜனவரி 16 அன்று ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் வெளியாகிறது.

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ தற்போது ஜப்பானிலும் வெளியாக தயாராக உள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இந்த படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக மாறியது. படத்தின் தொடக்கத்தில் புஷ்பாவின் அறிமுக சண்டைக்காட்சி ஜப்பானில் படமாக்கப்பட்டது மட்டுமல்லாது, அதில் அல்லு அர்ஜுன் ஜப்பானிய மொழியிலும் சரளமாக வசனம் பேசும்படியும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

ஜனவரி 16ஆம் தேதி ஜப்பானில் படம் வெளியாகவுள்ள நிலையில், குடும்பத்துடன் டோக்கியோ சென்றுள்ள நடிகர் அல்லு அர்ஜூன் தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை புரமோட் செய்து வருகிறார். டோக்கியோ நகரத்தின் அழகிய ஸ்கைலைன் இடம்பெற்ற புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் அல்லு அர்ஜூன்.

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் உடன் இணைந்து, இந்தப் படத்தை ஜப்பானில் ’புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் கீக் பிக்சர்ஸ் மற்றும் சோசிகு நிறுவனங்கள் வெளியிடுகின்றன. சுமார் 250 திரையரங்குகளில் இந்த படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களுக்கு ஜப்பான் ரசிகர்கள் ஏற்கனவே காட்டி வரும் பேராதரவை கருத்தில் கொண்டு, இந்தப் படமும் அங்கு பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜப்பான் தியேட்டர்களில் ’புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் ஜனவரி 15, 2026 அன்று படம் ப்ரீமியர் ஆகிறது. போலீஸ் அதிகாரியாக ஃபஹத் ஃபாசில் நடித்திருக்க, நாயகியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். இந்தப் படத்தை நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ளனர்.

Spread the love