Friday, November 20

ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) – திரைப்பட விமர்சனம்

வானத்தைப் பார்த்து ரசிப்பதோடு நின்றுவிடாமல், ஒருநாள் அந்த வானத்தையே தொட்டுவிட வேண்டும் என்று கனவு காணும் ஒரு கிராமத்துப் பெண்! அந்தக் கனவுக்குத் திருமணம் தடையாக அமைந்தாலும், அதையே தனது மனைவியின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான தொடக்கமாக மாற்றும் ஒரு கணவன்! இப்படி ஒரு அழகான கனவையும், அதற்குப் பின்னால் இருக்கும் அன்பையும், அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது ’ஆகாயத்தில் ஒரு தாரகை’ திரைப்படம்.

ஒரு சிறிய கிராமத்தில் வாழும் கல்பனா (சாத்விகா வீரவல்லி), சிறுவயது முதலே விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருக்கிறார். ஆனால், பத்தாம் வகுப்பை முடித்தவுடன் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்படுவதால், விண்வெளியை நோக்கிய அவரது பயணம் தொடங்குவதற்கு முன்பே முடங்கிப் போகிறது. திருமண வாழ்க்கையில் கணவர் கிருஷ்ணாவுடன் (துல்கர் சல்மான்) இணையும் கல்பனாவின் மனதில் புதைந்திருக்கும் அந்தப் பழைய கனவைப் புரிந்துகொள்ளும் கிருஷ்ணா, அதை நனவாக்கத் துணையாக நிற்கிறார். கல்வி, குடும்பச் சூழல் எனப் பல தடைகளைத் தாண்டி ஒரு சாதாரண கிராமத்துப் பெண்ணால் விண்வெளி வீராங்கனையாகும் தனது லட்சியத்தை எட்ட முடிந்ததா? அதற்காகக் கணவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் தியாகங்களும் என்ன? என்பதற்கு விடை சொல்கிறது படத்தின் மீதிக்கதை.

கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் தனது இயல்பான நடிப்பால் கதைக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறார். மனைவியின் ஆசைகளைத் தனக்கான பொறுப்பாக எடுத்துக்கொண்டு, அவரது கனவுகளை நனவாக்கப் போராடும் கணவனாக அன்பு, அக்கறை, ஊக்கம் எனப் பல உணர்வுகளை மிகையில்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, மனைவியின் திறமையை உணர்ந்து அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு மனதில் நிற்கிறது.

கல்பனா கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கும் சாத்விகா வீரவல்லி, முதல் படம் என்ற தயக்கமே தெரியாத வகையில் நடித்திருக்கிறார். குறிப்பாக, தனது கனவை அடைய வேண்டும் என்ற உறுதியையும், அதற்காக எதிர்கொள்ளும் உணர்ச்சிப் போராட்டங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன், கதையின் நகர்வுக்கு உதவும் வகையில் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.மேலும் ருஹானி சர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், முரளி சர்மா, சுவாசிகா, கோட்டா ஜெயராம் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களில் பொருத்தமான பங்களிப்பை அளித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் கேட்பதற்கும், காட்சிகளுடன் ரசிப்பதற்கும் இனிமையாக அமைந்துள்ளன. கதையின் உணர்ச்சிகரமான தருணங்களுக்கு ஏற்ற பின்னணி இசை காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக, கனவுகளை நோக்கிக் கல்பனா பயணிக்கும் தருணங்களுக்கு இசை நல்ல உந்துதலை அளிக்கிறது.

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு படத்தின் மற்றொரு பலம். கிராமத்து வாழ்க்கையின் இயல்பையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், விண்வெளி தொடர்பான கனவுகளையும் அழகான காட்சியமைப்புகளின் மூலம் திரையில் சுஜித் சாரங் நன்கு பதிவு செய்திருக்கிறார். காட்சிகளின் வண்ணத் தன்மையும், ஒளிப்பதிவின் நேர்த்தியும் படத்திற்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.

இயக்குநர் பவன் சதினேனி, விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற ஒரு கிராமத்துப் பெண்ணின் கனவை மட்டுமே சொல்லாமல், அந்தக் கனவு நிறைவேறுவதற்கு வாழ்க்கைத் துணையின் புரிதலும் ஆதரவும் எவ்வளவு அவசியம் என்பதையும் மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். ஒரு பெண்ணின் லட்சியத்திற்குத் திருமணம் முற்றுப்புள்ளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை; புரிந்துகொள்ளும் துணை கிடைத்தால் அதுவே புதிய தொடக்கமாக மாறும் என்ற கருத்தை உணர்வுப்பூர்வமான காட்சிகளின் வழியாகச் சொல்லியிருக்கிறார். குறிப்பாக, மனைவியின் கனவைத் தனது கனவாக ஏற்றுக்கொண்டு அதற்காகக் கணவன் மேற்கொள்ளும் முயற்சிகளை மையப்படுத்தியிருப்பது படத்தின் சிறப்பு. அதேபோல், கிராமப்புறச் சூழலில் இருந்து வரும் ஒரு பெண் தனது இலக்கை அடைவதற்கு எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் கதையோடு இணைத்திருப்பது பாராட்டுக்குரியது.

குறிப்பாக, வாழ்க்கைத் துணையின் ஆசைகளையும் கனவுகளையும் புரிந்துகொண்டு அவர்களின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற அழகான கருத்தை இப்படம் முன்வைக்கிறது. குடும்ப உறவுகளின் அன்பு, விட்டுக்கொடுத்தல், கனவுகளை நோக்கிய பயணம் என அனைத்து அம்சங்களையும் உணர்வுப்பூர்வமாக இணைத்திருக்கும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு நல்ல உத்வேகத்தை அளிக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில், மனைவியின் கனவுக்கு வானத்தை எல்லையாகக் காட்டாமல், அந்த வானத்தைத் தொடுவதற்கே துணையாக நிற்கும் கணவனின் அன்பையும் ஆதரவையும் அழகாகப் பேசும் ஓர் உணர்வுப்பூர்வமான படைப்பு – ’ஆகாயத்தில் ஒரு தாரகை’!

Spread the love