Friday, November 20

’சத்தியவான் சாவித்திரி’- திரைப்பட விமர்சனம்

ஒரு கொலை வழக்கு… குற்றவாளியாக நிறுத்தப்படும் சொந்த கணவன்… அவரைக் காப்பாற்ற மீண்டும் நீதிமன்றத்திற்குள் நுழையும் மனைவி… எதிரே பழிவாங்கும் எண்ணத்துடன் காத்திருக்கும் எதிர்தரப்பு வழக்கறிஞர் என நீதிமன்றப் போராட்டத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது ’சத்தியவான் சாவித்திரி’.

சட்டம் பயின்ற கீர்த்தி சுரேஷ்,சாருகேஷை திருமணம் செய்துகொண்டு சென்னைக்கு வருகிறார். பிரபல வழக்கறிஞர் மிஷ்கினிடம் உதவியாளராக பயிற்சி பெறும் அவர், ஒரு வழக்கில் தனது சீனியரையே எதிர்த்து வாதாடி வெற்றி பெறுகிறார். இதற்கிடையில், உடல்நலப் பாதிப்பால் வழக்கறிஞர் பணியிலிருந்து விலக முடிவு செய்யும் சாவித்திரியின் வாழ்க்கையில், ஷில்பா மஞ்சுநாத் கொலை வழக்கு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது.நிரபராதியான தனது கணவரை மீட்டெடுக்க மீண்டும் நீதிமன்றக் களத்தில் இறங்குகிறார் கீர்த்தி சுரேஷ். ஏற்கெனவே தன்னிடம் தோல்வியடைந்த மிஷ்கின், இம்முறை அரசு தரப்பு வழக்கறிஞராக எதிரில் நிற்கிறார் , கணவருக்காகப் போராடும் கீர்த்தி சுரேஷுக்கும் பழிவாங்கும் நோக்கத்துடன் களம் காணும் மிஷ்கினுக்கும் இடையே நீதிமன்றத்தில் நடக்கும் மோதலின் இறுதியில் , யாருக்கு வெற்றி கிடைக்கிறது ? என்பதே ’சத்தியவான் சாவித்திரி’ படத்தின் மீதி கதை.

சாவித்திரி என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் படம் முழுவதும் கதையின் மையமாக பயணிக்கிறார். வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து விலகி, நீதிமன்றத்தில் தனது வாதத்திறமையையும், தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் உணர்ச்சிப் போராட்டங்களையும் வெளிப்படுத்த வேண்டிய ஒரு கதாபாத்திரம் அவருக்கு அமைந்திருக்கிறது. அதற்கேற்ற உடல் மொழி, வசன உச்சரிப்பு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம் என அளவான நடிப்பின் மூலம் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.

மார்க்கண்டேயனாக நடித்திருக்கும் மிஷ்கின், தனது தனித்துவமான தோற்றம், வசனங்களை உச்சரிக்கும் பாணி, கதாபாத்திரத்தின் அதிகாரத்தையும் வில்லத்தனத்தையும் வெளிப்படுத்தும் அணுகுமுறை ஆகியவற்றால் திரையில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, நீதிமன்றக் காட்சிகளில் அவரது நடிப்பு கதைக்கு வலு சேர்க்கிறது. தீபக் கதாபாத்திரத்தில், சாருகேஷ் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.மேலும் பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத்,பிரிகிடா சாகா, வெங்கடேஷ், மாலா பார்வதி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை நன்கு வழங்கியுள்ளார்கள் .

நீதிமன்றத்தை மையமாகக் கொண்ட கதைகளில் வசனங்களும், நடிகர்களின் முகபாவனைகளும், காட்சிகளின் உணர்ச்சித் தீவிரமும் முக்கியமானவை. இதன்படியே ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், நீதிமன்றக் காட்சிகளை நேர்த்தியான கேமரா கோணங்கள் மற்றும் காட்சியமைப்புகளுடன் படமாக்கியிருக்கிறார். அதேபோல், நீதிமன்ற விசாரணைகளின் தீவிரத்திற்கும் கதையின் உணர்ச்சிகரமான தருணங்களுக்கும் ஏற்ற பின்னணி இசையை சாம் சி.எஸ். வழங்கியிருக்கிறார்.

இயக்குநர் பிரவீன் எஸ். விஜய், நீதிமன்றப் பின்னணியில் ஒரு குற்றவியல் வழக்கையும், கணவனைக் காப்பாற்ற போராடும் பெண்ணின் உணர்ச்சிப் பயணத்தையும் இணைத்து இப்படத்தினை உருவாக்கியிருக்கிறார். கதைக்கு பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து, அவர்களிடமிருந்து தேவையான நடிப்பைப் பெற்று, தொழில்நுட்ப அம்சங்களையும் கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தியிருக்கிறார். நீதிமன்ற வாதங்கள், கதாபாத்திரங்களுக்கு இடையேயான மோதல்கள் மற்றும் விசாரணையின் திருப்பங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படத்தை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது.

மொத்தத்தில்,நீதிமன்ற வாதங்கள், குற்றவியல் விசாரணை, கணவன்–மனைவி உறவு மற்றும் ஒரு பெண்ணின் போராட்டம் என பல அம்சங்களை இணைத்து உருவாகியிருக்கும் ’சத்தியவான் சாவித்திரி’, கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் ஆகியோரின் நடிப்பால் கவனம் ஈர்க்கும் திரைப்படமாக அமைந்திருக்கிறது. மேலும் நீதிமன்றப் பின்னணியில் ஒரு பெண் தனது திறமையையும் துணிச்சலையும் வெளிப்படுத்தும் கதையாக அமைந்துள்ள இப்படம் பார்க்கக்கூடிய அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு படைப்பாக அமைந்துள்ளது.

Spread the love