**ஐந்து கோடி மதிப்புள்ள .. மாயமான லோடு… மர்மத்தைத் தேடும் மகன்! வித்தியாசமான கிரைம் த்ரில்லர்!**

தங்கத்தின் விலை ஏறினால் அதன் மதிப்பைப் பற்றிப் பேசாதவர்களே இருக்க முடியாது. ஆனால், தலைமுடிக்கும் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், மனிதர்களின் தலைமுடியையே மையப்பொருளாகக் கொண்டு, அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கிரைம் த்ரில்லரை உருவாக்கியிருக்கிறது ‘பிளாக் கோல்டு’.
கார் விற்பனை நிலையத்தில் தலைமை மெக்கானிக்காகப் பணிபுரியும் வெற்றியின் (வெற்றி) வாழ்க்கை, அவரது தந்தை லிவிங்ஸ்டனைச் சுற்றி நிகழும் ஒரு திடீர் சம்பவத்தால் தலைகீழாக மாறுகிறது. லோடு டிரைவராகப் பணியாற்றும் லிவிங்ஸ்டன், வெங்கடேஷிடம் ஓட்டுநராக இருக்கிறார். பொருள்களைக் கைமாற்றிவிடும் தொழிலில் ஈடுபட்டு வரும் அரோல் டி. சங்கரிடமிருந்து பிரிந்து தனியாகத் தொழில் செய்து வரும் வெங்கடேஷுக்கும் அவருக்கும் இடையே ஏற்கனவே தொழில் போட்டி நிலவி வருகிறது.இந்தப் போட்டியின் பின்னணியில், வெங்கடேஷ் அனுப்பி வைத்த ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமுடி சரக்குடன் செல்லும் வாகனம் திடீரென மாயமாகிறது. சரக்குடன் லிவிங்ஸ்டனும் காணாமல் போனதால், அவர் திட்டமிட்டே தலைமறைவாகிவிட்டதாகச் சந்தேகிக்கிறார் வெங்கடேஷ். அவரைக் கண்டுபிடிக்கக் காவல்துறையின் உதவியையும் நாடுகிறார்.ஆனால், தந்தையின் குணத்தையும் நேர்மையையும் நன்கு அறிந்த வெற்றிக்கு இந்தச் சம்பவத்தின் மீது சந்தேகம் எழுகிறது. எனவே உறுதியான நம்பிக்கையுடன், அவரைத் தேடும் முயற்சியில் தானே இறங்குகிறார். ஒரு பக்கம் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கின் பின்னணியில் இருக்கும் தொழில் போட்டி, மறுபக்கம் காணாமல் போன தந்தையைத் தேடும் மகனின் போராட்டம் எனத் தொடங்கும் இந்தப் பயணம் பல எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்கிறது. லிவிங்ஸ்டன் உண்மையிலேயே தலைமறைவானாரா ?அல்லது இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் வேறு ஏதேனும் சதித்திட்டம் இருக்கிறதா? வெற்றியின் தேடலில் வெளிப்படும் உண்மைகளும், மர்ம முடிச்சுகளும் என்ன என்பதுதான் ‘பிளாக் கோல்டு’ படத்தின் மீதிக்கதை.
தந்தையைக் காணாமல் தவிக்கும் மகனாகவும், அவரைக் கண்டுபிடிப்பதில் உறுதியுடன் செயல்படும் பொறுப்பான இளைஞனாகவும் வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தின் பதற்றம், அப்பா மீதான நம்பிக்கை, தேடலில் வெளிப்படும் தீவிரம் எனத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் பிரியலயா, தனது தோற்றத்தாலும் இயல்பான நடிப்பாலும் கவனம் ஈர்க்கிறார். நாயகனின் தந்தையாக வரும் லிவிங்ஸ்டனின் அனுபவம் மிக்க நடிப்பு கதாபாத்திரத்திற்கு நல்ல பலம் சேர்க்கிறது. குறிப்பாக, கதையின் முக்கியமான உணர்வுகளைத் தனது நடிப்பின் மூலம் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகனின் தாயாக நடித்திருக்கும் துளசியும் குடும்பப் பின்னணிக்கு இயல்பான உணர்வைக் கொடுத்திருக்கிறார். இவர்களுடன் வெங்கடேஷ், அபிராமி வெங்கடாச்சலம், கராத்தே வெங்கடேசன் உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
கதையின் தன்மைக்கும், அதன் மர்மம் நிறைந்த காட்சிகளுக்கும் ஏற்ற வகையில் ஒளிப்பதிவை அமைத்திருக்கிறார் சந்தோஷ் குமார். நேர்த்தியான கேமரா கோணங்களும், காட்சிகளுக்கு ஏற்ற ஒளியமைப்பும் இயக்குநரின் கற்பனையைத் திரையில் அழகாக வெளிப்படுத்துகின்றன.
கவாஸ்கர் அவினாஷின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கேட்பதற்கும், திரையில் பார்ப்பதற்கும் இனிமையாக இருக்கின்றன. அதேபோல், காட்சிகளின் வேகத்திற்கும் கதையின் உணர்வுகளுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ள பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகிறது.
தினேஷ் குமாரின் படத்தொகுப்பு, கதையின் ஓட்டத்தைச் சீராகக் கொண்டு செல்வதோடு, அடுத்தடுத்து நகரும் சம்பவங்களின் சுவாரஸ்யத்தையும் தக்கவைக்க உதவியிருக்கிறது.
இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுத்து, அதைச் சுற்றி மர்மம், தேடல், உறவுப் பாசம் எனப் பல அம்சங்களை இணைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார்.ஒரு வித்தியாசமான கதைக்கருவைத் தேர்ந்தெடுத்திருப்பதோடு, அதற்குள் விறுவிறுப்பான சம்பவங்களையும் சுவாரஸ்யமான திருப்பங்களையும் இணைத்து கிரைம் த்ரில்லர் பாணியில் திரைமொழியாக்கம் செய்திருப்பது இயக்குநரின் முயற்சிக்குப் பலம் சேர்க்கிறது.
‘பிளாக் கோல்டு’. வித்தியாசமான கதைக்களம், தந்தை – மகன் பாசம், மர்மம் நிறைந்த தேடல் எனப் பல அம்சங்களை ஒன்றிணைத்து ஒரு புதிய கிரைம் த்ரில்லர் அனுபவத்தை வழங்க முயற்சித்திருக்கிறது இப்படம். வழக்கமான குற்றப் பின்னணிக் கதைகளிலிருந்து சற்று விலகி, நாம் அதிகம் அறிந்திராத ஒரு உலகத்தைத் திரையில் காண விரும்புபவர்களுக்கு ‘பிளாக் கோல்டு’ ஒரு வித்தியாசமான தேர்வு!
