“திருமணம் வேண்டாம்… குழந்தை மட்டும் போதும்!” – என்ற முடிவில் இருக்கும் ஒரு முன்னணி தொழிலதிபரின் வாழ்க்கைக்குள், எதிர்பாராத விதமாக ஒரு இளம் பெண்ணின் காதல் நுழைந்தால் என்ன நடக்கும்?அதிலும், அந்தக் காதலுக்கு நடுவில் வயது வித்தியாசம், தாயின் ஆசை, குழந்தையின் பாசம், குடும்ப வாரிசு என பல உணர்வுகள் மோதினால்?இந்தக் கேள்விகளுக்கு அழகான குடும்பப் பின்னணியில் பதில் சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது ‘விஸ்வநாத் & சன்ஸ்’..
முன்னணி தொழிலதிபராகவும் துப்பாக்கி சுடும் வீரராகவும் இருக்கும் சூர்யாவுக்கு திருமணத்தின் மீது பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் அவரது தாயான ராதிகாவுக்கோ, மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து, குடும்பத்தில் ஒரு வாரிசைப் பார்க்க வேண்டும் என்பதே மிகப்பெரிய ஆசை.திருமணத்தைத் தவிர்க்கும் சூர்யா, தாயின் ஆசைக்காகவும் குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என்பதற்காகவும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்.ஆனால் எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தைக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில், குழந்தையின் தாயும் உடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.இதனால் அமெரிக்காவில் இருக்கும் வாடகைத் தாயான மமிதா பைஜுவை சூர்யா தேடிச் செல்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று சென்னை வரும் மமிதா, குழந்தையுடன் நெருக்கமாகிறார்.குழந்தையின் மீது உருவாகும் பாசம், நாளடைவில் சூர்யா மீதும் காதலாக மாறுகிறது.ஆனால், வயது வித்தியாசத்தை காரணமாய் கூறி மமிதாவின் காதலை சூர்யா ஏற்க மறுக்கிறார். திருமணம் செய்து கொள்ளவும் அவர் மறுத்துவிடுகிறார்.இறுதியில் மமிதாவின் காதல் வென்றதா? சூர்யாவின் மனம் மாறியதா? இதற்கான பதில்தான் படத்தின் மீதிக்கதை.
சூர்யா – கதாபாத்திரத்துக்குள் இன்னொரு பரிமாணம்!
படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, தனது நடிப்பில் புதுமையை வெளிப்படுத்தி வரும் சூர்யா, இந்தப் படத்திலும் தொழிலதிபர் கதாபாத்திரத்தை இயல்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.தாயின் மீது இருக்கும் பாசம், திருமணத்தின் மீதான தயக்கம், தன்னைவிட மிகவும் இளைய பெண்ணின் காதலை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை என பல்வேறு உணர்வுகளை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்துகிறார்.
மமிதா பைஜூ – மனதை கவரும் நடிப்பு!
இந்தப் படத்தில் மமிதா பைஜூவின் கதாபாத்திரம் அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமையக்கூடும்.துறுதுறுப்பான இளம் பெண்ணாகவும், குழந்தையின் மீது உண்மையான பாசம் கொண்டவராகவும், சூர்யா மீது காதல் கொள்ளும் பெண்ணாகவும் தனது நடிப்பில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ராதிகா – அனுபவம் பேசும் நடிப்பு!
சூர்யாவின் தாயாக நடித்திருக்கும் ராதிகா, படம் முழுவதும் தனது அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.“எப்படியாவது என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும்” என்ற தாயின் ஆசை, அதற்காக அவர் செய்யும் முயற்சிகள் என ராதிகாவின் நடிப்பு இயல்பாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது.
மேலும் ரவீனா டாண்டன், ராஜீவ் மேனன், சுனில் ரெட்டி உள்ளிட்டவர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இயக்கம் – இயல்பான கதைக்குள் அழகான உணர்வுகள்!
வலுவான கதாபாத்திரங்கள், குடும்ப உறவுகள், காதல், வயது வித்தியாசம், குழந்தையின் பாசம் என பல உணர்வுகளை ஒன்றாக இணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
கதையின் மையக்கருவை மட்டும் நம்பாமல், கதாபாத்திரங்களின் மனநிலைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்தின் பலம்.
இசை & ஒளிப்பதிவு
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கேட்பதற்கும், திரையில் பார்ப்பதற்கும் இனிமையாக அமைந்துள்ளன.குறிப்பாக, கதாபாத்திரங்களின் மன உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் உணர்ச்சியை சேர்க்கிறது.நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு கதையின் அழகையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் அழகான காட்சிகளாக மாற்றியுள்ளது.
இந்த படம் காதலை மட்டும் பேசாமல்… குடும்பத்தின் மீது இருக்கும் பாசத்தையும், ஒரு குழந்தை உருவாக்கும் உறவுகளையும் சிறப்பாக பேசுகிறது .பெரிய ஆக்ஷன், பரபரப்பான திருப்பங்கள் என்பதைக் காட்டிலும் குடும்ப உணர்வுகள், காதல், நகைச்சுவை, உறவுகளின் அழகு ஆகியவற்றை மையமாக வைத்து நகரும் படம் என்பதால் மொத்தத்தில், ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என அனைவருடனும் சேர்த்து பார்த்து ரசிக்கக்கூடிய படம் .
