அயோத்தியில் பல்ராம் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் அவர் அவர் தனது மனைவி, மகள், மகனுடன் ராமேஸ்வரத்திற்கு யாத்திரை பயணம் மேற்கொள்கிறார். ரயிலில் மதுரை வந்து அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு வாடகை காரில் அவர்கள் குடும்பத்துடன் செல்லும் வழியில் கார் விபத்துக்குள்ளாகிறது. அந்த விபத்தில் நாயகியின் அம்மா உயிர் இழக்கிறார். அந்த உடலை சொந்த ஊருக்கு அவர்கள் கொண்டு செல்ல வேண்டிய நிலையில், அந்தக் கார் டிரைவரின் நண்பனான சசிகுமார், இறந்த உடலை விமானத்தில் கொண்டு செல்ல தனது நண்பர்களின் மூலம் முயற்சிக்கிறார்.இறுதியில் அந்த உடலுக்குப் பிரேத பரிசோதனை நடந்ததா? அந்த உடல் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டதா?. என்பதுதான் இப்படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக ஆனால் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில், யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சசிகுமார் .ப்ரீத்தி அஸ்ராணி, கதைக்கு தேவையான எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக உணர்வுகளை வெளிப்படுத்தி நன்கு நடித்துள்ளார் .புகழுக்கு கதையுடன் இணைந்து பரிமளிக்க கூடிய கதாபாத்திரம் ,அவரும் அதை உணர்ந்து நன்கு நடிப்பை வெளிக்கொணர்ந்துள்ளார்.

மதவாதி மற்றும் ஆண்ஆதிக்கவாதியாக நடித்துள்ள யஷ்பால் சர்மா தன்னுடைய திமிரான நடிப்பால் , ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை பெற்று தன் நடிப்பை நிலைநிறுத்துகிறார் .மேலும் அஞ்சு அஸ்ராணி, சிறுவன் அத்வைத் போன்றோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளார்கள் .

என்.ஆர்.ரகுநந்தனின் இசையும் , மாதேஷ்மாணிக்கத்தின் ஒளிப்பதிவும் கதையின் நகர்வுக்கு பக்கபலமாய்
அமைந்துள்ளது. மத நல்லிணக்கம், மனித நேயம் இவற்றை கதைக்களமாக கொண்டு சிறப்பான திரைக்கதையுடன் படமாக்கி தந்துள்ள இயக்குநர் மந்திர மூர்த்திக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு, இந்த அயோத்தியை குடும்பத்துடன் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம் .
