காதல் என்றாலே கனவு, கல்யாணம் என்றாலே சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், “கல்யாணம் முடிந்ததும் மனைவி வீட்டுக்குப் போய் வாழ வேண்டிய கணவன்!” என்ற வித்தியாசமான சூழலை மையமாக வைத்து கலகலப்பாக கதை சொல்ல வருகிறது ‘பியார் பிரேமா கல்யாணம்’.

துபாயில் நல்ல வேலையில் இருக்கும் இளன், தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு சென்னைக்கு வருகிறார். அங்கு பிரபல சமூக வலைதள இன்ஃப்ளூயன்சரான சான்வி மேக்னாவை சந்திக்கிறார். சந்திப்பு காதலாக மாற, இருவரும் திருமணமும் செய்து கொள்கிறார்கள். ஆனால் திருமணத்திற்குப் பிறகுதான் பிரச்சனை ஆரம்பமாகிறது.“நான் எதற்காக என் வீட்டை விட்டுவிட்டு வர வேண்டும்?” என்று சான்வி கேட்க, மனைவி வீட்டுக்குச் சென்று வாழ வேண்டிய சூழ்நிலைக்கு இளன் தள்ளப்படுகிறார். அதன் பிறகு மனைவி வீட்டில் வசிக்கும் கணவனாக அவர் எதிர்கொள்ளும் சங்கடங்கள், குடும்ப உறுப்பினர்களுடனான உரசல்கள், கணவன்–மனைவி இடையேயான புரிதல், சிக்கல்கள் என திருமண வாழ்க்கையின் பல்வேறு பக்கங்களை காமெடி கலந்து நகர்த்துகிறது படம்.

‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கிய இளன், இந்தப் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியிருக்கிறார். இயக்குநராக கதை சொல்லி பழக்கப்பட்டவர், நடிகராக எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு, கதாபாத்திரத்துக்கேற்ற தோற்றம் மற்றும் இயல்பான உடல்மொழி மூலம் திருப்திகரமான பதிலை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போகும் அவரது நடிப்பு படத்திற்கு பலம்.
சான்வி மேக்னா, பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் அன்பு, பாசம், காதல் மற்றும் முற்போக்கான சிந்தனைகள் கொண்ட பெண்ணாக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக, திருமணத்திற்குப் பிறகு பெண்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் குறித்த பார்வையை அவரது கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது.
ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரின் அனுபவமான நடிப்பு அவர்களது கதாபாத்திரங்களுக்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது. மற்றும் யோகி பாபு, இளங்கோ குமரவேல், செந்தில், கீதா கைலாசம் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நிறைவான நடிப்பினை வழங்கியுள்ளார்கள் .

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளன. காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதையின் மனநிலைக்கு ஏற்ற வகையில் பின்னணி இசை பயணிக்கிறது. ஒளிப்பதிவாளர் தினேஷ் கே பாபு, நேர்த்தியான ஒளியமைப்பு மற்றும் கேமரா கோணங்கள் மூலம் படத்தின் காட்சிகளுக்கு அழகு சேர்த்திருக்கிறார்.
காதல் கதையை தாண்டி திருமணத்திற்குப் பிறகு ஆணும் பெண்ணும் எதிர்கொள்ளும் மனநிலை, குடும்ப உறவுகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் சமகால வாழ்க்கைமுறையின் மாற்றங்களை காமெடி கலந்த எளிய அணுகுமுறையில் பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.
மொத்தத்தில், காதலின் கனவுலகத்தை தாண்டி கல்யாணத்துக்குப் பிறகு தொடங்கும் நிஜ வாழ்க்கையை நகைச்சுவையுடன் பேசும் முயற்சிதான் ‘பியார் பிரேமா கல்யாணம்’.
