தந்தை – மகள் இடையிலான பாசப் பிணைப்பையும், ஒரு குழந்தையின் வாழ்க்கைக்காகப் போராடும் மனிதனின் உணர்வுகளையும் மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘அப்பா குட்டி’ .
சென்னையில் இருந்து தனது மகள் லிதன்யாவுடன் ஊட்டிக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. அங்கு பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் ப்ரீத்தி அஸ்ரானிக்கு விஜய் ஆண்டனி மீது காதல் ஏற்பட்டாலும் அதை விஜய் ஆண்டனி ஏற்கவில்லை, இந்நிலையில், திடீரென அவரது மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. சிறுமியைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள், மரபணு தொடர்பான ரத்தக் கோளாறால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உயிரைக் காப்பாற்ற உடனடியாக ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில் தான் அந்த குழந்தையின் உண்மையான தந்தை விஜய் ஆண்டனி இல்லை என்பது தெரிய வருகிறது எனவே அந்த குழந்தையினுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக அவளது உயிரியல் பெற்றோரைத் தேடிப் புறப்படுகிறார் விஜய் ஆண்டனி. அந்தத் தேடல் அவரை எங்கு அழைத்துச் செல்கிறது? சிறுமியின் உயிரைக் காப்பாற்ற அவரால் முடிந்ததா? ரத்த உறவுக்கும் பாசத்துக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தின் முடிவு என்ன? என்பதே ‘அப்பா குட்டி’ படத்தின் மீதிக்கதை.
கதையின் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, பாசம் நிறைந்த தந்தையாக தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மகளின் மீதான அக்கறை, அவளுக்காக அவர் எடுக்கும் முயற்சிகள், எதிர்கொள்ளும் மனப் போராட்டங்கள் என உணர்வுபூர்வமான தருணங்களில் தனது நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பள்ளி ஆசிரியையாகவும், விஜய் ஆண்டனியை விரும்பும் பெண்ணாகவும் வரும் ப்ரீத்தி அஸ்ரானி, தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார். விஜய் ஆண்டனியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி லிதன்யா, தனது இயல்பான நடிப்பால் பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். இவர்களுடன் பகவதி பெருமாள், அருவி மதன், ஹரிப்பிரியா ,ஸ்ரீஜா ரவி உள்ளிட்டவர்களின் பங்களிப்பும் படத்தின் கதையோட்டத்திற்கு வலுசேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன், கதாபாத்திரங்களின் மனநிலைகளையும் கதையின் உணர்வுகளையும் காட்சிகளின் வழியாக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, கதையின் முக்கியமான உணர்ச்சிகரமான தருணங்களை இயல்பான காட்சியமைப்புடன் படமாக்கியிருப்பது சிறப்பு.
படத்தின் நாயகனாக மட்டுமின்றி இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் எனப் பல பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறார் விஜய் ஆண்டனி. அவரது இசையில் பாடல்கள் கேட்பதற்கும் திரையில் ரசிப்பதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன. அதேபோல், கதாபாத்திரங்களின் உள்ளார்ந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு துணை நிற்கிறது.
புனேவில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் முமாறன். இரத்த உறவைத் தாண்டியும் மனிதர்களுக்கு இடையே உருவாகும் அன்பு, பாசம், பொறுப்பு ஆகியவற்றின் ஆழத்தை ஒரு குடும்பக் கதையின் வழியாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார். அன்றாட வாழ்க்கையில் சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், உறவுகளுக்காக அவர்கள் மேற்கொள்ளும் தியாகங்களையும் மையப்படுத்தியிருப்பது படத்தின் கருவுக்கு வலுசேர்க்கிறது.
மொத்தத்தில் ,ஒரு குழந்தையின் வாழ்க்கையில் அப்பாவாக இருப்பதற்கு ரத்த உறவு அவசியமில்லை; அளவற்ற அன்பும் அக்கறையும் இருந்தால் அதுவே உண்மையான உறவாகிறது! தந்தை – மகள் பாசம், குடும்ப உணர்வுகள், மனிதநேயம் என மனதைத் தொடும் அம்சங்களுடன் குடும்ப ரசிகர்களுக்கான உணர்வுபூர்வமான படமாக அமைந்திருக்கிறது ‘அப்பா குட்டி’.
