Friday, November 6

மூக்குத்தி அம்மன் 2 – திரைப்பட விமர்சனம்

கனவில் தொடங்கும் மர்மம்… 200 ஆண்டுகாலப் பின்னணி… அழிக்கத் துடிக்கும் தீய சக்திகள்… அவற்றை எதிர்கொள்ளும் சக்தி! ஃபேண்டஸி, ஆக்‌ஷன், அமானுஷ்யம் எனப் பல அம்சங்களுடன் வந்திருக்கிறது ‘மூக்குத்தி அம்மன் 2’.

பெண் காவல்துறை அதிகாரியாக இருக்கும் நயன்தாராவுக்கு அடிக்கடி ஒரே மாதிரியான கனவு வருகிறது. அதில் ‘மயிலாஞ்சி’ என்ற ஊருக்கு வருமாறு அவர் அழைக்கப்படுகிறார் ,தொடர்ந்து வரும் இந்தக் கனவுகளுக்குப் பின்னால் இருக்கும் காரணத்தைக் கண்டறிய முடிவு செய்யும் நயன்தாரா, தனது அம்மா ஊர்வசியுடன் அந்த ஊருக்குப் பயணமாகிறார்.

ஆனால், மயிலாஞ்சிக்குச் சென்ற பிறகுதான் தனது வாழ்க்கையின் பின்னணியில் இருக்கும் பல மர்மங்களும், தன்னுடைய உண்மையான அடையாளமும் நயன்தாராவுக்குத் தெரியவருகின்றன. இதற்கிடையே, ஜீவசமாதியில் இருக்கும் ரெஜினா கசாண்ட்ராவைத் தீய சக்திகள் மீண்டும் உயிர்ப்பிக்கின்றன. உயிர்த்தெழும் ரெஜினா, நயன்தாராவை அழிக்கத் திட்டமிடுகிறார். ஆனால், சில அமானுஷ்ய சக்திகளின் பாதுகாப்பு காரணமாக அவர்களால் நயன்தாராவை நெருங்கக்கூட முடியவில்லை.இதையடுத்து, 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை விவரிக்கும் கடந்தகாலக் கதை விரிகிறது. ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய், கருடா ராம் எனத் தீய சக்திகளின் கூட்டணி ஒருபுறம்; அவர்களின் சதித்திட்டங்களை எதிர்கொள்ளும் சக்தி மறுபுறம் எனப் போராட்டம் தீவிரமடைகிறது. இந்த மோதலில் சக்தி எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? தீய சக்திகளின் திட்டம் நிறைவேறியதா? இறுதியில் வெற்றி யாருக்கு? என்ற கேள்விகளுக்கான பதில்களை சொல்லுகிறது ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் மீதிக்கதை.

 


முதல் பாகத்தின் கதைக்கும் இரண்டாம் பாகத்தின் கதைக்களத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட ஃபேண்டஸி கதைக்குள் இந்த படத்தின் கதை பயணிக்கிறது படத்தில் பிரம்மாண்டமான காட்சிகள், பல கதாபாத்திரங்கள், அமானுஷ்ய சக்திகள் என நிறைய அம்சங்கள் இருந்தாலும், அவற்றை இணைக்கும் திரைக்கதையில் பலமில்லை .

சக்தியாக நயன்தாராவின் நடிப்பு சிறப்பாக உள்ளது . கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான தன் பங்களிப்பை அவர் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார் மேலும் புதுமையான பரிமாணத்தில் ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய், கருடா ராம் என வில்லன் கதாபாத்திரங்களில் வருபவர்கள் தங்களுடைய நடிப்பின் மூலம் அவர்களுடைய கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்துள்ளார்கள் .ஊர்வசியின் நடிப்பில் அவரது தனித்துவமான அனுபவமான நடிப்பை வெளிப்பட்டுள்ளது,குறிப்பாக, யோகி பாபுவின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிய அளவில் இல்லை என்று சொல்ல கூடிய வகையிலே உள்ளது .ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்கள் பெரிதாக பார்க்கவும் கேட்கவும் ரசிக்கும்படியே உள்ளன . பின்னணி இசைகாட்சிகளுக்கு ஏற்ற வண்ணம் உள்ளது. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு.கதைக்கும் காட்சிகளுக்கும் ஏற்ப அமைக்கப்பட்டுளளது ஆனால் VFX தொழில்நுட்பதில் இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது

நயன்தாராவின் திரை இருப்பு, ஊர்வசியின் நடிப்பு, ஃபேண்டஸி கதைக்களம் ஆகியவை படத்தின் பிளஸ்.பலவீனமான திரைக்கதை, தேவையற்ற நீளமான நகைச்சுவைக் காட்சிகள், சுமாரான VFX, ஆகியவை படத்தின் மைனஸ்.

வர்த்தகரீதியான அம்சங்கள் நிறைந்த படங்களை ரசிகர்களுக்கு தரும் இயக்குநர் சுந்தர். சியின் இந்த தீபாவளி திரைவிருந்து ரசிகர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கு படமாக நிச்சயம் இருக்கும்

Spread the love