Tuesday, February 3

‘குருமூர்த்தி’- விமர்சனம்

பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய் சரவணன் தயாரித்துள்ள குருமூர்த்தி படத்தை கே.பி. தனசேகர் இயக்கியுள்ளார்.

குருமூர்த்தி என்கிற டைட்டில் ரோலில் நட்டியும், பூனம் பாஜ்வா பிரதான நாயகியாகவும் நடித்துள்ளார்கள், நீண்ட இடைவெளிக்குப் பின் ராம்கி மறு பிரவேசம் செய்துள்ளார்.மேலும் இப்படத்தில் ரவிமரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ் , பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா,யோகிராம்,சஞ்சனா சிங், அஸ்மிதா என் நட்சத்ரப்பட்டாளமே நடித்துள்ளார்கள், தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார்.எஸ். என். பாசில் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ராம்கி ஒரு பெரிய பணக்காரர். அவர் ஒரு வீடு வாங்குவதற்காக ஐந்து கோடி ரூபாயைக் காரில் ஒரு பெரிய பெட்டியில் எடுத்துச் செல்கிறார்.ஐந்து கோடி என்கிற போது அது கறுப்புப் பணம் தானே? அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தி தண்ணீர் கேட்கிறார். வாய்த்தகராறு முற்றி அங்கே சிறு பிரச்சினை வருகிறது.அந்தச் சலசலப்புக்குப் பின் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல் போய்விடுகிறது. பதற்றமடைகிறார் ராம்கி.அதை ஒரு மூன்றுபேர் திருட்டுக் கும்பல் எடுத்துச் சென்று விடுகிறது.தேயிலைத் தோட்டத்தில் எங்கோ மறைத்து விடுகிறார்கள். பயத்தினால் ஒருவர் மறைத்து வைக்க ,வைத்த இடம் தெரியாமல் தவிக்க, அது இன்னொருவர் கையில் கிடைக்க இப்படி அந்தப் பெட்டி வெவ்வேறு ஆட்களுக்குக் கைமாறுகிறது.ராம்கி போலீசில் புகார் செய்கிறார். இன்ஸ்பெக்டர் நட்டி தலைமையிலான போலீஸ் படையும் தேடுகிறது. பணப்பெட்டி யாரிடம் சென்றது? மாறிமாறிக் கடைசியில் யாரிடம் போய்ச் சேருகிறது என்பதுதான் கதை. . இதற்கிடையில் காவல் துறை அதிகாரியான நட்டியின் குடும்பக் கதையும் இணைந்து கொள்கிறது.பிரசவ வலியில் துடிக்கும் மனைவி, உடன் இருக்க முடியாமல் தன் மன நெருக்கடியை மறைத்துக் கொண்டு கடமையையே கண்ணாக எண்ணிப் பெட்டியைத் தேடும் நட்டி என சென்டிமெண்ட் கலந்து கொள்ளும் போலீஸ் விசாரணைக் கதையாக நகர்கிறது.

ஒளிப்பதிவாளர் நடராஜ் என்கிற நட்டி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர்
நடிகரான பிறகு சில வித்தியாசமான படங்களில் நடித்துப் பெயர் பெற்றார் .இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் இயல்பாக நடித்துள்ளார்

தமிழரசி என்கிற பெயரில் நாயகியாக வருகிற பூனம் பாஜ்வா, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடித்துள்ளார்.பாடல் காட்சிகளில் அழகாகத் தோன்றும்,இவர் மருத்துவமனையில் பிரசவ வலியில் கணவனைப் பார்க்கத் துடிக்கும் காட்சிகளில் நிறைவாக நடித்துள்ளார் .

இந்த படத்தில் போலீஸ் டிரைவராக ரவிமரியா,ஏட்டாக மனோபாலா மற்றும் சற்று இடைவெளிக்குப் பின் ராம்கி நடித்துள்ளார்கள் .ராம்கி கந்தசாமி என்கிற பாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார்,.90களில் பார்த்த அதே தோற்றம். பெரிதாக அவர் பயன்படுத்தப்படவில்லை.

தேவராஜ் ஒளிப்பதிவில்,படத்தின் பெரும் பகுதி மலைப்பாங்கான தேயிலைத்தோட்டமுள்ள பகுதிகளில் நடப்பதால் பசுமையான மலைச்சரிவு பின்புலக் காட்சிகள் பார்ப்பதற்கு இதமாக, கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றன. இனிமையான பாடல்களை இசையமைப்பாளர் சத்யதேவ் உதய சங்கர் வழங்கியுள்ளார்,கதைக்கேற்ற நட்சத்திரங்களுடன் எல்லா அம்சங்களையும் கலந்து மசாலா படமாக இயக்குநர் கே.பி.தனசேகரன் உருவாக்கியுள்ளார்.

மொத்தத்தில் படம் ‘குருமூர்த்தி’ பட்ஜெட் மசாலா படம்.

Spread the love