Friday, July 3

‘கட்டா குஸ்தி 2’- திரைப்பட விமர்சனம்

முதல் பாகத்தின் உணர்வுகளை தொடர்ந்தபடி, இந்த முறை கணவன்-மனைவி உறவு, பெண்களின் கனவு, குடும்ப பொறுப்பு ஆகியவற்றை அழுத்தமாக பேசுகிறது , ‘கட்டா குஸ்தி 2’

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக நகரும் கதையில், மல்யுத்தத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஐஸ்வர்யா லட்சுமியின் லட்சியத்துக்கு உறுதியான துணையாக உடன் நிற்கிறார் அவரது கணவர் விஷ்ணு விஷால். குடும்பத்திற்காக “ஹவுஸ் ஹஸ்பண்ட்” ஆக மாறி, சமையல் முதல் குழந்தை பராமரிப்பு வரை அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு, மனைவியின் கனவை நனவாக்க முழு ஆதரவு தருகிறார் .தேசிய அளவிலான போட்டிக்காக ஐஸ்வர்யா லட்சுமி தயாராகும் வேளையில், அவரது வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத பயிற்சியாளர் சில சூழ்ச்சிகளை அரங்கேற்றுகிறார். அதன் விளைவாக விஷ்ணு விஷால் எதிர்பாராத பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, கணவன்-மனைவிக்குள் நம்பிக்கை சிதைந்து, உறவு விவாகரத்து வரை செல்லும் நிலை உருவாகிறது.இந்தப் பிரச்சனைகளை அவர்கள் எப்படிக் கடக்கிறார்கள்? மீண்டும் ஒன்றிணைகிறார்களா? தேசிய அளவிலான மல்யுத்த மேடையை ஐஸ்வர்யா அடைகிறாரா? என்பதற்கான பதிலே மீதிக்கதை.

விஷ்ணு விஷால், வழக்கமான ஹீரோ இமேஜைத் தாண்டி, மனைவியின் திறமையினை மதிப்பதோடு, அவரது ஒவ்வொரு வெற்றிக்கும் பக்கபலமாக இருக்கும் சிறந்த கணவராக பெண்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். வீட்டினை பராமரிப்பதோடு , குழந்தையினை பொறுப்பாக வளர்ப்பது , மனைவியின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக நிற்பது என நல்ல ,கணவனாக, நேசமான தந்தையாக தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமான நடிப்பை படம் முழுவதும் விஷ்ணு விஷால் நிறைவாக வெளிப்படுத்தியுள்ளார் .

ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் தன்னம்பிக்கையும் திறமையும் மிக்க வீராங்கனையாக நன்கு நடி த்துள்ளார். போராட்டமும், உணர்ச்சிகளும் கலந்த அவரது கதாபாத்திரம் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

குழந்தை நட்சத்திரம் சாரா தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். மேலும் கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், ரம்யா கிருஷ்ணன், லிஸி ஆண்டனி, யோகி பாபு, கருணாகரன் மற்றும் மோக்‌ஷா உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் ,கேமரா கோணங்களையும், ஒளி அமைப்புகளையும் நன்கு அமைத்து சிறப்பான முறையில் பட பதிவு செய்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இனிமையாக உள்ளன, பின்னணி இசை காட்சிகளுக்கு பாந்தமாகவும் ,.கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு நெருக்கமாகவும் படம் முழுவதும் நன்றாக அமைந்திருந்தது ஃபேமிலி சென்டிமென்ட், நகைச்சுவை ,கணவன் மனைவி உறவுக்கு இடையேயான புரிதல் போன்ற விஷயங்களை படம் முழுவதும் காட்சி வடிவில் சிறப்பான முறையில் திரை மொழியில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு.

மொத்தத்தில், ‘கட்டா குஸ்தி 2’ வெறும் விளையாட்டு திரைப்படம் அல்ல… குடும்ப உறவுகளின் வலிமையையும், பெண்களின் கனவுகளுக்குப் பின்னால் நிற்கும் ஆண்களின் அன்பையும் கொண்டாடும் மனம் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெய்னர். குடும்பத்துடன் சேர்ந்து ரசிக்க வேண்டிய வெற்றிப் போட்டி இது!

Spread the love