காதலுக்கு சம்மதம் தெரிவிக்கும் முன்போ அல்லது காதல் வசப்பட்ட பிறகோ காதலி, காதலனுக்கு சில கண்டிஷன்கள் போடுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் ,இப்படியும் ஒரு கண்டிஷனா? என ஆச்சரியப்படும் அளவிற்கு“மாலை 6 மணிக்கு மேல் என்னை சந்திக்கக்கூடாது… எனும் காதலியின் இந்த ஒரு கண்டிஷன், ராமின் காதல் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றினால் என்ன ஆகும்?அந்த ஒரே கேள்வியைச் சுற்றி காதல், காமெடி, கலாட்டா, குடும்பம் என பொழுதுபோக்கு அம்சங்களை கலந்து கொடுத்திருக்கிறது ‘ராம் அண்ட் லீலா’.

திருமண வயதை கடந்தும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் ஏக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ராம், ஒரு ரெயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் காதல் மலர்கிறது. ஆனால் அந்த காதலுக்கு வர்திகா போடும் ஒரே நிபந்தனை — “மாலை 6 மணிக்கு மேல் என்னை சந்திக்கக்கூடாது… நான் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன்” என்பதுதான்.வர்திகாவின் அழகிலும் காதலிலும் மயங்கிய ராம், ஆரம்பத்தில் இந்த கண்டிஷனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதுவே அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது. காதலியை மாலை 6 மணிக்கு பிறகு சந்திக்க முடியாததற்கான காரணம் என்ன? வீட்டை விட்டு அவர் வெளியே வராததன் பின்னணி என்ன? என்ற கேள்விகள் ராமை மட்டுமல்ல, ரசிகர்களையும் ரகசியத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன.
ஒருபக்கம் காதல்… மறுபக்கம் காதலியின் வித்தியாசமான கண்டிஷன்… இதற்கிடையில் உருவாகும் பிரச்சனைகள் என படம் நகர்கிறது. இறுதியில் வர்திகாவின் ‘6 மணி ரகசியம்’ என்ன என்பது தெரியவரும் போது, அதுவரை படம் கட்டியெழுப்பிய கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது. அந்த உண்மையை தெரிந்த பிறகும் ராம் வர்திகாவை காதலித்தாரா? அவரையே திருமணம் செய்து கொண்டாரா? என்பதே மீதிக்கதை.
திருமணத்திற்காக ஏங்கும் இளைஞராக ராம் என்னும் கதாபாத்திரத்தில் ரியோ தனது வழக்கமான பாணியில் இருந்து சற்று விலகி, காமெடி கலந்த நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலுக்காக ஏங்குவது, காதல் கிடைத்ததும் சிக்கலில் மாட்டிக்கொள்வது, அந்த சிக்கலின் பின்னணியை கண்டுபிடிக்க முயல்வது என பல்வேறு உணர்வுகளை சரியான அளவில் வெளிப்படுத்தியிருப்பது .அவரது நடிப்பிற்கு வலுவினை சேர்த்துள்ளது

நாயகியாக அறிமுகமாகியிருக்கும் வர்திகா, அழகான தோற்றத்துடன் மட்டுமல்லாமல், நடிப்பிலும் ரசிக்க வைத்துள்ளார் ,மேலும் சேத்தன், மாளவிகா அவினாஷ், தாஃபியா அபு, முனீஷ்காந்த், பாலாஜி தியாகராஜன் தயாளன், தீபா வெங்கட், மாகாபா, காத்தாடி ராமமூர்த்தி என அனுபவம் வாய்ந்த நடிகர்களும், இளம் நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை இயல்பாக உள்வாங்கி நடித்துள்ளனர். இவர்களின் கதாபாத்திரங்கள் படத்தின் காதல் கதையோடு, குடும்பம் மற்றும் காமெடி பகுதிகளையும் வலுப்படுத்துகின்றன.
மல்லிகார்ஜுனின் ஒளிப்பதிவு, கதையின் தன்மைக்கு ஏற்ற வகையில் காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகளிலும், கதையின் முக்கிய தருணங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள கேமரா கோணங்களும் ,ஒளி அமைப்புகளும் ரசிக்க வைக்கின்றன.
அன்கிட் மேனனின் இசையில் பாடல்கள், இன்றைய இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. காதல் மற்றும் கலாட்டா நிறைந்த காட்சிகளுக்கு அவரது பின்னணி இசை கூடுதல் உற்சாகத்தை கொடுக்கிறது.
காதல் கதைக்குள் ஒரு வித்தியாசமான ‘கண்டிஷனை’ வைத்து, அதன் பின்னணியில் இருக்கும் ரகசியத்தை சுற்றி திரைக்கதையை நகர்த்தியிருக்கும் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன், இளம் தலைமுறையை கவரும் வகையில் காமெடி, காதல், குடும்பம், கலாட்டா என பல பொழுதுபோக்கு அம்சங்களை சரியான கலவையில் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘ராம் அண்ட் லீலா’ — காதலுக்கு கண்டிஷன் போட்டாலும், அந்த கண்டிஷனுக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு ஜாலியான காதல் கலாட்டா.
