Monday, September 21

திருவின் குரல் -விமர்சனம்

குரலற்ற மாற்றுத்திறனாளி திருவாக அருள்நிதி கதையின் நாயகனாய் நடித்துள்ளார், அப்பா, அக்கா, அவரது மகள், பாட்டி, அத்தை, அத்தையின் மகள் என அவர் மகிழ்வுடன் வாழ்க்கையை நடத்திவருகையில் ,திருவின்(அருள்நிதி) தந்தை (பாரதிராஜா) விபத்தொன்றில் சிக்குகிறார்.திரு, தன் தந்தையை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார். அங்கே வேலைபார்க்கும் பணியாட்கள் தங்கள் சுய லாபத்துக்காக சில கொலைகளை செய்கிறார்கள். அதில் ஒன்றை அருள்நிதியின் அக்காவின் மகள் பார்த்துவிடுகிறார் அருள்நிதியின் அக்கா மகளான அவரை கொலை செய்ய வில்லன்கள் திட்டமிடுகின்றனர். அந்த கும்பலிடமிருந்து தனது அக்கா மகளை அருள்நிதி எப்படி காப்பாற்றுகிறார்? என்ற வினாவுக்கு விடை தருகிறது ‘திருவின் குரல்’ படத்தின் மீதி கதை.

பேச முடியாத, சரிவர காது கேட்காத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் அருள்நிதி, சென்டிமென்ட், ஆக்ஷன் என பலதரப்பட்ட உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா தந்தை கதாபாத்திரத்தில் நிறைவாக தன் நடிப்பை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பெறுகிறார். நாயகியாக ஆத்மிகா கொடுக்கப்பட்ட காட்சிகளில் குறைவின்றி நடித்துள்ளார். வில்லன்கள் கும்பலின் தலைவனான அஸ்ரஃப்பின் நடிப்பு குறிப்பிட்டு சொல்லும் வகையில் அசத்தலாக உள்ளது ,குழந்தை ஷர்மி, சித்ரா, பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுபைதா தங்களது பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப இயல்பாக நடித்துள்ளார்கள்

சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள பாடல்களில், குறிப்பாக கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், மதுபாலகிருஷ்ணனின் உணர்வுபூர்வமான உச்சரிப்பில் ,அப்பா என் அப்பா பாடலும், படத்தின் பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.சின்ட்டோ பொடுதாஸின் ஒளிப்பதிவும் ,கணேஷ் சிவாவின் படத்தொகுப்பும், இயக்குநர் ஹரீஷ் பிரபுவின் காட்சி அமைப்புகளுக்கும் கதையின் நகர்வுக்கும் தங்களால் இயன்ற வரை துணைநின்றுள்ளன.


தகப்பன் – மகன் சென்டிமெண்ட் அதனுடன் ஆக்ஷன் என கதைக்களம் கொண்டு, பொருத்தமான
நடிகர்களை நடிக்க வைத்து ,சமூக பார்வையுடன் உறவின் மேன்மைகளை, உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஹரீஷ் பிரபு.

கோடைவிடுமுறையில் குடும்பத்துடன் சென்று திருவின் குரலை கேட்கலாம் .

Spread the love