அதிரடி ஆக்ஷன் படங்களின் அடிநாதமாக திகழ்பவர்கள் சண்டை பயிற்சி இயக்குநர்கள் மற்றும் சண்டை பயிற்சி கலைஞர்கள், அந்த வரிசையில் தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற மற்றும் பழம்பெரும் முன்னணி சண்டை பயிற்சி இயக்குனராக பெரும் பெயர் பெற்றவர் ஜூடோ ரத்தினம் அவர்கள் ஆவார், இவர் தனது 92 வயதில் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள ஜூடோ ரத்தினம், 2019-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். குடியாத்தத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக ஜூடோ ரத்தினம் உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 1959 ஆம் ஆண்டு முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான தாமரைக் குளம் படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜூடோ ரத்தினம். அதன்பிறகு 1966 ஆம் ஆண்டு R .சுந்தரம் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்சின் வல்லவன் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் சண்டை பயிற்சி இயக்குநராக தன் கலைப்பயணத்தை தொடர்ந்தார் ஜூடோ ரத்தினம். அதன்பிறகு 25 ஆண்டுகளுக்கு மேலாக 1992 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற சண்டை பயிற்சி இயக்குநராக இருந்தார் .இவர் இறுதியாக நடித்த ‘தலைநகரம்’ படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியானது
ஜூடோ ரத்தினம் சண்டை பயிற்சி இயக்குனர் மட்டுமின்றி 1980 ஆம் ஆண்டு வெளியான, ‘ஒத்தையடி பாதையிலே’ என்கிற படத்தையும் தயாரித்துள்ளார்.இவரது சண்டைக்காட்சி அமைப்புகளினால் இவருக்கு பெயரும் புகழும் வாங்கி தந்த பல படங்களில் ஒரு சில படங்களாவன , வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், கைதி கண்ணாயிரம், சகலகலா வல்லவன், பாயும் புலி, சிவப்புச் சூரியன், முரட்டுக் காளை, தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா, தூங்காதே தம்பி தூங்காதே நல்லவனுக்கு நல்லவன் மற்றும் பல படங்கள். ரஜினிகாந்த் நடித்த பாண்டியன் படத்தில் கடைசியாக ஸ்டண்ட் மாஸ்டராக பணி புரிந்தார் ஜூடோ ரத்தினம்.
இயக்குநர் ஜூடோ ரத்தினம் மாஸ்டரிடம் இருந்து பயிற்சி பெற்ற பலரும் தற்போது சண்டை பயிற்சி இயக்குநர்களாகி திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றார்கள்,அவரது மகன் ஜூடோ. கே.கே.ராமுவும் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் ஆவார். அவரது பேரன்கள் ஜூடோ லெனின் மற்றும் ஜான் பிரின்ஸ் ஆகியோரும் ஸ்டண்ட் கலைஞர்களாக உள்ளார்கள், இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
