மூன்றாவது தேசிய விருதால் மீண்டும் இந்திய இசையுலகின் கவனத்தை ஈர்த்த ஜி.வி. பிரகாஷ் குமார்… அந்த மகிழ்ச்சியை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார் பின்னணி பாடகர் வேல்முருகன்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட 71-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜி.வி. பிரகாஷ் குமார் மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். இந்த பெருமைக்காக அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், பின்னணி பாடகர் வேல்முருகன், ஜி.வி. பிரகாஷ் குமாரை நேரில் சந்தித்து தனது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினார். புத்தம் புதிய நாணயங்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காசு மாலையை அணிவித்து அவரை கவுரவித்ததுடன், சபரிமலை ஐயப்பன் கோவிலின் புனித பிரசாதத்தையும் வழங்கி மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த சந்திப்பு மிகவும் அன்பும், பாசமும் நிறைந்த தருணமாக அமைந்தது. தேசிய விருது வெற்றியை கொண்டாடிய இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தனும் உடன் இருந்து ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இந்த மூன்றாவது தேசிய விருது வெற்றி, தமிழ் திரையிசைக்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்திருப்பதாக திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.
