வயது வித்தியாசத்தை கடந்து மலரும் காதல்… அதை எதிர்கொள்ளும் சமூகத்தின் பார்வை… இந்த இரண்டையும் மையமாக வைத்து உருவாகியுள்ள அழகான காதல் கதையாக வெளியாகியுள்ளது நிவின் பாலி – மமிதா பைஜூ இணையும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம்.

கிட்டார் கலைஞராக இருக்கும் ஆஷ்லி (மமிதா பைஜூ), தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் புதிய பகுதிக்குக் குடிவருகிறாள்.அங்கு புதிய சூழலில், அருகில் இருக்கும் வீட்டைச் சேர்ந்த ஜஸ்டின் (நிவின் பாலி) என்பவரை ஆஷ்லி பார்க்கிறாள். முப்பது வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல் வாழும் ஜஸ்டின், சொந்தமாக கேட்டரிங் தொழில் நடத்திவருகிறார் அவருடன் அவரது , தம்பி ஜோயலும் (சங்கீத் பிரதாப்) வசித்து வருகிறார். கடந்த காலத்தில் நேர்ந்த ஒரு துயரமான சம்பவத்திற்குப் பிறகு, சுற்றியுள்ள அனைவருக்கும் உதவும் உள்ளம் கொண்டவராக உள்ள அவரும் ஆஷ்லியும்
நட்பாக பழக, பின் அது காதலாக உருவெடுக்கிறது. ஆஷ்லி தன் அன்பை வெளிப்படுத்தும்போது, தனது வயது, ஊராரின் பேச்சு மற்றும் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஜஸ்டின் ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுத்து ஒதுங்கி விலகினாலும், அவளது உண்மையான அன்பைப் புரிந்து கொண்டு அதை ஏற்றுக்கொள்கிறார் .அதற்கு பிறகு நடந்தவை என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்க கூடிய நிவின்பாலி இயல்பான, யதார்த்தமான நடிப்பை படம் முழுவதும் நிறைவாக வெளிப்படுத்தி இருக்கிறார் கதாபாத்திரத்தின் வயதுக்கேற்ற உணர்வுகளையும் இளம் நாயகியின் காதலை ஏற்க முடியாமல் தவிக்கும் சந்தர்ப்பங்களிலும் சிறப்பாக தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளார் கதையின் நாயகியாக ஆஷ்லி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மமீதா பைஜு சமகால கல்லூரி இளம் பெண்ணின் எண்ணங்களை திரையில் பதிவு செய்யக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்
மேலும் இவர்களுடன் ,நிவின் பாலியின் தம்பியாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா, ஷமீர் கான், மீனாட்சி ரவீந்திரன், போன்ற பிற நடிகர்களும், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை திரையில் நன்கு பதிவு செய்துள்ளார்கள் .
நேர்த்தியான கோணங்கள் ,அழகான ஒளி அமைப்புகள் இவைகளைக் கொண்டு நிறைவான காட்சி பதிவுகளை வழங்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு ,அதேபோல இந்த படத்திற்கான இசையினை வழங்கியிருக்கும் விஷ்ணு விஜய்,இனிமையான பாடல்களை படத்தில் இடம்பெற வைத்துள்ளார். பின்னணியில் இசையும், கதையில் இடம் பெறும் கதை மாந்தர்களின் உணர்வுகளை ,அவர்களது உள்ளத்தின் பிரதிபலிப்பாய் திரையில் மிளிரும் வண்ணம் நன்கு உருவாக்கப்பட்டுள்ளது
படத்தில்,தொய்வின்றி நகரும் வகையில் காட்சிகளை அழகாக ஒருங்கிணைத்து தொகுப்பாக்கி உள்ளார் படத்தொகுப்பாளர் ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்
சமூகத்தில் இயல்பாக நடமாடும் கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையேயான நட்பு ,காதல் அதை சமூகம் பார்க்கும் பார்வை இவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுத்துக் கொண்ட கதை களத்திற்கு ஏற்ப ,பொருத்தமான கதாபாத்திரங்களை அதில் நடிக்க வைத்து நேர்த்தியான தொழில்நுட்ப கூட்டணியுடன் நிறைவான படத்தை இயக்குனர் கிரிஷ்.ஏ.டி, திரைமொழியில் தந்திருக்கிறார்.
மொத்தத்தில், இயல்பான கதைக்களம், அழகான காதல், சிறப்பான நடிப்பு மற்றும் நேர்த்தியான திரைமொழியுடன் மனதை கவரும் ஒரு காதல் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.
