ஒருவரின் மனதை நேசிக்கத் தொடங்கினால், புறத்தோற்றம் ஒரு தடையாக இருக்க முடியுமா?காதல், மனமாற்றம், உணர்வுகள் என அழகுக்கும் அன்புக்கும் இடையிலான வேறுபாட்டைப் பேச முயற்சிக்கிறது ‘மௌன மொழிகள்’.

விளம்பர நிறுவனம் நடத்தி வரும் கதிர் (ஷகீர் மனோ), தனது நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ‘மிஸ் சென்னை’ பட்டம் வென்ற பவித்ராவை (அர்ச்சனா) அணுகுகிறார். ஆனால், அவரது அழைப்பை பவித்ரா நிராகரித்துவிடுகிறார். இந்தச் சூழலில் எதிர்பாராத விபத்தில் சிக்கும் பவித்ரா, தனது முக அழகை இழக்கிறார். அதன்பிறகு கதிரின் பார்வையிலும், பவித்ராவின் வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களும், அவர்களுக்குள் மலரும் காதலும் எத்தகைய முடிவை நோக்கிப் பயணிக்கின்றன என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷகீர் மனோ, அறிமுக நடிகருக்குரிய தயக்கமின்றி பல காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது நடிப்புத் திறனைத் தொடர்ந்து மெருகேற்றிக்கொண்டால், அடுத்தடுத்த படங்களில் நல்லதொரு இடத்தைப் திரையுலகில் பிடிக்க வாய்ப்புள்ளது.
பவித்ராவாக நடித்திருக்கும் அர்ச்சனா, கதையின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார்.மேலும் திவ்யா நாகேஷ், தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன்,அர்ஜுன், இளவரசன் அஞ்சலி தேவி ,உள்ளிட்டவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப குருவின்றி நடித்துள்ளார்கள் ஒளிப்பதிவாளர் எம்.ஜி. ராய், கதைக்களத்தின் தன்மைக்கு ஏற்ற கோணங்களிலும், காட்சிகளின் தேவையை உணர்த்தும் விதத்திலும் ஒளிஅமைப்புகளை கொண்டு படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் நல இளந்திரையனின் இசையில் பாடல்கள் கேட்பதற்கும் திரையில் ரசிப்பதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன.
குறைந்த பொருட்செலவில் உருவாகும் படங்களிலும், கதைக்குப் பொருத்தமான நடிகர்களையும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்து ஒரு படைப்பை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.சி. சௌந்தர். தேர்ந்தெடுத்த கதைக்களத்திற்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்திருப்பதுடன், தொழில்நுட்ப ரீதியாகவும் படத்தைச் சிறப்பாகக் கொண்டுசெல்ல முயற்சித்திருக்கிறார்.நல்ல தமிழ் தலைப்பை படத்திற்கு வைத்திருப்பதற்காக சிறப்பாக இயக்குனரை பாராட்டலாம்.
**அழகு கண்களுக்குத் தெரியும்; அன்பு மனதிற்குள் உணரப்படும்!** இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பேசும் எளிய காதல் முயற்சியாக அமைந்திருக்கிறது ‘மௌன மொழிகள்’.
