Wednesday, November 4

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ (Enemy Of The Smuggler) – திரைப்பட விமர்சனம்

கடல் வழிக் கடத்தல்… கோடிக்கணக்கான போதைப்பொருள்… ஒருபுறம் கடத்தல் கும்பல், மறுபுறம் அதிரடி நடவடிக்கையில் இறங்கும் சுங்கத்துறை அதிகாரி! பணத்தாசையால் ஆபத்தான பாதையில் பயணிக்கும் இரு நண்பர்களின் கதையை விறுவிறுப்பான கிரைம் திரில்லர் பின்னணியில் சொல்ல முயற்சிக்கிறது ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’.

நண்பர்களான சரண் சக்தியும் பால சரவணனும், குறுகிய காலத்தில் அதிகப் பணம் சம்பாதித்து வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையில், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஜே.டி. சக்கரவர்த்தியிடம் வேலைக்குச் சேர்கிறார்கள். தங்களுக்குக் கொடுக்கப்படும் பணிகளைத் திறமையாகச் செய்து முடிப்பதன் மூலம் சக்கரவர்த்தியின் நம்பிக்கையையும் பாராட்டையும் பெறுகின்றனர். இதற்கிடையே, கடல் வழியாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்படும் போதைப்பொருள் கண்டெய்னரை மீட்கும் முக்கியப் பொறுப்பை சரணிடம் ஒப்படைக்கிறார் சக்கரவர்த்தி. நண்பர்கள் இருவரும் இந்த வேலையை முடித்துவிட்டு நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்பத் திட்டமிடுகின்றனர். ஆனால், இந்தக் கடத்தல் முயற்சியைப் பற்றி அறிந்த சுங்கத்துறை அதிகாரி சமய முரளி, போதைப்பொருளைப் பறிமுதல் செய்வதோடு, கடத்தல் கும்பலையும் பிடிக்கத் தீவிரமாகக் களமிறங்குகிறார். கடத்தல் கும்பலின் திட்டம் வெற்றி பெற்றதா? அதிகாரியின் நடவடிக்கையில் யார் சிக்கினார்கள்? இறுதியில் வெற்றி யாருக்கு? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சரண் சக்தி, தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார். பால சரவணன் தனது வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு கதையின் ஓட்டத்திற்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார். ஜே.டி. சக்கரவர்த்தி மற்றும் ராதிகா ஆகியோர்  தங்களது அனுபவ நடிப்பால்  கதாபாத்திரங்களுக்கு  வலுசேர்க்கின்றனர். நாயகியாக நடித்திருக்கும்  சிமேகாவும் தனக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், மைம் கோபி, லால் உள்ளிட்டோரின் நடிப்பும் கவனம் பெறுகிறது. குறிப்பாக, வருவாய் சேவை அதிகாரியாக நடித்திருக்கும் சமய முரளியும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார்.

சாம் டேனியலின் இசையில் இடம்பெறும் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக அமைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் கா. வின் பாஸ்கர், தனது நேர்த்தியான கேமரா கோணங்கள் மற்றும் ஒளியமைப்பின் மூலம் கதையின் சூழலை சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். சமய முரளியின் பின்னணி இசை, காட்சிகளின் தன்மைக்கு ஏற்ற வகையில் அமைந்து திரைக்கதையுடன் பயணிக்கிறது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கடத்தல் உலகின் பின்னணியைத் திரையில் கொண்டுவர முயற்சித்திருக்கும் இயக்குநர் சமய முரளி, இயக்கத்துடன் நடிப்பிலும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார். கடத்தல் கும்பலின் செயல்பாடுகள், அதைத் தடுத்து நிறுத்த அதிகாரி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எனக் கதையை நகர்த்தியிருக்கும் விதம் கவனம் பெறுகிறது. கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்திருப்பதுடன், சம்பவங்களைத் திரைக்காட்சிகளாக மாற்றுவதற்குத் தேவையான முயற்சிகளையும் நன்கு மேற்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில், பணத்தாசை, போதைப்பொருள் கடத்தல், அதிரடி விசாரணை என கிரைம் திரில்லர் களத்தில் பயணிக்கும் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’, அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு வித்தியாசமான திரை அனுபவத்தினை தரும் .

Spread the love