தாயின் நினைவாக நடத்தி வரும் நூலகத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்புச் சூழலில், எதிர்பாராத விதமாக கையில் கிடைக்கும் ஒரு பென் டிரைவ் மற்றும் லாக்கர் சாவி. இந்த இரண்டும் சந்தீப் கிஷனின் வாழ்க்கையை எங்கே கொண்டு செல்கிறது என்பதே ‘சிக்மா’வின் மையம்.

தனது தாயின் நினைவாக ஒரு நூலகத்தை நடத்தி வரும் சந்தீப் கிஷன், தந்தை வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறார். நூலகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் உடனடியாக கடனை அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால் சூதாட்டத்தின் மூலம் பணத்தை சம்பாதித்து கடன் பிரச்சினையில் இருந்து வெளியேறலாம் என நினைக்கிறார். ஆனால், சூதாட்ட விடுதி நடத்துபவர்களால் ஏமாற்றப்பட்டு கையில் இருந்த பணத்தையும் இழக்கிறார்.இந்நிலையில், பலராலும் தேடப்படும் ஒரு பென் டிரைவ் மற்றும் லாக்கரைத் திறக்கக்கூடிய சாவி எதிர்பாராத விதமாக சந்தீப் கிஷனிடம் கிடைக்கிறது. அந்தப் பொருட்களின் உண்மையான பின்னணி தெரியாத நிலையில், அவற்றை வைத்து பணம் சம்பாதித்து தனது பிரச்சினைகளை தீர்க்க முடிவு செய்கிறார்.பென் டிரைவில் இருப்பது என்ன? அந்த லாக்கரைத் தேடும் நபர்கள் யார்? இறுதியில் என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்துள்ள சந்தீப் கிஷன், கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.நாயகியாக நடித்துள்ள ஃபரியா அப்துல்லாவுக்கு கதையில் பெரிய அளவிலான வாய்ப்பு இல்லாவிட்டாலும், தனக்கு கிடைத்த காட்சிகளில் ரசிகர்களை கவர்கிறார்.வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷிவ் பண்டிட்டின் நடிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது. இவர்களுடன் அன்பு தாசன், ராஜூ சுந்தரம், ஷீலா ராஜ்குமார், மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த், படத்தின் பிரமாண்டமான காட்சிகளையும் ஆக்ஷன் காட்சிகளையும் சிறப்பாக பதிவு செய்துள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் திரையில் மிரட்டலாக அமைந்துள்ளன.தமனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. குறிப்பாக ‘சுலோச்சனா’ பாடல் தனி கவனம் பெறுகிறது.
ஆக்ஷன் காட்சிகளுக்கும், அதற்கேற்ற நடிகர்கள் தேர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜேசன் சஞ்சய். ஆனால், கதையின் முக்கியமான பகுதிகளில் காணப்படும் லாஜிக் மீறல்கள் மற்றும் சில இடங்களில் வேகம் குறையும் திரைக்கதை ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படத்தின் மீதான ஆர்வம் இன்னமும் அதிகரித்திருக்கும்.இருப்பினும் அறிமுக இயக்குனரின் முதல் திரை நுழைவுப்படம் என்பதால் அவரின் முயற்சியினை பாராட்டலாம்.
பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளும், சிறப்பான நடிகர்கள் தேர்வும் ‘சிக்மா’வுக்கு பலம். தேர்ச்சியான தொழில் நுட்ப கூட்டணியோடு இயக்குனர் கரம் கோர்த்து பயணித்து இருப்பது பெரிய ப்ளஸ் , ஆனாலும் திரைக்கதையின் வேகம் மற்றும் லாஜிக் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது .
மொத்தத்தில் அறிமுக இயக்குனரின் இந்த முதல் திரை முயற்சி, முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக ரசிகர்களிடம் சென்று சேரும்.
