ஒரு சாதாரண விபத்தாகத் தொடங்கும் சம்பவம், எதிர்பாராத பல கேள்விகளை எழுப்பினால்… காணாமல் போன ஒரு சிறுவனைத் தேடும் விசாரணை, அதே மர்மத்தின் இன்னொரு பக்கத்தைத் திறந்துவைத்தால்… இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்னவாக இருக்கும்? இப்படிப் பல கேள்விகளையும், அடுத்தடுத்த திருப்பங்களையும் அடுக்கி, குற்றப் பின்னணியில் உளவியல் ரீதியான பாதிப்புகளையும் இணைத்துச் சொல்லும் கதையாக உருவாகியிருக்கிறது ‘ஜான் டோ’ திரைப்படம்.

கேரளாவில் காவல் அதிகாரியாகப் பணியாற்றி வரும் சந்துரு (அர்ஜுன் தாஸ்), ஒருநாள் பணியில் இருக்கும்போது ஒரு வாகனம் ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழக்க, அது தொடர்பான விசாரணையில் இறங்குகிறார் சந்துரு. மறுபுறம், வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டின் மலைப்பகுதிக்கு குடிபெயர்ந்து வரும் ஒரு குடும்பத்தில் தாய் தர்ஷனா, மகள் லக்கி, மகன் ஹ்ரிதய் ஆகியோர் இருக்கின்றனர். ஒருநாள் இரவு லக்கியும் ஹ்ரிதய்யும் வெளியே செல்லும் சூழலில், ஹ்ரிதய் திடீரென காணாமல் போகிறார். இதையடுத்து அந்தப் பகுதியின் காவல் அதிகாரியான சஞ்சனா, சிறுவனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விசாரணையைத் தொடங்குகிறார். வெவ்வேறு இடங்களில் நடக்கும் இந்த இரண்டு விசாரணைகளும் எப்படிப் புள்ளியில் இணைகின்றன, அவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

சந்துரு என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். முதல்முறையாகக் காவல்துறை அதிகாரியாகத் தோன்றும் அவர், கதாபாத்திரத்திற்கேற்ற உடல்மொழியையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதேசமயம், விசாரணையின் போது வெளிப்படும் உணர்வுகளையும், கதாபாத்திரத்தின் மனநிலையையும் தனது இயல்பான நடிப்பால் சிறப்பாகக் கடத்தியுள்ளார். சஞ்சனா நடராஜனும் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர்களுடன் அனுபமா குமார், படவா கோபி, நீரவ், சிருஷ்டி உள்ளிட்டவர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நிறைவான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.
கதையின் மர்மத்தையும், காட்சிகளின் உணர்வுகளையும் பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கதைக்களத்திற்கு ஏற்ற நேர்த்தியான கேமரா கோணங்களும், காட்சிகளின் தன்மையை உணர்த்தும் ஒளிப்பதிவும் படத்திற்கு வலுசேர்க்கின்றன. இசையமைப்பாளர் முஜீப் மஜீத்தின் பின்னணி இசை, காட்சிகளின் பதற்றத்தையும் மர்மத்தையும் சரியான அளவில் அதிகரித்து, பார்வையாளர்களைத் திரைக்கதையுடன் ஒன்றச் செய்கிறது.

காவல்துறை விசாரணை, எதிர்பாராத திருப்பங்கள் என கிரைம் திரில்லர் பாணியில் பயணிக்கும் கதையுடன், சிறுவயதில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் கடுமையான வளர்ப்புச் சூழலால் ஒருவருக்குள் உருவாகும் உளவியல் பாதிப்புகளையும் இணைத்துப் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் மதுமிதா. இதற்கு முன்பு பல்வேறு கதைக்களங்களில் படங்களை இயக்கியுள்ள அவர், இந்த முறை கிரைம் திரில்லர் களத்தைத் தேர்ந்தெடுத்து, இரண்டு வெவ்வேறு சம்பவங்களை ஒரே கதையின் புள்ளியில் இணைக்கும் திரைக்கதையை அமைத்திருக்கிறார். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்கள், காட்சிகளுக்கு வலுசேர்க்கும் தொழில்நுட்பக் கூட்டணி என அனைத்தையும் ஒருங்கிணைத்து, சுவாரஸ்யமான திரை அனுபவத்தை வழங்க முயன்றுள்ளார்.
மொத்தத்தில்,இந்த ‘ஜான் டோ’, குற்றப் புலனாய்வு, மர்மம், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான திரை விருந்தாக அமையும்.
